உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை

0
176

உலகத் தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படுகிறது. ஒரு வருடத்தின் கருத்தாக Exclusive Breast feeding – The gold standard Safe, Sound, Sustainable என்று அறிவித்திருக்கிறது, இந்தியத் தாய்ப்பால் ஊக்குவிப்புக் கூட்டமைப்பு (BPNI – Breast feeding Promotion Network of India).

தாய்ப்பால் கொடுக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்

அன்பு நிறைந்த உணவு

தன் வயிற்றில் பிறந்த, தனது உயிரின் தனது உணர்வுகளின் உருவகமான தன் குழந்தைக்கு, தாய் தன்னிடம் சுரக்கும் அமுதமான தாய்ப்பாலை அளித்து உயிர் ஊட்டுவது, இயற்கையின் ஓர் அற்புதம்!

தாய் தன் குழந்தையின் வயிற்றுக்கு மட்டுமா உணவு ஊட்டுகிறாள்? உடலோடு அணைத்து, குழந்தையைக் கைகளால் ஆரத்தழுவி, கன்னத்தோடு கன்னம் இழைத்து, தலையை வருடி, குழந்தையின் கண்களில் தன்னையே கண்டு தனது பாச மொழியால் குழந்தையைக் கொஞ்சும்போது, குழந்தையின் உணர்வுகளுக்கும் திகட்டும் அளவுக்கு உணவு அளிக்கிறாள்.

TALCS என்ற அடைமொழியிட்டு குறிப்பிடும் மென்மை (Tender), அன்பு (Affection), பாசம் (Love), அரவணைப்பு (Care), பாதுகாப்பு (Security) என்பவை, வளரும் குழந்தையின் நல்ல மனவளர்ச்சிக்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. தன் குடும்பத்தினர், தன் மக்கள், தன் நாடு என்ற பாச பந்தத்துடன், மனித நேயத்துடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் குழந்தைகள் வளர்கிறது.

தீவிரவாதமும் வன்முறையும் வானமே எல்லையாகப் பெருகி வரும் இக்காலகட்டத்தில், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

குழந்தைக்குத் தேவையான மாவுச் சத்து, புரதம், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்ற நுண்ணூட்டச் சத்துகள் ஆகிய எல்லாவித உயிர்ச்சத்துகளும் தேவையான அளவில் குழந்தைக்குக் கிடைக்கிறது. முதிர்ச்சி அடையாத சிறு குழந்தையின் செரிமானப் பாதை (Digestive system) எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் இந்தச் சத்துகள் தாய்ப்பாலில் இருக்கின்றன. குழந்தைக்குத் தேவையான தண்ணீர்கூட தாய்ப்பாலில் இருக்கிறது. ஆறு மாதம் வரை, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்குத் தண்ணீர்கூட தேவையில்லை. கோடைகாலத்திலும்தான்.

தாய்ப்பால்

தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்றுகள் வருவதில்லை. வயிற்றுப்போக்கு, சீதபேதி, சளி நோய்கள், சிரங்கு, காதில் சீழ் போன்ற பல நோய்களுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தி தாய்ப்பாலில் இருக்கிறது. பாட்டிலில் பால் தரும்போது பல நோய்க் கிருமிகள் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. அதனால்தான், தாய்ப்பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து என்று தாய்ப்பால் போற்றப்படுகிறது.

தாய்ப்பால், குழந்தைக்கு முதல் உணவு
தாய்ப்பால், குழந்தைக்கு முதல் உணர்வு
தாய்ப்பால், குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து
தாய்ப்பால், குழந்தைக்கு முதல் சத்து மருந்து
தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுவதில்லை. குழந்தைக்கு தாடை எலும்புகள், பற்கள், நன்கு வளர தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை, வயது வந்த பிறகும் பயனடைகிறது. தற்போது மனித சமுதாயத்துக்குப் பெரும் சவாலாக விளங்கும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கு மிகவும் குறைவு.

சில மணி நேரங்கள் தாய்ப்பால் தராமல் இருந்தால், ‘கட்டுப்பால் அதைத் தரக்கூடாது! குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்’ என்ற ஒரு தவறான கருத்து தாய்மார்களிடையே நிலவுகிறது. இது அறிவியல்ரீதியாகத் தவறு. கட்டுப்பால் என்பது இல்லை. வேலைக்குப் போகும்வரை தாய்ப்பால் தர வேண்டும். வேலையிலிருந்து திரும்பி வந்த பிறகு மார்பகத்தைச் சுத்தம் செய்துகொண்டு, உடைகளை மாற்றிக்கொண்டு தாய்ப்பால் தரலாம். வேலைக்குக் கிளம்பும் முன் ஒரு சுத்தமான மூடியுடன் கூடிய பாத்திரத்தில் தாய்ப்பாலைக் கறந்து எடுத்துவைத்துவிடலாம். வெயில்படாத ஒரு இடத்தில் வைத்திருந்து 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். குளிர் சாதனப்பெட்டி இருந்தால் 24 மணிநேரம்கூட வைத்திருந்து கொடுக்கலாம். தாய்ப்பால் வங்கியின் அடிப்படையும் இதுதான்.

தாய்பால் கொடுக்கும் முறை

குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரப்பட வேண்டும்!
சிசேரியன் பிரசவம் என்றால், பிறந்த 4 மணி நேரத்துக்குள் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.
6 மாதத்துக்குப் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து தர வேண்டும். 2 வருடம் தாய்ப்பால் தருவது குழந்தைக்கு மிகவும் நல்லது.
தாய்ப்பால் அளிக்கும் தாய், தினமும் குளித்து சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்.
தாய்ப்பால் கொடுப்பதற்காக விசேஷமான உணவுகள் எதுவும் தேவையில்லை.
தாய்க்கு தினமும் சுமார் 500 கலோரிகள் மற்றும் 15 கிராம் புரதம் கூடுதலாகத் தேவை, அவ்வளவுதான்.
2 டம்பர் பால், ஒரு முட்டை, ஒரு கரண்டி பச்சைக் காய்கறிகள் போதும்.
தாய்க்கும் சேய்க்கும் உடல் நலம் பாதித்தாலும் தாய்ப்பால் தர வேண்டும். எந்த நோய்க்கும் பயந்து தாய்ப்பாலை நிறுத்தத் தேவையில்லை.
நன்மைகள்
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்குப் புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். இதுவும் ஆராய்ச்சி முடிவுதான். நல்ல அறிவுள்ள மாணவனாகத் திகழ தாய்ப்பால் மிகவும் அவசியம்.

தாய்ப்பால் தருவதால் பெண்களுக்கும் நன்மை உண்டு.
மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குக் குறைவு.
தாயின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் எடை சீராகப் பராமரிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அந்தச் சமயத்தில் தாய் கருத்தரிப்பதில்லை.
இதை ஒரு தாற்காலிகக் கருத்தடை முறை என்றும் சொல்லலாம்.

தன் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்ப்பேன் என்று, கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து ஒரு தாய் உறுதி எடுத்துக்கொண்டால், நிச்சயமாக அந்தத் தாயால் குழந்தையைத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து நன்றாக வளர்க்க முடியும். தாய்ப்பால் குடிக்காத குழந்தை உரிமை மறுக்கப்பட்ட குழந்தை என்றும், ஏமாற்றப்பட்ட குழந்தை என்றும் சமூக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தாய்ப்பால் மட்டும் அளிப்பது பாதுகாப்பானது, ஆரோக்கியமானது, ஆதாரமானது!

தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோயை தடுக்கலாம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி.

தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன்மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம்.

தாய்ப்பாலைப் பெருக்கும் உணவுமுறை
வெந்தயம்

குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) வெளியிட்ட பாதுகாப்பான உணவுப் பட்டியலில் வெந்தயமும் இடம்பெற்றுள்ளது.

பூண்டு

பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)

இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.
பப்பாளிக் காய்

பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக வேகவைத்துச் சாப்பிட்டுவரப் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, பப்பாளிக் காயைச் சாப்பிட்டவர்களின் தாய்ப்பாலில் அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன சமுதாயம் மறந்த கைக்குத்தல் அரிசியை, மீண்டும் சமையல் அறைக்குள் வரவேற்பது அவசியம். ஏனெனில் ‘பழுப்பு அரிசியில்’ உள்ள செரடோனின் பால் சுரப்பைத் தூண்டும் புரோலாக்டின் ஹார்மோனைத் தூண்டுகிறது.
ஆமணக்கு இலைகள்

ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

இலக்கியங்களில் தாய்ப்பால் பற்றிய கருத்து

தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது என்று இன்றைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை அன்றே, ‘வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும் நல்குரவு சேரபட்டார்’ என வலியுறுத்தியது ‘திரிகடுகம்’ நூல். தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி, ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைப்போல’ என நற்றிணையில் தமிழர்கள் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பழங்கால இலக்கியம் தொடங்கி, இன்றைய இணைய யுகம்வரை தாய்ப்பாலின் அத்தியாவசியம் பற்றி பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உணவில் கவனம்

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். தாய் உட்கொள்ளும் உணவின் குணங்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுப் பொருட்கள், அதிகக் காரமான மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும். சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

தாய்ப்பாலின் மகத்துவம்

அதேநேரம், எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுகள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்து கிடப்பது இயற்கையின் வரம்.

பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள். ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும்.
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க, கற்பூரவல்லி இலைகளை வேக வைத்துச் சாப்பிடுவது இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய வழக்கம்.
இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை, பேரீச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
அரைக்கீரை, முருங்கைக்கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
பால் பொருட்களைச் சாப்பிடுவதுடன் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து அருந்தலாம்.
பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு.
பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.
அதேபோல நீரில் ஊற வைத்த வேர்க்கடலையும், முளைகட்டிய தானிய வகைகளும், சிறுதானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here