magizhchifm2020@gmail.com சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வருக்கு கோல்டன் குளோபல் விருது கவிதாயினி புவனா சிவம் கவிதைகள் அக்டோபர் 15 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை சங்ககிரி ஸ்ரீ வித்யாசாகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்! நவராத்திரி பெண் சக்தியின் மகத்துவத்தைப் போற்றும் ஆன்மிகத் திருவிழா உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் ஆயிரமாயிரம் ஆய்வுக் குரல்களை ஆவணமாக்கும் ஆளுமை தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வருக்கு கோல்டன் குளோபல் விருது கவிதாயினி புவனா சிவம் கவிதைகள் அக்டோபர் 15 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை சங்ககிரி ஸ்ரீ வித்யாசாகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்! நவராத்திரி பெண் சக்தியின் மகத்துவத்தைப் போற்றும் ஆன்மிகத் திருவிழா உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் ஆயிரமாயிரம் ஆய்வுக் குரல்களை ஆவணமாக்கும் ஆளுமை
ஆன்மிகம்

சத்தியபிரமாணம் சிறப்பு மிக்க சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்

27 ஏப்ரல் 2025 Magizhchi FM 2,431 பார்வைகள்
சத்தியபிரமாணம் சிறப்பு மிக்க சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்

" நம்ம குலசாமிகள் " குலதெய்வங்களும் / குலதெய்வ வழிபாடு - திருநெல்வேலி சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்.

- முனைவர் ஜெ.மகேந்திரன், மூத்த ஊடகவியலாளர்.

முன்னுரை

தென்தமிழகத்தில் ஆன்மிகப் பன்மை, பல்வேறு கலாசாரங்கள் மற்றும் உள்ளூர் மரபுகளுடன் மிக ஆழமாக பிணைந்து உள்ளது. இங்குள்ள கிராமத்துத் தெய்வங்கள் இந்திய வரலாற்றின் அடிப்படைகளைப் பிரதிபலிக்கின்றன. அவற்றில் ஒன்றான சுடலைமாடசுவாமி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த கிராமத் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயில்களில்,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊரில் அமைந்துள்ள சுடலைமாடசுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றது.

மற்ற மாவட்டங்களை விட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகம் உள்ளது.

இந்த பகுதியில் அதிகமான சுடலைமாடசாமி கோவில்கள் இருந்தாலும் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் மிக புகழ்பெற்ற கோவிலாகும். இந்த பகுதிகளில் சுடலைமாடனை கண்கண்ட தெய்வமாக உயிர்காக்கும் தெய்வமாக வணங்குகின்றனர். கோவில் கொடை என்ற பெயரில் அடிக்கடி சுடலைமாடசுவாமிக்கு விழா எடுக்கின்றனர்.

இந்த சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகம் அந்த அளவு கண்கண்ட தெய்வமாக அனைவரையும் காத்து நிற்கிறார் சீவலப்பேரி சுடலை.

இந்த கோவிலில் செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம் செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோயில் தென்தமிழகத்தில் சுடலைமாடசுவாமி மீது நடக்கும் வழிபாட்டின் வரலாறு, குலதெய்வ வழிபாட்டின் நம்பிக்கைகள், சடங்குகள், சமூக அர்த்தம் , மற்றும் சிறப்புகள் ஆகியவற்றை விரிவாக விளக்க இந்த கட்டுரை மையமாகிறது.

1. குலதெய்வ வழிபாட்டின் வரலாற்று பின்னணி - அதன் முக்கியத்துவம்

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும். குல தெய்வம் தான் நமக்கு எளீதில்  அருளினை தரும். மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அவற்றை அலட்சியம் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது.

ஒருவரது வம்சாவளியில் வரும்  தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குல தெய்வத்தை எவர் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவரின் குடும்பம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு.  திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். என்ற ஐதீகம் நிலவுகின்றது.

குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது. என்ற முன்னோர்களால் சொல்லப்படுகின்றது.  குல தெய்வத்தின் பெருமையை தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறையாவது தம் குழந்தைகளையும் அழைத்துச் சென்று  குலதெய்வத்தின் அனுக்கிரகம், அருள், முன்னோர்களின் ஆசியை பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருகிறார்கள்.
இதில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக முக்கியமாக சுடலை சுடலைமாடசுவாமியின் வழிபாடு தமிழர்களின் பழங்கால திராவிட மரபுகளில் இருந்து தோன்றியது. சுடலைமாடசுவாமி கிராமங்கள், பல்வேறு சமூகங்களின் வாழ்வுடன் நெருங்கிய உறவாக இருந்து வருகிறது .

"சுடலை" என்றால் சுடுகாடு, அதாவது மடப்பக்கம், ஆனால் "மாடசாமி" என்பது சக்தி வாய்ந்த தெய்வத்தை குறிக்கிறது. இதனால்சுடலைமாடசுவாமி என்பது கிராம மக்களுக்குப் பாதுகாவலராகவும், தீய சக்திகளை துரத்துபவராகவும் மதிக்கப்படுகிறார். சுடலை மாடசாமி பற்றிய பல கதைகள் நம்பிக்கைகள் மாறுபட்டாலும், எல்லா கதைகளிலும் அவருக்கு ஒரே அடிப்படை விளக்கம் உள்ளது. மானுட உலகில் ஏற்பட்ட அநீதி காரணமாக தெய்வீக சக்தியாக மாறியவர் என்று நம்பப்படுகிறது. சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில், வரலாற்று சான்றுகளால் பழங்காலம் முதல் பொதுமக்கள் வழிபட்ட ஒரு முக்கிய ஆலயமாகவும் காவல் காக்கும் குலதெய்வமாகவும்,வாழிபாட்டின் புனிதத்தலமாகவும் திகழ்கிறது.

2.சுடலை மாடசுவாமி பற்றிய புராண கதை

சுடலை மாடசுவாமி பற்றிய சொல்லப்படும் புராண கதையில் ஆதி கயிலாயத்தில் கொலுவிருக்கும் சிவபெருமான், தினமும் உலக மக்களுக்கு படி அளக்கிறார். ஈசன் படி அளப்பதன் மீது சந்தேகம் கொண்ட பார்வதி, அவரை சோதனை செய்ய எண்ணினாள். அதற்காக ஒரு எறும்பை பிடித்து சிமில் கூண்டிற்குள் அடைத்தாள். சிவபெருமான் படி அளந்துவிட்டு வந்ததும், அவரிடம் ‘நீங்கள்ல்லா உயிர்களுக்கும் பட்டினி இல்லாமல் படி அளந்து விட்டீர்களா?’ என்று கேட்டாள் பார்வதி. அதற்கு சிவபெருமான் ‘ஆமாம்’ என்று கூறினார். அப்போது பார்வதி, சிமில் கூண்டிற்குள் அடைத்து வைத்து இருந்த எறும்பை பார்த்தார். அந்த எறும்பு ஒரு திணை அரிசியை தனது வாயில் கவ்விக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி வந்தது. உடனே பார்வதி, சிவபெருமானிடம் ‘சுவாமி! நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினாள்.

சிவபெருமானும் தவறை மன்னிப்பதாக கூறினார். அப்போது பார்வதி தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் ‘கயிலாயத்தில் உள்ள 32-வது தூணில், நீ சேலையின் முந்தானையை ஏந்தி தவம் செய்தால் உனக்கு குழந்தை கிடைக்கும்’ என்றார். பார்வதியும் அவ்வாறே செய்தார். அந்த தவத்தின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை கிடைத்தது. அந்த குழந்தைக்கு ‘சுடலைமாடன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் பார்வதி. சுடலை மாடன் சைவ கயிலாயத்தில் மாமிசத்தை கலந்தார். உடனே சிவபெருமான், சுடலைமாடனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்றும், பூலோகத்திற்கு வந்த சுடலைமாட சுவாமி பக்தர்களை காக்கும் காவல் தெய்வமாக வலம் வருகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த கதைகளை சுடலை மாடசுவாமிக்கு கோடை விழா கொண்டாடும் போது வில்லுப்பாட்டு கதையாக சொல்லும் வழக்கம் என்றும் தென் மாவட்டங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது .

3.சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் தல வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி என்ற கிராமம் . இங்கு தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகிய 3 நதிகளும் இணைகின்ற திருவேணி சங்கமம் என்ற இடம் உள்ளது. இதை ‘முக்கூடல்’ என்றும் அழைத்து வந்தனர். சீவலப்பேரி சுடலைமாடசுவாமி ஆலயம் மாசான கோனார் மலையாள நாட்டில் இருந்து பாண்டிய நாட்டிற்கு மாயாண்டி சுடலை வந்தார். அவர் பாண்டிய நாட்டின் முதலாவது வந்த மருந்த இடம் சீவலப்பேரி திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி கிராமம் பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த ஸ்ரீ வல்ல பாண்டியன் மக்களின் குடிநீருக்காக ஏரியை அமைத்தான். அவன் பெயரில் அந்த ஏரி ஸ்ரீ வல்ல பேறு என்று அழைக்கப்பட்டது ஸ்ரீவலப்பேரி ஆகி சீவலப்பேரி ஆனது இங்கு சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த மாசான கோனார் தன்னுடைய தந்தையின் கட்டளை ஏற்று ஆடு மேய்க்கச் சென்றார்.

அப்போது அங்கு சுடலைமாட சுவாமி சன்னியாசி வேடத்தில் வந்து சிறுவனிடம், தனக்கு பசியாக உள்ளது, தனது பசியை தீர்க்க ஒரு ஆட்டை காட்டி அதில் பால் கறந்து தரவேண்டும் என்று கேட்டார். உடனே சிறுவன் ‘அது ஒரு மலட்டு ஆடு’ என்றான். இருந்தாலும் சன்னியாசி தன்னிடம் இருந்த திருவோட்டை கொடுத்து, அதில் ஆட்டுப் பால் கறந்து தரக் கூறினார்.

சன்னியாசி சொல்வதைத் தட்ட மனமில்லாத சிறுவன், மலட்டு ஆடு மடுவின் கீழ் திருவோட்டை வைத்தான். மடுவில் இருந்து தானாக பால் சுரக்க ஆரம்பித்தது. பாலை அருந்தி விட்டு சுவாமி தன் தோற்றமான சுடலை வடிவில் காட்சி அளித்தார். இதைக் கண்டு சிறுவன், சுவாமியை வணங்கினான். சுவாமி சிறுவனிடம் ‘நீ என்னை கோவில் கட்டி வழிபடு. நான் உன் வம்சத்தையும், ஊர்மக்களையும் காத்து அருள்கிறேன்’ என்று கூறினார். அதற்கு அந்தச் சிறுவன் ‘நான் உன்னை கோவில் வைத்து வழிபட்டால், எனக்கு ஒரு வரம் தரவேண்டும்’ என்று கேட்டான். சுடலைமாடனும் ஒப்புக்கொண்டார்.

‘பிறக்கும் பிள்ளைக்கும்.. கறக்கும் கன்றுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் மண்டையில் பத்து பூசாமல் பாதுகாத்து கொடுக்கவேண்டும்’ என்றான். வரம் அளித்ததற்கு அடையாளமாக மாசானக்கோனாரின் நாக்கில் ‘அ’ என்ற அச்சாரத்தை சுடலைமாடசாமி எழுதினார்.

அதன்பின் சிறுவன் முறையான வழிபாட்டு முறைகளை கற்பதற்காக, சுந்தரமகாலிங்க சுவாமி அருளும் சதுரகிரி மலைக்கு சென்றான். அங்கு கோரக்க சித்தரின் சீடரான சுந்தரமூர்த்தி முனிவருக்கு சேவை செய்து சீடராக பணியாற்றினான். 12 ஆண்டுகள் தான் செய்த தவத்தை முடித்து காசிக்கு அந்த முனிவர் செல்லும்போது மாசானக்கோனாரிடம், ‘நீ உன் இடத்திற்குச் சென்று, உன் இறைவன் சுடலைக்கு பூஜை செய்வாயாக’ என்று கூறினார். மேலும் மாசானக்கோனாருக்கு ‘வாலகுரு’ என்ற பெயரையும் சூட்டினார்.

24 வயது இளைஞனாக மாசானக்கோனார் தனது ஊரான சீவலப்பேரிக்கு நீள சடைமுடியுடன் வந்தார். இதை கண்ட ஊர்மக்கள் அவரை ‘சன்னியாசி’ என்று அழைத்தனர். அன்று முதல் மாசானக்கோனார் என்ற அவருடைய பெயர் மருவி ‘வாலகுரு சன்னியாசி’ என்று விளங்கியது. முக்கூடலில் சுடலைமாடசாமி காட்சி அளித்த இடத்திற்கு வாலகுரு சன்னியாசி வந்தார். அந்த இடத்தில் சுடலைமாடசாமி, சுயம்புலிங்க சொரூபமாக காட்சி அளித்தார். அந்த இடத்தில் கோவில் கட்டி அதற்கு உரிய பூஜைகளை முறையாக செய்து வணங்கி வழிபட்டு வந்தார். இது 600 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது.

4.சுடலைமாடசுவாமி ஆலய அமைப்பு

சுடலைமாடசாமி, சுயம்புலிங்க சொரூபமாக காட்சி அளித்த இடத்தில் இன்னும் அந்த சுயம்பு லிங்கம், சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி சிலை உள்ள பீடத்திற்கு கீழ் இருக்கிறது. சுடலைமாடசாமிக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்ய சத்திவாக்கு பெற்ற வாலகுரு சன்னியாசிக்கும் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுடலைமாட சுவாமி எதிரே ஒரே கல்லில் புதிய சுவாமி சிலையும், முண்டசுவாமி சிலையும் உள்ளது. புதிய சுவாமி மேற்கு நோக்கியும், முண்டசுவாமி கிழக்கு நோக்கியும் உள்ளனர். முண்டசுவாமி முன்பாக ஆடு, கோழி, பன்றி பலியிடக்கூடிய பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது . இதில் கோவில் கொடைவிழா நடைபெறும் சித்திரை மாதம் முதல் நாள் ஏராளமான ஆடு, கோழி, பன்றிகள் பலியிடப்படும்.

5.சுடலைமாடசுவாமி கோவிலின் சிறப்புகள்

இந்தக் கோவிலில் சுடலைமாட சுவாமி, நான்கு கைகளுடன் காட்சி அளிக்கிறார். வலது கையில் சங்குடனும், இடதுகையில் அக்னியுடனும் அருள்கிறார். இதன் விளக்கம் சங்கு - ஆற்றல் சக்தி வாய்ந்தது. அக்னி - அழித்தல் சக்தி வாய்ந்தது. இந்த இரண்டும் கயிலாயத்தில் சிவபெருமான் சுடலைமாடசாமிக்கு கொடுத்த வரமாகும்.

சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் மிகவும் எளிய அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக கிராம தெய்வங்கள் பெரும்பாலான கோயில்களில் பிரம்மாண்டமான கோபுரங்கள் இல்லாமல் எளியதாகவே இருக்கும். இக்கோயிலின் கட்டமைப்பும் அப்படித்தான். கோயில் கற்பக க்ருஹம் அல்லது கருவறை மிகவும் எளிமையாக இருக்கிறது, அங்கு சுடலை மாடசாமியின் உருவம் வைக்கப்பட்டுள்ளது.

சுடலை மாடசாமி சடங்குகள் நடக்கும் பரப்புகள் பொதுவாக திறந்தவெளி அல்லது அரை மூடப்பட்ட இடங்களில் இருக்கும், இது அவரின் இயற்கையுடனான தொடர்பையும், கிராமத்திற்குப் பாதுகாவலரான அவருடைய பணியையும் குறிக்கிறது. கோவிலின் மையத்தில் சுடலை மாடசாமியின் சிற்பம் இருக்கும். இதை தவிர, கோயிலில் பேச்சியம்மன், பிரம்மசக்தி சிலை போன்ற கிராமத் தெய்வங்களின் சன்னதிகளும் இருக்கின்றன.அருகில் அரச மரத்தடியில் விநாயகருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது . பனைமரங்கள் வளர்ந்திருக்கும் அடர்சோலை, தாமிரபரணி தாழ்ந்தோடும் ஆற்றங்கரை அமைதி தழுவும் அற்புத சூழல் இவை யாவும் ஒரு சேர போன்ற முறுக்கு மீசை முகத்தோடு இந்தக் கோயிலில் மூலவர் சுடலை மாடன் அருள் பாலிக்கின்றார்.

6. வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள்

இந்தக் கோவில் தோன்றிய நாளில் இருந்து இதுவரை இருவேளை ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாள் இந்த கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்தக் கோவிலில் வழங்கப்படும் விபூதி, மயானக்கரை பகுதியான கழுவன்திறடு என்ற இடத்தில் இயற்கையாகவே உற்பத்தியாகிறது. அங்கிருந்து அந்த மண்ணை எடுத்து வந்து பக்தர்களுக்கு விபூதியாக வழங்குகின்றனர். அந்த மண் விபூதி அந்த இடத்தில் அள்ள அள்ள குறையாமல் விளைந்து கொண்டே இருக்கிறது. இந்த கோவிலில் செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம் செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.பொருள்கள் திருட்டு,களவு போன்ற சம்பவங்களுக்கு சத்தியபிரமாணம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. நினைத்த காரியம் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக மொட்டையிடுதல்,காதுகுத்து விழாக்களும் நடைபெறுகின்றன.

இதைப்போல வேண்டிய வரம் விரைவில் நடைபெறுமா அல்லது தாமதமாக நடக்குமா என்பதை வெள்ளைப்பூ ,சிகப்பு பூ போன்ற பூக்களை கட்டிப்பார்த்து பூ எடுக்கும் பழக்கமும் நடைமுறையில் இருந்து வருகிறது . இதில் வெள்ளைப்பூ கிடைத்தால் நினைத்தகாரியம் விரைவில் நடைபெறும் என்று அர்த்தம் .சிகப்பு பூ கிடைத்தால் கொஞ்சம் தாமதமாக நடக்கும் என்று அர்த்தம் என்று பக்தர்களால் நம்பப்படுகின்றது. தினமும் முக்கால பூஜை நடைபெறுகின்றது பூஜையின் போது, கோவில் பூசாரிகள் மீது சுவாமி அருள் வந்து , மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கவும், வழிகாட்டவும் செய்கிறார்கள்.

7.சுடலைமாடசுவாமிக்கு கொடைவிழா

சுடலைமாடசுவாமி கோவில் கொடைவிழாவில் நையாண்டி மேளம், வில்லிசை, கணியான்கூத்து ஆகியவை முக்கியபங்கு வகிக்கும். கணியான் தனது கையை கத்தியால் வெட்டி சுவாமிக்கு ரத்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி சுடுகாட்டிற்கு சென்று பிணத்தை உண்ணும் நிகழ்ச்சியும், சோற்றில் ஆடு, பன்றி ரத்தத்தை கலந்து வானத்தை நோக்கி விசுகின்ற திரளை பலி என்ற நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

எப்படிப்பட்ட வம்பு, வழக்கு,துன்பம்,துயரம் என்றாலும் சீவலப்பேரி மாடன் போன்ற துடியான தெய்வத்தை வணங்கினால் இடியென் தன் சக்தியை இறக்கி மக்களின் துயர் போக்குவார் சுடலை மாடன். தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சுடலைமாட சுவாமி கோவில்கள், இந்த கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கோவில் இல்லாத ஊரே கிடையாது.

8.சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் அமைவிடம்

சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இக் கோவிலுக்கு தமிழத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர் .

9. சமுதாய மற்றும் கலாச்சார முக்கியத்துவம்

சுடலைமாடசுவாமி வழிபாடு நிச்சயமாக ஒரு மதச் செயல்பாடு மட்டும் அல்ல; அது சமூகத்தையும் கலாச்சாரத்தையும் பாதிக்கும் முக்கிய ஆச்சாரமாகும். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் மக்கள் மதிக்கும் இந்த கோவில் சமுதாயத்தையும் மதிப்பையும் இணைக்கும் ஒரு மையமாக திகழ்கிறது.

பல்வேறு சாதிகளின் மக்கள் இக்கோயிலில் சேர்ந்து வழிபாடு நடத்துகிறார்கள். குலதெய்வம் என்பதால் சாதி வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கிறது. மக்களுக்கிடையில் உள்ள சகோதரத்துவத்தை வளர்க்கும் இந்த மத வழிபாடுகள் மக்கள் மனதில் ஒரே சமுதாயத்தை உருவாக்குகின்றன. அதுமட்டுமல்ல, சுடலை மாடசாமி கோவில் தென் தமிழக மக்கள் கலை மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாக்கும் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு விழாவிலும் இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற கலாச்சாரக் கலைகள் அரங்கேறும், இது இக்கோயிலின் முக்கியப்பணியை வெளிப்படுத்துகிறது.

10. நவீன காலத்தில் கோயிலின் முக்கியத்துவம்

நவீன காலத்தின் நகர்ப்புற வளர்ச்சியும், பரவலான புரவலிடுகைகள், ஆன்மிக மேம்பாடுகள் இருந்தாலும், சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் தனது அடிப்படை மகத்துவத்துடன் இன்று வரை செயல்பட்டு வருகிறது. அதன் வழிபாட்டு முறைகள் மற்றும் பழங்காலப் பண்பாடுகளை அவசியமாக இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோயில் பற்றிய ஆராய்ச்சிகளை ஆராய்ச்சி மாணவர்கள் செய்து வருகின்றன. பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து தோன்றிய பாரம்பரிய வழிபாட்டை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இதனால் கோயிலின் பழங்கால சடங்குகள் மக்களிடையே அதிக அளவில் கவனிக்கப்பட்டு வருகின்றன.

  முடிவுரை

சீவலப்பேரி சுடலைமாடசுவாமி, ஆன்மிகத்திலும் சமூகத்தில் ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் வழிபாட்டு முறைகள், சடங்குகள் மற்றும் சடங்குகள் பழங்கால இந்தியாவின் பக்தி வழிபாட்டை இன்றும் உயிர்ப்பித்திருக்கின்றன.சுடலை மாடசாமி, பக்தர்களுக்கு தெய்வம் மட்டும் அல்ல, அவர்களது தினசரி வாழ்வில் முக்கியமான பாதுகாவலர் ஆகவும், சமூக ரீதியாக ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறார். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்  சிறுதெய்வமாகவே காணப்படும். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்தி குலதெய்வமாய விளங்கும் சீவலப்பேரி சுடலைமாடசுவாமியை குடும்பத்துடன் சென்று பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...! நலமுடன் வாழ்வோம் ...!

- கட்டுரையாளர்

முனைவர்.ஜெ.மகேந்திரன் ,

மூத்த ஊடகவியலாளர் ,

8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE