காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்தகுடி" என்ற பெருமைக்குரிய நம் தமிழ் மொழியில் இலக்கணமும் இலக்கியமும் இரண்டரக் கலந்துள்ளன. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு, எழுத்துக்களைக் குறிப்பிட்ட வடிவங்களில் (பந்தம், ரதம், சக்கரம் போன்ற அமைப்புகளில்) ஓவிய வடிவில் அமைத்துப் பாடும் 'சித்திரக்கவி' மரபு தமிழின் மிக உச்சகட்ட இலக்கண வித்தகக் கலையாகும். காலப்போக்கில் எளிய கவிதைகள் வழக்கொழிந்து வராத நிலையில், மறைந்துபோன சித்திரக்கவி மரபுக்கு உயிர் கொடுத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சித்திரக்கவிகளைப் படைத்து சாதனை புரிந்துவரும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி ஆவார். அவரது வாழ்வியல் பின்னணி, கல்விச் சாதனைகள், சித்திரக்கவித் துறைக்கான பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பிறப்பும் குடும்பப் பின்னணியும்
சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி, 1968-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் நெய்வேலியில் பிறந்தார். இவரது தந்தை அ. பீர்முகமது ஒரு சிறந்த பாடகர் ஆவார். இவரின் பாட்டனாரான திருவையாறு சித்திரக்கவி, சந்தக்கவி, ஜோதிடக்கலா நிதி, சரபக்கவி எனப் போற்றப்பட்ட புகழ்பெற்ற புலவர் பி. வி. அப்துல்கபூர் சாஹிப் ஆவார். தமிழ்க் கலைகளும் இலக்கியமும் ததும்பும் குடும்பப் பின்னணியில் எட்டாவது மகளாகப் பிறந்த ரகமத் பீபிக்கு, இஸ்லாமியக் குடும்பத்தில் நிலவிய வழக்கமான சூழலால் ஆரம்பத்தில் முறையாகப் படிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும், தந்தையின் முழுமையான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் பிறகு முறைசார் கல்வி பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிறுவயது முதலே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், பள்ளிப் படிப்பைத் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக முடித்தார்.
கல்விச் சாதனைகளும் பன்முகத் திறமையும்
கல்வி மீதான பசியும் அறிவுத் தேடலும் ரகமத் பீபியை நாட்டின் பல்வேறு கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றன. தமது கல்வி வாழ்வில் ஐந்து வெவ்வேறு கல்லூரிகளில் படித்துச் சிறந்த மாணவியாகப் பெயர் வாங்கிய பெருமை இவருக்கு உண்டு. கவிதை எழுதுவது, பாடுதல், மேடைப் பேச்சு, ஓவியம் வரைவது, நடனம் மற்றும் நடிப்பு எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்தார்.
காலப்போக்கில் தனது தாத்தாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழின் அரிய கலையான சித்திரக்கவிகளைக் கற்பதில் தீவிர கவனம் செலுத்தினார். திருவையாறு அரசர் கல்லூரியில் இவர் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்ற காலத்தில், இவருடன் பயின்ற சக மாணவர்களும் பேராசிரியர்களும் இவரது எளிமையான பண்பையும், அன்பான பழகும் முறையையும் இன்றும் வியந்து பாராட்டுகின்றனர். ஐந்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கல்வி பயின்று, அனைத்து இடங்களிலும் நன்மதிப்பைப் பெற்ற ஒரு சில பெண் கல்வியாளர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
சித்திரக்கவித் துறையில் மாபெரும் சாதனைகள்
சித்திரக்கவி என்பது சாதாரண கவிதை அன்று; கணிதக் கணக்கீடுகளும், எழுத்துகளின் வரிசை முறைகளும், குறிப்பிட்ட வடிவங்களும் இணைந்து இயற்றப்பட வேண்டிய கடினமான இலக்கணக் கலையாகும். இக்கலையைக் காப்பாற்ற ரகமத் பீபி ஏறக்குறைய 20 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும் சென்று, ஏட்டுச் சுவடிகளிலும் பழைய நூல்களிலும் சித்திரக்கவிகளைத் தேடிப் பிடித்தார். அவற்றைத் தாமே எழுதி எழுதிப் பார்த்துப் பயிற்சி பெற்றார். இறைவனின் அருளும், தாத்தாவின் ஆசியும் இணைந்து இவரை ஒரு தலைசிறந்த சித்திரக்கவியாக மாற்றின.
இவர் படைத்தளித்துள்ள சாதனைகள் தமிழிலக்கிய உலகை வியப்பில் ஆழ்த்துகின்றன:
- முதல் சித்திரக்கவி: சீனிவாசன் பெயரில் 11 தட்டு ரத பந்தம் எழுதி தன் பயணத்தைத் தொடங்கினார்.
- பல்வேறு பந்தங்கள்: நாக பந்தங்கள், உடுக்கை பந்தம், முரச பந்தம், விளக்கு பந்தம், மயில் பந்தம், கோபுர பந்தம், சிவலிங்க பந்தம், துவித பந்தம், சக்கர பந்த மாணிக்கமாலை பந்தம், குத்துவிளக்கு பந்தம் போன்ற பந்த வகைகளையும்; பஞ்சபங்கி, திரிபங்கி, ஆறுபங்கி, அட்டபங்கி, நவபங்கி, தசபங்கி, சதபங்கி, பஞ்சவிம்ச அதிகசதபங்கி போன்ற பங்கி முறைகளையும் கையாண்டுள்ளார்.
- இதர வடிவங்கள்: வர்க்கக் கவிதைகள், எழுகூற்றிருக்கைகள், மலைபந்தம், உதடு ஒட்டும் கவிதைகள், உதடு ஒட்டாக் கவிதைகள் என ஐம்பத்தி மூன்று வகையான சித்திரக்கவிகளைத் துல்லியமாக எழுதியுள்ளார்.
- வரலாற்றுச் சாதனைகள்: இதுவரை வேறு யாரும் செய்யாத வண்ணம் 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41 தட்டுத் தேர் கவிதைகளை எழுதி வரலாறு படைத்துள்ளார். மேலும் 1, 2, 4, 8, 16 மற்றும் 1000 தலை நாக பந்தங்களையும் முறையான இலக்கணப் பாடல்களுடனும் வடிவங்களுடனும் இயற்றியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சித்திரக்கவிகளைப் படைத்துள்ள இவரைப் போல அனைத்து வகையான சித்திரக்கவிகளையும் இதுவரை வேறு யாரும் எழுதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நூல்களும் இலக்கியப் பங்களிப்பும்
தனது அரிய ஆய்வுகளையும் படைப்புகளையும் நூல்களாக வடித்துத் தமிழன்னைக்குச் சமர்ப்பித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள நூல்களில் சில:
- சித்திரக்கவிச் சோலை
- விசித்திரக்கவிகள்
இது தவிர, பல்வேறு கட்டுரை மற்றும் கவிதை நூல்கள் என மொத்தம் 5 நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும், அச்சிடப்படாமல் தகுந்த நிதி மற்றும் அரசு உதவிக்காகக் காத்திருக்கும் 11 அரிய நூல்களை எழுதித் தயாரித்து வைத்துள்ளார். இத்தகைய பொக்கிசமான நூல்கள் வெளியாகும் பட்சத்தில் தமிழ் இலக்கண உலகிற்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
கல்விப் பணியும் தமிழ்த் தொண்டும்
கவிதையாக்கத்திலும் ஆராய்ச்சியிலும் மட்டுமின்றி, கல்வித்துறையிலும் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்து வருகிறார். தற்சமயம் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள V. P. M. M. கலை அறிவியல் கல்லூரியில் துணைமுதல்வராகக் (Vice-Principal) பணிபுரிந்து வருகிறார். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழின் மீதான பற்றையும் இலக்கணப் புதிருக்கான ஆர்வத்தையும் ஊட்டி, கல்விப் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
காலத்தால் அழிந்துவிடும் அபாயத்தில் இருந்த சித்திரக்கவி இலக்கண நூல்களை மீட்டுருவாக்கம் செய்த இவரின் பெரும் தொண்டுக்காக, தமிழகத்தின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் இலக்கிய மன்றங்களும் இவரைப் பாராட்டிச் சிறப்பித்துள்ளன. இதுவரை ஐந்நூறுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள ரகமத் பீபி, தமிழ்க் கலையின் அடையாளமாகத் திகழ்கிறார்.
பெண்கள் அறிவியலிலும் அரசியலிலும் சாதித்த காலத்திலும், தமிழின் மிகக் கடினமான இலக்கண வடிவமான சித்திரக்கவித் துறையில் எவரும் செய்யாத சாதனைகளைப் புரிந்துள்ள முனைவர் பீ. ரகமத் பீபி தமிழ்ச் சமூகத்தின் ஈடு இணையற்ற சொத்தாவார். அழிந்துவரும் பாரம்பரியக் கலைகளைத் தன் உழைப்பால் மீட்டெடுத்துள்ள இவரைத் தமிழக அரசும், தமிழ் வளர்ச்சித் துறையும் உரிய முறையில் அடையாளம் கண்டு, பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். இத்தகைய ஆளுமைகளின் வழிகாட்டுதல்களே நமது வருங்காலத் தலைமுறைக்குத் தமிழ் இலக்கியச் செழுமையைக் கொண்டு சேர்க்கும்.
கட்டுரையாளர் - முனைவர் ஜெ.மகேந்திரன்
மூத்த ஊடகவியலாளர்
8838078388