விளக்குகளுக்கு விளக்கமான காந்தி..!
விளக்குகளுக்கு விளக்கமான காந்திஜி..
கருப்பு நிறத்தவரென அடையாளமான
தென்னாப்பிரிக்க இந்தியர்களின்
உரிமைக்காகப் போராடிய விடிவிளக்கு!
ஜெர்மனி கல்லென்வகு தந்த நிலமதை
நாட்டின் முதுகெலும்பு உழைப்பாளிக்கு தானமாக்கி/கூலி உயர்வுக்காக
அயராமல் போராடிய சுடர்விளக்கு!
டால்ஸ்டாய் கட்டுரையின் உபயத்தால்,
தர்மமெனும் உழைப்பால்/ பட்டினி சாவு விரட்டும் வழி போதித்த நிலைவிளக்கு!
அகிம்சை/சகிப்புதன்மை/உண்மை/
சத்தியம்/சிக்கனம்..எனும் ஐந்தும்
அன்பை பெறும் வரையறையான
கோட்பாடுகளென்ற பஞ்சலோக விளக்கு!
கடமையை செய்தலில் தன் கையே
தனக்குதவி என்று பொது இடங்களில்
துப்புரவு பணி செய்த தூங்காவிளக்கு!
துரோகியை மன்னிக்க விரும்பாத,
அறப்போரால் உழைப்பாளி தோழனாகி,
பிறப்பினால் உயர்வு தாழ்வில்லை
என உரக்கப் பதிவிட்ட சரவிளக்கு!
ஆட்டுப்பால்/வேர்க்கடலை பிரியதாரி,
அஞ்சா நெஞ்சம்/சோர்வில்லாமை/மன
உறுதிபாடு கொண்ட அகல்விளக்கு!
தீண்டாமை பாகுபாட்டைக் களைந்து,
வங்கம்/பீகாரில் மதங்களிடையேயான
மோதலினை தவிர்த்த தூண்விளக்கு!
சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளி
துவங்கி சமுதாய புரட்சி,
சேவாகிராம வழிபாட்டில் திருவாசகம்
பாடலை இடம் பெற வைத்த தெளிவு,
வள்ளுவனை மாமுனியாக ஏற்று
திருக்குறளுக்கு தந்த மரியாதை,
ஔவை ஆத்திசூடி/கம்பராமாயணத்தை
பொதுக் கூட்டங்களில் மேற்கோடிட்டது,
மகன் தேவதாசுக்கு தமிழ்பெண்ணை
தமிழ் முறைப்படி மணமுடித்தது,
தமிழ் கற்று தெளிந்த பின் இந்தியன்
ஒபினியன் இதழினை நடத்தியது..எனும்
அத்தனையும் மனமுவந்து செய்ததில்
தமிழுக்கு அழகு சேர்த்த குத்துவிளக்கு!
நீண்ட நாள் ஆசை நிறைவேறியதென
நெஞ்சுருகி மதுரை மீனாட்சி கோவிலில்
கைப்பட எழுதி வைத்த மாண்பு,
குழப்பங்களை வென்று
தனி மனித ஆன்மாவை தெய்வ
நிலைக்கு உயர்த்துவது பிரார்த்தனை
என்றுணர்த்திய எலுமிச்சை விளக்கு!
மக்களின் மனங்கவர்ந்த காந்திஜியின்,
தேச சுபிட்சத்திற்கான அத்தனை
அடியெடுத்தல் கண்ட பாதச்சுவடுகளும்
சமுதாய மேம்பாட்டிற்கான மாவிளக்கே!
இத்தனை விளக்குகளின்
விளக்கங்களான மகாத்மாவின்
பிறந்த தினமிதில் அகிம்சை
கடைப்பிடிக்க முயன்றிடுவோமென
உறுதியேற்போம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.