மாநிலங்களவை இடைத்தேர்தலில் வைகோவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் முதலமைச்சருக்கு மூத்த ஊடகவியலாளர் முனைவர் ஜெ. மகேந்திரன் கோரிக்கை
கோயம்புத்தூர், ஜூன் 3 :
வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை (ராஜ்ய சபா) இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக அறிவித்து மாநிலங்களவைக்கு அனுப்பிட வேண்டும் என்று மூத்த ஊடகவியலாளர் முனைவர் ஜெ. மகேந்திரன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழர் நலன், சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக பல தசாப்தங்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மூத்த அரசியல் தலைவர் திரு. வைகோ அவர்கள், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராக பணியாற்றிய காலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை தேசிய அளவில் எடுத்துரைத்து, மக்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு நீர்வள உரிமைகள், நதிநீர் இணைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
சிறந்த ஆங்கிலப் புலமை, ஆழ்ந்த அரசியல் அறிவு, பாராளுமன்ற நடைமுறைகளில் அனுபவம் மற்றும் தேசிய அளவிலான பார்வை ஆகியவற்றின் காரணமாக திரு. வைகோ அவர்கள் “பாராளுமன்ற சிங்கம்” என்று அரசியல் வட்டாரங்களில் போற்றப்படுகிறார்.
இன்றைய அரசியல் சூழலில் அனுபவம் மிக்க தலைவர்கள் தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் குரலாக செயல்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. அந்த வகையில், திரு. வைகோ அவர்களை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்புவது தமிழ்நாட்டின் நலனுக்கும், தமிழர்களின் உரிமைக் குரலுக்கும் மிகப்பெரிய பலமாக அமையும்.
மேலும், அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட்ட ஒரு மூத்த தலைவரை மாநிலங்களவைக்கு அனுப்பும் முடிவை முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மேற்கொண்டால், அது உயர்ந்த அரசியல் பண்பாட்டிற்கும் ஜனநாயக முதிர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக அமையும்.
அத்தகைய முடிவு தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே கூடுதல் நன்மதிப்பை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டின் நலனே முதன்மை என்ற அரசியல் செய்தியையும் வலுவாக எடுத்துரைக்கும்.
எனவே, வரவிருக்கும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் திரு. வைகோ அவர்களை வேட்பாளராக அறிவித்து மாநிலங்களவைக்கு அனுப்பிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.