நீடுத் துயில் பாடிய வந்த நிலா ..!
நீடு துயில் பாடிய வந்த நிலா
அன்னை காளியின் அருமை மைந்தனே
அறம்பாட வந்த அக்னி புத்திரனே
ஆர்கடலும் ஒலி எழுப்பும் நின்பெயரை
இன்னமுதாய் நற் கவிதை படைத்து
ஊக்கமுடன் உலாவிய முண்டாசுக் கவி…
எழுத்தறிவிக்க கலைமகளால் அனுப்பப்பட்டஅவதாரம்
ஏங்குவோர்க்கு உரிமைக் குரல்கொடுத்த எட்டையபுரத்து எஜமானன்…
மீசைக்கவிஞர் பத்திரிக்கையாளர் எழுத்தாளர்
பன்முகம் கொண்டு கறுப்பு அங்கிக்குள்ளிருந்த
தேசியகவியே தேமதுரத் தமிழோசையை
சுதந்திரக்காற்றை
காட்டுத்தீயாய் சுதந்திர கனலாய்
அனலாய்
கவிதை படைத்து பிஞ்சு நெஞ்சங்களில்
இலட்சிய நெருப்பை பற்றவைத்த சூரியனே….
உயிர்களிடம் அன்புகாட்டி ஊருக்கு நல்லறம்
நீதி நேர்மை
தைரியத்தை ஊட்ட
கடவுளால் அனுப்பப் பட்ட இறை தூதுவனே…
எண்ணங்களை உயர்வாக்கிய எட்டையபுரத்து அரிமா
ஏறுபோல் நடந்து ஐம்பொறிகளை இயக்கி
ஒற்றுமை உணர்வை தேசப்பற்றை மொழிப்பற்றை
மக்கள் மனதில் விதைத்திட்ட புரட்சியாளனே….
ஓங்கு புகழ் ஞானத்தால் தாய்மொழியை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் என்று
தமிழ்மொழிக்கு புகழ் சேர்த்த பெருந்தகையே…..
அஞ்சாமல் வாழ்ந்த அக்னிப் பறவையே
வையத்தலைமை கொண்டு வாழ்ந்த மகான்
தமிழாலும் தமிழுக்காகவும்
வாழ்ந்த மகானே
நீயில்லாது மொழியில்லை
உன்னால் வையத்தில்
தமிழ் உணர்வில்லாத மனிதரும் இல்லை
சிந்தனை உரத்தால் சீர்மிகு விடுதலைக்கு
செந்தமிழ் பாட்டால் எழுச்சிநீர் பாய்ச்சி
செந்தமிழ் பாக்களை தீச்சூடராய் வடித்த சிற்பியே
காலத்தால் உறங்கிய பின் கண்டெடுத்த சொத்தே
தமிழ்மண் ஈன்றெடுத்த நற்பெருங் கவியே
தீட்டிய கவியால் சாதிமத இனபேதம்
ஓட்டிய பாரதிக்கு நிகர் உண்டோ புவிதனில்….
முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் 641105