இமைகள் நனைந்து...
இமைகள் நனைந்து
சில கண்ணீர்கள் துயரத்தால் மட்டும் பிறப்பதில்லை...
அவை அன்பின் ஆழத்திலிருந்தும் பிறக்கின்றன.
சில நினைவுகள் காலத்தால் மறைவதில்லை...
அவை மனதின் ஓரத்தில் நித்தமும் வாழ்கின்றன.
அப்படிப்பட்ட உணர்வுகளின் நிழலாக உருவானதே "இமைகள் நனைந்து".
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 80 கவிதைகளும் காதலின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகின்றன. காதலுக்கு முன் தோன்றும் உணர்வுகள், காதலின் இனிமை, காத்திருப்பு, ஏக்கம், பிரிவு, திருமணத்திற்குப் பின் உருவாகும் பாசம், புரிதல், உறவின் ஆழம் என பல உணர்வுகளை கவிதைகளாகப் பதிவு செய்துள்ளேன்.
ஒவ்வொரு கவிதைக்கும் அதன் உணர்வை இன்னும் நெருக்கமாக உணர வைக்கும் வகையில் பென்சில் ஓவியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை ஒரு எளிய ஓவியம் அழகாகச் சொல்லிவிடும். அந்த எண்ணத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
இந்தக் கவிதைகள் வெறும் வரிகளாக இல்லாமல், பலருடைய மனதில் கடந்துபோன அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன்...
அன்புடன், சைலஜா கணேசன்
1. உயிர் கடந்தும் நீ…
புரியாமல் தொடங்கிய பழக்கம்…
இன்று உயிரோட கலந்த உறவாயிற்று…
காலம் எவ்வளவு கடந்தாலும்…
இந்த அன்பு மட்டும் மங்காது…
உடல் ஒருநாள் மறைந்தாலும்…
நினைவு மட்டும் மறையாது…
உயிர் எங்கே சென்றாலும்…
உங்க அன்பு என்னுள் வாழ்ந்துகொண்டே இருக்கும்…
2. நீயே என் குழப்பம்…
நீ இருந்தாலும் என் மனசு அமைதியில்லை…
நீ இல்லாதால் என் உயிரே முழுமையில்லை…
3. நீ வந்தாலே மலரும் என் உலகம்…
உன் பார்வை நொடியிலே
உள்ளம் மழையாய் நனையுதே…
சொல்லாமல் பேசும் கண்களில்
சிறு காதல் தினம் பிறக்குதே…
மீசை பின்னாலே மறைந்திருக்கும்
மென்மையான அந்த சிரிப்பு…
என் உயிரோடு சேர்ந்தவனே
நீ வந்தாலே என் வாழ்வும் மலருதே…
இரவு முழுக்க நினைவாகி
இதயம் முழுக்க நிலவாகி…
நீ இல்லாத நேரமெல்லாம்
அமைதிக்கூட காதல் பேசுதே…
4. அழியாத பாசம் …
சின்ன தவறுகளில்
சினந்த மனம்…
கோபத்தின் நிழலில்
விலக சொல்லிய தருணம்…
காலம் மெதுவாக
உன்னை புரிய வைத்தது…
புரிந்த இதயத்திற்குள்
பாசம் இன்னும் ஆழமானது…
இன்று அதே வார்த்தைகள்
உன் உதடுகளில் மலரும்போது
அமைதியான என் மனம்
மௌனமாக வலிக்கிறது…
சண்டைகள் வந்தாலும்
சாய்ந்து போகாத உறவு இது…
புயல் கடந்த பின்னும்
பூத்து நிற்கும் காதல் இது…
5. பிரியாத உறவு …
மௌனத்தின் பின்னாலே
மறைந்து கிடந்த பாசம்…
கண்கள் மட்டும் சொல்லிவிட்ட
ஆழ்ந்த மனத்தின் நேசம்…
விலகிடுவேனோ என்ற பயத்தில்
அன்பும் அளவாய் நின்றது…
ஆனால் அந்த அமைதிக்குள்ளே
உன் இதயம் முழுதும் தெரிந்தது…
விட்டு செல்லும் மனமிருந்தால்
இவ்வளவு நேசம் பிறந்திராதே…
உயிரோடு கலந்த உறவுகள்
ஒருநாளும் விலகி போகாதே…
6.மனதில் நின்ற சிரிப்பு…
எத்தனையோ முகங்கள்
கண்முன் கடந்து போகின்றன…
சில நொடிகள் மட்டும் வந்து
நினைவின்றி மறைந்து போகின்றன…
ஆனால்…
சில சிரிப்புகள் மட்டும்
இதயத்தின் ஓரத்தில்
நிழலாய் நின்றுவிடுகின்றன…
அப்படித்தான்
உங்கள் சிரிப்பும்…
பார்த்த நொடியிலிருந்து
மனதுக்குள் நிலவாய் தங்கிவிட்டது…
7. நம் காதல்…
சிரிப்புகள் மலர்ந்த நாட்கள்…
சின்ன சின்ன சண்டைகள்…
கோபத்தில் அமைதியான
சில மௌன தருணங்கள்…
ஆனால்…
விலக வேண்டும் என்ற எண்ணம் மட்டும்
இதயத்துக்குள் பிறந்ததே இல்லை…
ஒவ்வொரு சண்டைக்குப் பின்னாலும்
இன்னும் ஆழமான அன்பு…
அதனால்தான் இன்று வரை
அழகாக திகழ்கிறது
நம் காதல்…
8. மௌனப் போர்
எண்ணற்ற முறை
என் கண்களில் கண்ணீர் வந்தது…
“என் அன்பே… நீ புரிய மாட்டாயா?” என்று
ஆனாலும் நான் விலகவில்லை
உன்னிடம் மீண்டும் மீண்டும் வந்து நிற்கிறேன்…
என் அன்பை நிரூபிக்க அல்ல
அதை நீ ஒருநாள் உணர்வாய் என்ற நம்பிக்கையில்…
9. மறைந்த அன்பு
காதலிக்கும் போது
அன்பு இருந்தது… புரிதல் இருந்தது…
மனைவியான பிறகு
அது பெயராக மட்டும் மாறிவிட்டதோ…
காதலில் இருந்த அந்த நெருக்கம்
இன்று எங்கே மறைந்தது…
மனதுக்குள் இருக்கும்
அந்த அன்பு மட்டும்
இன்னும் எங்கேதான் போனது…
10. தெய்வ நிழல்
கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும்
தெய்வத்தைப் பார்த்து வணங்கும் அந்த உணர்வோடு
நான் உன்னைப் பார்க்கிறேன்…
ஏனென்றால்
தெய்வத்தின் நிழலாகவே
நீ என் உள்ளத்தில் வாழ்கிறாய்…
நான் வேண்டியதெல்லாம்
மௌனமாக கேட்டாலும் புரிந்து
நீ தரும் அந்த அன்பு…
அந்த நம்பிக்கையில்தான்
நான் உன்னை
தெய்வமாக அல்ல…
தெய்வ நிழலாக உணர்கிறேன்…
11. மல்லிகைத் தீண்டும் நொடி
உன் கரம் தொட்ட மல்லிகையில்
மென் உணர்வுகள் மலர்ந்ததே…
என் கூந்தலில் பூ சூடும் வேளை
இதயம் முழுதும் புன்னகையே…
மல்லிகை மணம் வீசவில்லை…
உன் நேசம்தான் என்னை சூழ்ந்தது…
நீ அருகில் நிற்கும் அந்த நொடி
என் உலகமே அழகாய் மாறியது…
12. தள்ளி நின்ற காதல்…
அன்று
உன் அருகில் நின்றபோதும்
வெட்கம் என்னை விலக்கி வைத்தது…
இன்று
நீ விலகி நின்ற பின்தான்
அந்த அருகாமையின் வெப்பம் புரிகிறது…
தவிர்த்த உன் அணைப்புக்காக
இப்போது என் இரவுகள் ஏங்குகின்றன…
13. மாறாத காதல்…
அன்று
எனக்காக நீ
காத்திருந்தாய்…
இன்று
உனக்காக நான்
காத்திருக்கிறேன்…
காலங்கள் மட்டும் மாறிவிட்டது…
ஆனால்
காத்திருக்கும் காதல்
இன்னும் மாறவில்லை…
14. முத்தத்தின் பாசம்…
நீ
என் நெற்றியில் முத்தமிடும் பொழுது
காமத்தின் சுவடுகளை விட
பாசத்தின் வெப்பமே அதிகமாக உணர்கிறேன்…
உன் இதழ்கள் பதியும் அந்த நொடியெல்லாம்
என் இமைகள் கூட
அமைதியாக மூடிக்கொள்கின்றன…
சொல்லாமல் நீ தரும் அன்பை
உன் முத்தங்கள் மட்டும்
என் உயிரோடு மௌனமாக பேசிக்கொள்கின்றன…
15. இதயத்தின் அருகில்…
உன் விரல்கள் என்னை அணைக்க
உன் மார்பில் நான் சாய்ந்திருக்க…
உன் இதயத்துடிப்பு
என் காதோரம் தழுவிக்கொண்டிருக்க…
அந்த நொடியெல்லாம்
உலகமே அமைதியாகி விடுகிறது…
மரணமே வந்தாலும் கூட
மீண்டும் அந்த நெருக்கத்தில் உயிர்ப்பேன்…
16. மௌனத்தின் நடுவே நீ
நாம் பேசாமல் பிரிந்திருந்த அந்த நாட்களிலும்…
உன்னை நினைக்காத ஒரு நொடியும் இல்லை…
பிரிவு நம்மை தூரம் கொண்டு சென்றாலும்…
மனம் மட்டும் உன்னையே தேடி வந்தது…
போகலாம் என்று நான் நினைத்த நேரத்திலும்…
ஏதோ ஒன்று என்னை நிறுத்தி வைத்தது…
உன் தேவை இல்லாமல் நான் முழுமையில்லை…
அது காதலா… இல்லை விதியா என தெரியவில்லை…
17. ஒரு நொடி போதும்
நான் உன்னிடம் பேச வருகிறேன்…
சிறு நேரம் கூட நீ எனக்காக இல்லை…
நேரம் செலவிடுவது வேண்டுகோளாகிறது…
சில நேரம் அது சுமையாக மாறுகிறது…
உன் மௌனத்தில் என் கேள்விகள் கரைகின்றன…
பல நேரங்களில் நினைப்பதெல்லாம் சொல்லாமலே போயிடுது…
நீ கொடுக்கும் ஒரு நொடி மட்டும் எனக்குள் நிறைகிறது…
அந்த நேரம் என் வலியும் கரைந்து போகிறது…
18. மௌனத்தின் காதல் மொழி
இருவர் உடலின் அருகாமை அல்ல இது…
இரு உயிர்களின்
ஒரே மூச்சாக இணையும் தருணம்…
வார்த்தைகள் இல்லாத உலகத்தில்
நம் காதல் மட்டும்
மெல்ல பேசிக்கொண்டே இருக்கிறது…
19. உன்னில் கரையும் நான்
உன் உணர்வு
என் உடலோடு கலக்கும் நொடியில்
வார்த்தைகள் எல்லாம் அமைதியாகின்றன…
உன் இதழ்கள்
என் பார்வையை தொடும் போது
கண்கள் கூட மயங்கி நிற்கின்றன…
உன் புன்னகை
என்னை மெதுவாக அணைக்கும் தருணத்தில்
நான் முழுவதும் உன்னுள் கரைந்து போகிறேன்…
20. உன் அருகில் நான்
உன் கைகள் என் தலை வருடும் போது
மௌனமே மெதுவாய் மொழி பேசுகிறது…
உன் சுவாசம் என் அருகில் வீசும் நொடியில்
இதயம் தன்னையே மறந்து போகிறது…
உன் பார்வை என்னைத் தொட்டுச் செல்லும் போது
உலகம் எல்லாம் தொலைவில் நிற்கிறது…
உன் அணைப்பின் வெப்பத்தில் நான் கரையும் போது
நான் நான் இல்லை… நாம் ஆகிறேன்…
21. நெருக்கத்தின் வெப்பம்
உன் அருகில் நான் நெருங்கும் அந்த நொடியில்
என் மூச்சே வேகமாய் மாறுகிறது…
உன் கைகள் என்னைச் சுற்றும் போது
என் உடல் முழுதும் அமைதியாக கரைகிறது…
சொல்லாமல் பேசும் அந்த நெருக்கத்தில்
இதயம் மட்டும் தீவிரமாக துடிக்கிறது…
உன் அணைப்பின் வெப்பத்தில்
நான் என்னையே இழந்து நிற்கிறேன்…
22. மடியில் கரையும் நீ
என் மடியில் நீ சாய்ந்திருக்க
உன் மூச்சின் வெப்பத்தில் நனைகின்றேன்
என் கைகள் உன் தலையை தழுவ
அந்த நொடியில் உலகம் சத்தமின்றி நிற்கிறது
உன் பார்வை என்னை சிறை பிடிக்க
நான் மெதுவாய் கரைந்து போகிறேன்
என் உதடுகள் உன் நெற்றியில்
முத்தமிடும்
அந்த நிமிடத்தில் காதலும் முழுமை உயிராகிறது
23. நினைவின் மௌனம்
நீ இருக்கும் பொழுது உன்னை ரசிக்கிறேன்…
நீ இல்லாத பொழுது உன்னை நினைக்கிறேன்…
வார்த்தைகள் வராமல் மனம் உன்னைத் தேடுகிறது…
மௌனத்தில் உன் பெயர்தான் ஒலிக்கிறது…
24. மாற்றிய வார்த்தைகள்…
சிறு நேரம் நீ இல்லையென்றாலே
மனம் முழுக்க வெறுமை இருந்தது…
உன் குரல் கேட்காத பொழுதெல்லாம்
உயிரே அமைதியின்றி தவித்தது…
இன்று மெதுவாக
என்னை மாற்றி விட்டாய் நீ…
நீ தூரம் இருந்தாலும்
உன் வார்த்தைகள் மனதை சமாதானப்படுத்தி விட்டது…
25. உண்மையின் வலி…
உங்கள் மனதை மகிழ்விக்க
பொய்யாக சிரிக்க எனக்கு தெரியவில்லை…
கண்முன் தவறு தெரிந்தும்
அமைதியாக இருக்க முடியவில்லை…
புகழ்ந்து பேசும் வார்த்தைகள்
பலரிடம் எளிதாக வருகிறது…
என் மனம் மட்டும்
உண்மையை மறைக்க பழகவில்லை…
26. குறையாத அன்பு…
என்னை விலக்கி வைத்தாலும்
என் மனம் மட்டும் விலகவில்லை…
அலட்சியமான உன் வார்த்தைகள் கூட
அன்பை குறைக்க முடியவில்லை…
ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்று
எனக்கே இன்னும் புரியவில்லை…
இத்தனை வலிகளுக்குப் பிறகும்
என் அன்பு மட்டும் மாறவில்லை…
27. புரியாத தூரம்…
என் வாழ்வின் அர்த்தம் நீயென்று
எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்…
நீ இல்லாத நாட்களை கூட
நினைக்க மனம் மறுத்திருக்கிறது…
என் அன்பை எல்லாம்
உனக்காக திறந்து வைத்திருக்கிறேன்…
இன்று வரை உன் மனதில் மட்டும்
எனக்கான அன்பு பிறக்கவில்லை…
28. விலகிய நாட்கள்…
நீ கோபத்தில் விலகி நின்றாலும்
என் மனம் மட்டும் உன்னை விலக்கவில்லை…
உன் தவறை திருத்த நினைத்த வார்த்தைகள் தான்
இன்று நம்மிடையே தூரம் வளர்த்தது…
நீ வராமல் கடந்த இரவுகளெல்லாம்
என் கண்களில் நிம்மதி தங்கவில்லை…
நான் சொன்ன அன்பின் வலியை கூட
இன்று வரை நீ புரிந்து கொள்ளவில்லை…
29. வலித்த மனம்…
மற்றவர்களுக்காக
பலமுறை நீ என்னை விலக்கி வைத்தாய்…
என் மனம் உடைந்து போகும் அளவுக்கு
அலட்சியமாக பேசிக் கடந்தாய்…
நான் மட்டும்
யாருக்காகவும் உன்னை விட்டதில்லை…
என் மனதில் யாருக்காகவும்
உன்னை விலக்கவும் இல்லை…
30. கண்கள் பேசும் காதல்
அவன் காதலின் மொழி
அவன் கண்கள் தான்…
வார்த்தையில் சொல்லாமல் கூட
அவன் மனதை வாசித்து விடுவேன்…
அவன் பார்வை மாறும் நேரத்தில்
தேவைகளை உணர்ந்து கொள்கிறேன்…
உதடுகள் பேசாத காதலை
அவன் கண்களில் தினமும் காண்கிறேன்…
31. உண்மையின் தேடல்…
எது கேட்டாலும்
பொய் சொல்லி கடக்கிறாய் நீ…
உண்மையின் பாதை கூட
உன்னிடம் மறைந்து போகிறது…
பொய் எனக்கு பிடிக்காது என்றாலும்
உன்னை மட்டும் விட்டு விட முடியவில்லை…
உன் அன்பு புரியாத அந்த நொடிகளிலும்
என் நேசம் மட்டும் குறையவில்லை…
எத்தனை பொய்கள் இருந்தாலும்
உன்னோடு வாழ ஆசை மட்டும் மாறவில்லை…
என் அன்பின் ஆழம் புரியாத நீயே
என் வாழ்க்கையின் கேள்வியாக இருக்கிறாய்…
32. விலகாத மனம்
உனக்குள் எழும் உணர்வுகள் போல
என்னுள்ளும் அலைகள் எழுகின்றன…
தனிமை மட்டும் நிரம்பியிருந்த மனதில்
இன்று வெறுமை மெதுவாக கரைகிறது…
அன்பில்லை என்று தெரிந்திருந்தும்
உன்னை மனம் விட மறுக்கிறது…
வலியைத் தரும் இந்த பந்தத்தில் கூட
விலக முடியாமல் நான் நிற்கிறேன்…
33. உண்மையின் காயம்
உன் குறைகளை சொல்லும் நேரங்களில்
என் வார்த்தைகள் உனக்கு
காயமாகிறது…
உண்மை என்று தெரிந்திருந்தும்
அதை ஏற்க மனம் தயங்குகிறது…
கோபத்தின் நிழலில் நீ
என் உணர்வுகளை உடைக்கிறாய்…
அன்பு நிறைந்த உறவுகளில் தான்
உண்மைகள் கூட கண்ணீராகிறது…
34. கரையாத உணர்வு
எவ்வளவு கோபம் மனதில் இருந்தாலும்
உன்னை பார்த்தால் எல்லாம் கரைகிறது…
நடக்காத ஆசை என்று தெரிந்திருந்தும்
உன்னை நினைத்து மனம் ஏங்குகிறது…
காதலித்த முதல் நாளிலிருந்து
இன்று வரை என் பார்வை மாறவில்லை…
என் அன்பின் ஆழமும் கூட
உனக்காக ஒருநாளும் குறையவில்லை…
35. உணராத காதல்
உனக்காக என் காதலை சொல்ல
நாட்கள் மட்டும் போதவில்லை…
வருடங்கள் கடந்தாலும் கூட
என் அன்பு குறைந்து போகவில்லை…
எத்தனை விதமாக என் காதலை வெளிப்படுத்தினாலும்
உன் மனதிற்கு எட்டவில்லை…
உன்னை மட்டுமே நேசித்த இதயம்
இன்றுவரை நீ உணரவில்லை…
36. புரியாத நேசம்
புத்தகங்களில் வாசித்த காதல்
புராணங்களில் கேட்ட நேசம்…
அவை எல்லாம் உண்மையா என்று
ஒருகாலத்தில் சிரித்திருந்தேன்…
இன்று உன் நினைவில் வாழும் என் மனம்
அந்த கதைகளாகவே மாறிவிட்டது…
உன்னில் ஏன் இவ்வளவு உயிராய் கரைகிறேன் என்பதற்கு
என்னிடமே இன்னும் பதில் இல்லை…
37. உன் அருகாமையின் உணர்வு
எத்தனை முறை நீ அருகில் வந்தாலும்
முதல் முறை போல இதயம் துடிக்கிறது…
லேசாக உன் கை என்னைத் தீண்டினாலே
என் உணர்வுகள் முழுதும் விழித்துக் கொள்கிறது…
காதலின் உச்சம் காமம் என்று
பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்…
அந்த உண்மையின் வெப்பத்தை
உன்னருகில் தான் நான் உணர்ந்திருக்கிறேன்…
38. நான் தாங்கும் வலி
என் காதலை நிரூபிக்க
உயிரையே விட்டுப் போக முடியும்…
என் பிரிவின் துயரை
உன் கண்களில் காண மனம் இல்லை…
நீ வருந்தும் ஒரு நொடியைக் கூட
என் காதல் தாங்காது…
எல்லா வலியையும்
நான் உயிரோடு சுமந்து நிற்கிறேன்…
39. கற்பனையின் வாழ்வு
என் ஆசைகள் எல்லாம்
கற்பனையில் தான் பூக்கிறது…
மௌனத்தில் நான்
என் வாழ்க்கையை வாழ்கிறேன்…
கேட்ட பல விஷயங்கள்
உன்னிடம் பதிலின்றி நின்றுபோனது…
கேட்காமலிருப்பதே என் மனம் ஏற்றுக்கொண்டதே…
40. என் கவிதை நீயே
என் காதல் எல்லாம்
கவிதையாக வடிகிறது…
என் ஆசைகள் எல்லாம்
வரிகளாய் உயிர் பெறுகிறது…
இவை வெறும் எழுத்தல்ல என்று
மனம் நம்பிக்கையோடு எழுதுகிறது…
என் நினைவுகள் எல்லாம்
உன்னிடம் சேரும் என்ற எண்ணத்தில்
என் காதலும் கவிதையாக வாழ்கின்றது…
41. சொல்லாத ஏக்கங்கள்
உன் தேவைகள்
சொல்லாமலே நான் புரிந்து கொள்கிறேன்…
என் தேவைகள்
நான் சொன்னாலும் புரியாமல் போகின்றன…
சொல்லாமலே புரிந்து கொள்வாய் என்று
மனம் பலமுறை ஏங்குகிறது…
என் உலகம்
உன் அமைதிக்குள்ளே வாழ்கின்றது…
42. வயதில்லா அன்பு
உணர்வுகளுக்கு வயது இல்லை…
அன்புக்கும் ஆசைக்கும் எல்லை இல்லை…
மனம் பேசும் மொழிக்கு
எண்ணிக்கைகள் தடையாகாது…
வாழ்க்கையின் விதிகள் சொல்லினும்
இதயம் அதை கேட்காது…
உண்மையான நேசம் மட்டும்
எப்போதும் இளமையாய் நிற்கும்…
43. விழிகளில் தொலைந்தேன்
என்னை கவர்ந்தது
உன் கண்களின் பார்வை தான்…
அந்த நொடியில் இருந்து
என் மனம் உன்னில் தங்கிவிட்டது…
பார்க்க பார்க்க கூட
அந்த கண்கள் புதிதாய் தெரிகிறது…
உன் விழிகளை ரசிக்கும் நேரங்களில்
என் உலகமே அமைதியாகிறது…
44. உன் கண்களின் ரகசியம்
உன் கண்கள்
ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறது…
உன் ஒவ்வொரு பார்வையிலும்
உன் மனதை நான் வாசிக்கிறேன்…
காதலாக இருந்தாலும்
கோபமாக இருந்தாலும்…
காமத்தின் வெப்பமாக இருந்தாலும்
அது உன் விழிகளில் எனக்காக தெரிகிறது…
உன் உதடுகள் சொல்லாததை கூட
உன் கண்கள் தினமும் உணர்த்துகிறது…
45. அந்த ஒரு நிமிடம்
நீ உணவு தந்த அந்த நொடி
என் மனதில் அமைதியாக நின்றுவிட்டது…
வார்த்தைகளால் சொல்ல முடியாத
ஒரு அன்பை நான் உணர்ந்தேன்…
கண்களில் தானாக வந்த கண்ணீர் கூட
அந்த நேசத்தின் சாட்சியாக இருந்தது…
வளர்ந்த பிறகு மறந்துபோன பாசத்தை
மீண்டும் உணர்த்திய நிமிடம் அது…
46. குழந்தையாய் நீ
உன்னை நான் நேசிப்பது
ஒரு காதலாய் மட்டும் இல்லை…
குழந்தையை தாங்கும் அம்மா போல
என் மனம் உன்னை பார்த்துக் கொள்கிறது…
நீ கோபத்தில் காயப்படுத்தினாலும்
விலகி செல்ல மனம் வரவில்லை…
சண்டை போட்ட குழந்தை கூட
மீண்டும் அம்மாவிடமே வந்து சேர்வது போல…
என் உயிரும் எத்தனை வலித்தாலும்
மீண்டும் உன்னிடமே திரும்பி வருகிறது…
47. என் ஆசைகளின் நீ
உன் மடியில் தலைசாய்ந்து
அமைதியில் கரைய நினைக்கிறேன்…
உன் விரல்களோடு என் விரல்கள் சேர்த்து
நெடுந்தூரம் நடக்க நினைக்கிறேன்…
நாம் இருவரும் அருகருகே அமர்ந்து
இதழ்களில் சிரிப்பை பகிர நினைக்கிறேன்…
இப்படி சொல்லாத ஆசைகளெல்லாம்
என் கற்பனையில் தினமும் மலர்கிறது…
48. உன் வாசம் கொண்ட புடவை
எத்தனை புடவைகள் இருந்தாலும்
நீ வாங்கிக் கொடுக்கும் புடவைக்கு தனி நெருக்கம்…
அதை அணியும் தருணத்தில்
உன் மூச்சு அருகில் தீண்டுவது போலிருக்கிறது…
அந்த மடிப்புகளில் உன் காதல் ஒளிந்திருக்கிறது
அதன் ஓரங்களில் உன் விரல்கள் வருடுகின்றன…
அதை அணிந்து நிற்கும்போது
நீ அருகில் இருப்பதே உணர்கின்றேன்…
49. பின்னிருந்து நீ
சமையலறையில் நான் நிற்கும் வேளையில்
பின்னிருந்து நீ அணைப்பது பேரின்பம்…
உன் கரங்கள் என்னைச் சுற்றும் போது
என் உள்ளம் அமைதியில் நனைகிறது…
என் தோளோரம் சாயும் உன் முகவெப்பம்
மேனியெங்கும் சிலிர்ப்பை விதைக்கிறது…
அந்த சிறு அணைப்பின் நெருக்கத்திலே
முழு காதலும் உயிராய் மலர்கிறது…
50. சொல்லாத அச்சம்
நேசம் விதைத்த இதயத்திற்குள்
வேதனை மட்டும் வேரூன்றுகின்றது...
தாங்கும் பொறுமை கரை தேடும் நதியாய்
தவித்தபடி ஓடிக் கொண்டிருக்கின்றது...
காயப்படுத்தும் கணங்களின் நீளம்
காலத்தைக் கூட கனமாக்குகின்றது...
ஏனோ என் உள்ளத்தின் ஆழமெங்கும்
பிரிவின் அச்சம் சிறகடிக்கின்றது...
51. பதிலில்லா பயணம்
இணைந்து நடக்கும் அடிகளுக்கிடையே
இனம்புரியாத அமைதி வளர்கின்றது...
மலராத மொட்டின் தயக்கம்போல
மனதும் அச்சத்தில் துடிக்கின்றது...
நீயும் நானும் என்ற அழகிய வரிகள்
நிலைத்திடுமோ மனம் தவிக்கின்றது...
பதில் எழுதாத காலத்தின் கைகளில்
என் நாட்கள் கேள்விக்குறியாய் கரைகின்றது...
52. அறிந்தும்...
நெஞ்சை நெருடும் என்று தெரிந்தும்,
அந்த சொற்களை நீ தேர்ந்தெடுக்கின்றாய்...
என் தவிப்பு உனக்குத் தெரிந்த பின்னும்,
மீண்டும் அதையே நீ பேசுகின்றாய்...
தாங்கும் மனமும் தளர்ந்து போக,
வேதனைகள் மட்டும் நீளுகின்றன...
என் கண்ணீரின் காரணம் அறிந்திருந்தும்,
அதை வளர்ப்பது எந்த அன்பு...?
53. மௌனத்தின் சுமை...
உன்னை இழந்திடாத எண்ணத்தில்,
என் கோபங்களைக் கூட மௌனப்படுத்தினேன்...
தன்மானம் சில தருணங்களில் தலைகுனிந்தாலும்,
நம் உறவுக்காக அதைத் தாங்கிக் கொண்டேன்...
என் வாழ்வின் அர்த்தமாய் நீ இருந்ததால்,
பல வலிகளையும் புன்னகையோடு கடந்தேன்...
உடைந்தும் தாங்கும் இதயத்திற்கும்,
தளர்ந்து போகும் நேரம் உண்டு என்பதை உணர்கிறேன்...
54. மறந்துவிடாதே
மழையை நாடும் மண்னைப்போல்
உன் அன்பைத் தேடி வருகிறேன் ...
நிலவை நோக்கும் கடலைப்போல்
உன்னையே நினைத்து வாழ்கிறேன்...
நான் விலகாத நேசம் கொண்டேன் என்பதால்,
என் மௌனத்தை நீ பலவீனமென எண்ணாதே...
உதிர்ந்த இலைகனைச் சுயக்கும் காற்றைப் போல,
விலகிச் செல்ல ஒரு கணம் போதுமே...
55. மௌனம் பேசிய முத்தம்
என் கன்னத்தில் நீ பதித்த முத்தம்...
ஒரே கணத்தில் ஆயிரம் உணர்வுகளை எழுப்பியது...
உன் மீசை மெதுவாய் உரசிய அந்த நொடி...
மௌனத்திற்கே ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது...
என் நெற்றியில் நீ தந்த முத்தம்...
என் உலகத்தை ஒரு கணம் மறக்க வைத்தது...
வார்த்தைகள் சொல்ல மறந்த அன்பை...
உன் முத்தம் மட்டும் அழகாய் சொல்லிச் சென்றது...
56. உன்னை நினைத்தாலே...
உன்னை நினைத்தாலே...
என் கண்கள் மயக்கத்தில் தொலைந்து போகின்றன...
என் மனம் என்னை விட்டு விலகி...
உன் நினைவுகளோடு வாழத் தொடங்குகிறது...
என் உணர்வுகள் எல்லை தாண்டி ஓட...
என் கற்பனைகள் சிறகுகள் விரிக்கின்றன...
சொல்ல முடியாத என் நேசமும்...
உணர முடியாத என் உயிரும் பதிந்திருக்கிறது...
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்,
ஒரு கவிதையாகவே மாறிவிடுகிறது...
57. தீராத மோகம்
எத்தனை முறை உன்னை பார்த்தாலும்...
புதிதாய் பார்க்கும் உணர்வே பிறக்கிறது...
எத்தனை வருடங்கள் கடந்தாலும்...
இந்த மனம் மாறவே மறுக்கிறது...
உன்னை பார்த்துக் கொண்டே இருப்பதில்...
சொல்ல முடியாத ஒரு சுகம் இருக்கிறது...
என்ன மந்திரம் வைத்தாயோ தெரியவில்லை...
உன்னை நினைப்பதில் என் இதயமும் சோர்வதில்லை...
58. அணைப்பின் மயக்கம்...
உன் கரங்கள் என்னைச் சிறைபிடிக்கையில்...
என் மனம் உன்னிடம் சரணடைகிறது...
உன் அருகாமை தீண்டிய ஒவ்வொரு நொடியும்...
சொர்க்கம் என்றால் இதுதானோ என தோன்றுகிறது...
உன் அணைப்பின் வெப்பத்தில்...
என் உணர்வுகள் மெதுவாய் கரைகின்றன...
வார்த்தைகள் மறந்த அந்த நேரத்தில்...
நம் மௌனமே காதலைப் பேசுகிறது...
59. ஆன்மாவின் இணைப்பு
உன்னோடு நான் கலந்த அந்த நொடி...
இரு உயிர்கள் ஒன்றாய் இணைந்த உணர்வு...
உணர்வுகள் எல்லை தாண்டிச் சென்ற போது...
இரு இதயங்களும் ஒரே துடிப்பில் திளைத்த போது...
உயிரையும் கடந்து நிலைக்கும் நேசம்...
அடுத்த ஜென்மத்திலும் இணையும் பந்தம்...
60. உன் மௌனத்தின் இருள்
நீ பேசாத அந்த நொடி...
என் உலகம் ஒரு கணம் நின்றுபோனது...
வார்த்தைகள் எல்லாம் வழி தவறி...
மௌனத்தின் ஆழத்தில் கரைந்து போனது...
உலகமே இருள் சூழ்ந்ததுபோல் ஆனாலும்...
என் மனம் உன்னைத் தேடி அலைந்தது...
மௌனத்திலேயே உன்னை உணர்ந்து...
நான் என்னையே இழந்து நின்றேன்...
61. நீ இல்லாத நொடி
நீ இல்லாத ஒரு நொடி...
இயற்கையே நின்றதுபோல் தோன்றுகிறது...
காற்றும் பேச மறந்து...
மௌனமாய் என்னைச் சுற்றுகிறது...
கனவிலும் உன்னைத் தேடினாலும்...
கைநழுவிப் போகும் நிழலாய் நீயாகிறாய்...
உன் சுவாசம் இல்லாத உலகத்தில்...
என் உயிரே வழி தவறுகிறது...
62. உன் உணர்வின் ஓசை
சில நொடிகளில் உன் பாசம் பொழியும் போது...
என் உள்ளம் திகைத்து அமைதியாய் உருகுகிறது...
வார்த்தைகள் கூட வழி மறந்து நின்று...
உன் நேசத்தின் முன் தலை வணங்குகிறது...
சில நொடிகளில் உன் பிரிவு தோன்றும் போது...
என் இதயம் மெதுவாய் இருளில் சாய்கிறது...
பாசமும் மௌனமும் கலந்த உன் இருப்பில்...
நான் என்னையே மெதுவாய் இழக்கிறேன்...
63. உன் அன்பின் நிழலில்
நான் உன்னை நினைப்பதைப் போலவே
நீயும் என்னை நேசித்தால்…
என் இதயம் தேடும் வெறுமை
மெதுவாய் நிறைந்து விடும்…
வார்த்தைகள் இல்லாத ஒரு பாசத்தில்
நம் மனங்கள் பேசத் தொடங்கும்…
நாம் இருவரும் ஒன்றாக கலந்தால்
ஒரே உயிரின் உணர்வாய் வாழ்வோம்…
64. மௌனத்தில் மலர்ந்த பாசம்
உள்ளத்தின் ஆழத்தில் மலரும் உன் பாசம்
என் நினைவுகளில் மெதுவாய் நிறைகிறது…
உன் மெளனத்தின் நிறமெல்லாம்
என் மனதைக் கேள்விகளாய் ஆக்குகிறது…
உன் உணர்வுகளின் நடுவிலும்
உன்னை நான் நம்பிக்கையோடு தேடுகிறேன்…
சொல்லாத அன்பையும் நான் உணர்ந்து வாழ்கிறேன்
அந்த உணர்வே எனை உன்னோடு இணைக்கிறது…
65. துளிகளில் உன் நினைவு
உன் ஆடைகளை நான் துவைக்கும் அந்த நொடியில்
உன் நினைவு மெதுவாய் என்னை தொடுகிறது…
நீர்த் துளிகளோடு கலந்து வரும் அந்த உணர்வில்
நான் உன்னையே தொடுவதாக உணர்கின்றேன்…
உன் அருகில் இல்லாத நேரத்திலும்
உன் சுவாசம் போல உணர்வு நிறைகிறது…
என் ஆசை எல்லாம் பேசுகின்றேன்
அந்த நீராக உன்னை நினைத்துக் கொண்டு…
66. உன் ஆடையின் ஈர்ப்பு
உன் ஆடையின் திரவிய வாசம் காற்றில் கலந்தே
என் மனதை உன்னிடம் இழுக்கிறது…
நீ அருகில் வந்த அந்த நொடியில்
என் உணர்வுகள் தானாகவே உன்னை நோக்கி சாய்கிறது…
சொல்ல முடியாத ஒரு உணர்வு உள்ளே எழுகிறது
நான் என்னையே மறந்து உன் அருகில் நின்று விடுகிறேன்…
அந்த நெருக்கத்தின் மௌனத்தில்
நான் உன் உணர்வோடு கலந்து போகிறேன்…
67. எழுத முடியாத உணர்வு
உன்னை எழுதையில் வார்த்தைகள் அருவியாய் விழுகிறது…
நிறுத்தவும் இயலாது; தொடராமலும் இருக்க இயலாது…
இந்த எழுத்தும் தானாகவே தன் பாதையைத் தேடி செல்கிறது…
நிறுத்த நினைத்தாலும் அது நின்றிட மறுக்கிறது…
68. கோபத்தின் அமைதி
நீ கோபப்படும் தருணம் என் நாளை இருளாக்குகிறது…
காரணம் தெரியாத அந்த மௌனம் மனதை காயப்படுத்துகிறது…
புன்னகை முகத்தில் இருந்தாலும் உள்ளம் சுருங்குகிறது…
சொல்லப்படாத கோபம் உள்ளுக்குள் கரைந்து எரிகிறது…
வார்த்தையில்லாத அந்த அமைதி தான் அதிகம் வலிக்கிறது…
சில வலிகள் சொல்லப்படாமலே உயிரைத் தொடுகிறது…
69. உன் இதழில்
இன்பத்திலும் இமைகள் நனைந்து…
துன்பத்திலும் இமைகள் நனைந்து…
உன் இதழ் என் பார்வையை தொடுவதற்காக…
என் உள்ளம் உன்னை எதிர்பார்க்கிறது…
எத்தனை முறை இமைகள் நனையத் தயாராகின்றன…
உன் இதழ் தொடும் அந்த நொடிக்காக…
70. உணர்வின் சுவை
உன்னை நினைத்து சமைக்கும் நொடியும்…
உணவும் ருசியாக மாறிப் போகிறது…
உன் நினைவு கலந்து அந்த சமையலில்…
வாசம் உயிராய் மலர்ந்து நிறைகிறது…
உண்ணும் தருணத்தில் நீயே சுவையாகிறாய்…
என் உணவில் அல்ல… என் உணர்வில்தான் நீ வாழ்கிறாய்…
71. உன் சாயலில் நான்…
உன் காலில் விழுகையில் என் மனமும் விழுகின்றது…
என் நெற்றியில் உன் உருவம் பதிந்து நிற்கின்றது…
தாழ்ந்தது உடல் மட்டும் அல்ல…
உன்னிடம் என் உயிரும் தலைவணங்குகின்றது…
72. நம்மோடு இருக்கும் ரகசியம்
உலகம் அறியாத ஒரு மொழி உண்டு…
அதை நம் பார்வைகள் சொல்லும்…
வார்த்தைகள் மறந்து போகும் இடத்தில்…
உணர்வுகள் கை கோர்த்துக் கொள்ளும்…
நேரமும் தன்னை மறந்து ரசிக்கும்…
நம் நெருக்கத்தின் மௌனத்தை…
நீயும் நானும் அல்ல அங்கே…
அன்பு மட்டும் உயிரோடு இருக்கும்…
73. தீராத ரசனை
உன்னை ரசித்துக் கொண்டே இருக்கிறேன்…
ரசனைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மறந்து…
அளவு கடந்தால் அமுதமும் விஷமாகும் என்பார்கள்…
உன்னை ரசிப்பதில் மட்டும் அந்த விதி மறுக்கிறது…
பார்வை உன்னை விட்டு விலக மறுக்கிறது…
மனம் உன்னிலிருந்து நிறைவு பெற மறுக்கிறது…
நாள் கடந்தும் குறையாத ஓர் உணர்வாய்…
உன்னை ரசிக்கும் ஆசை மட்டும் வளர்கிறது…
74. மெய்யழகு
நீ சிரிக்கையில் மனம் சிலிர்க்கிறது…
நீ நடக்கையில் பார்வை திகைக்கிறது…
நீ நிற்கையில் நேரம் நின்றிடுகிறது…
நீ பேசுகையில் இனிமை பெருகுகிறது…
உன் அசைவெல்லாம் கவிதையாகிறது…
உன் பார்வையெல்லாம் உயிராகிறது…
அழகு என்ற சொல்லும் மௌனமாகிறது…
உன்னை கண்ட பின் அர்த்தம் பெறுகிறது…
75. இதயத்தின் பயம்
நீ யாரிடமோ பேசும் போது...
என் மனம் ஏனோ அமைதி இழக்கிறது...
உன் மீது நம்பிக்கை இல்லாமல் அல்ல...
உன் அன்பில் சந்தேகம் கொண்டும் அல்ல...
சொல்ல முடியாத ஒரு பயம் மட்டும்...
என் இதயத்தின் ஆழத்தில் உறங்குகிறது...
அது காதலின் உரிமையா, பாசத்தின் ஏக்கமா...
எனக்கே தெரியாமல் உன்னில் கரைகிறது...
76. தீபத்தின் ஒளி
மாலை வானில் நிலா மட்டும் விழித்திருந்தது...
தீப ஒளியில் நீ என் கரம் பிடித்திருந்தாய்...
அன்றொரு நொடி தொடங்கிய நம் உறவு...
இன்றுவரை இனிமையாய் தொடர்கின்றது...
இருள் வந்த போதெல்லாம் துணையாய் நின்றாய்...
இதயமெங்கும் நம்பிக்கையை விதைத்தாய்...
அன்று ஏற்றிய தீபம் அணையவில்லை...
இன்று என் வாழ்வாய் ஒளி வீசுகின்றாய்...
77. காணாத உண்மை…
காற்றைப் பார்த்ததில்லை...
ஆனால் அதன் மென்மையை ரசித்திருக்கின்றேன்...
தண்ணீரின் நிறத்தைக் கண்டதில்லை...
ஆனால் அதன் மதிப்பை அறிந்திருக்கின்றேன்...
கடவுளை கண்களால் பார்த்ததில்லை...
ஆனால் அவரது அருளை நம்பியிருக்கின்றேன்...
உன் மனதின் ஆழம் முழுவதும் புரியவில்லை...
ஆனால் உன் அன்பை என் உலகமாய் கொண்டிருக்கின்றேன்...!
78. அன்பின் முழுமை நீ…
அம்மாவின் அன்பாய்… அப்பாவின் அரவணைப்பாய்… அண்ணனின் பாதுகாப்பாய்… அக்காவின் நெருக்கமாய்…
நண்பனின் நம்பிக்கையாய்… உறவின் உறுதியாய்…
கடலின் ஆழமாய்… வானத்தின் விசாலமாய்… மழையின் மென்மையாய்…
அந்த எல்லா உணர்வுகளும் உயிர் பெற்று… ஒரே வடிவமாய் என் வாழ்வில் வந்தாய் நீ…
79. நன்றி உணர்வு
அழியாத பாசமாய், குறையாத நேசமாய்…
இன்றும் என் வாழ்வை நிரப்பும் உன் அன்பு…
என் அமைதியின் பின்னாலிருந்த ஆறுதலாய்…
என் கண்ணீரைத் துடைத்த மௌனமாய்…
உனக்காக உன்னை உருவாக்கிய இறைவனுக்கும்…
என் உயிர் முழுவதும் கண்ணீருடன் நிறைந்த நன்றி…
80. முடிவில்லா நீ...
உன்னைப் பற்றி எத்தனை கவிதைகள் எழுதினாலும்...
என் வார்த்தைகளுக்கு முடிவு வருவதில்லை...
நிறுத்திவிட நினைக்கின்றேன்...
ஆனால் உன் நினைவு விடுவதில்லை...
ஒரு கவிதை முடியும் தருணத்திலே...
மற்றொரு கவிதை என்னுள் தொடங்கிவிடுகிறது...
இந்தக் கவிதை முடிந்தாலும்...
உன்னை எழுதும் என் மனம் ஒருபோதும் முடிவதில்லை...
முடிவல்ல... தொடரும் நேசத்தின் தொடக்கம்.