புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

தந்தையர் தினம் கவிதை

18 ஜூன் 2023 3,134 பார்வைகள்
தந்தையர் தினம் கவிதை

எழுதுகிறேன் ஓர்கடிதம் ...

அன்புள்ள அப்பாவுக்கு
ஆசையில் ஓர்கடிதம்
எண்ணங்கள் கொண்டு
எழுத்துக்களாக்கி எழுதுகிறேன்

அள்ளி அணைத்து
ஆறுதல் கொடுத்தாயே
துள்ளிய மானென்னை
தூக்கியே சுமந்தாயே

உன்விரல் பிடித்து
உறுதியோடு நடக்கவைத்தே
கண்களின் மணிபோல
காத்திட்ட கடவுளே

உள்ளத்தில் வைத்து
உணர்வோடு பூசித்து
கள்ளமில்லா மனதோடு
கருத்துரைப்பாய் நீயே

தைரியம் அளித்து
தன்னம்மிக்கை ஊட்டி
தளிர்த்துத் தருவாக்கிய
தந்தையும் நீயல்லவா

பாதங்கள் வலிக்குமென
பார்த்துப் பரிதவிப்பாயே
இதயத்தில் சுவாசமாய்
இணைந்த உறவே

துன்பங்கள் சுமந்து
துயர்தனைத் துடைத்து
இன்பங்களை அள்ளி
இனிப்பாக அளித்தாயே

ஒழுக்கத்தை நன்றாக
ஒழுகிட கற்பித்து
தழுவும் மனதால்
தட்டிக் கொடுப்பாயே

உயர்ந்திட வழிசொல்லி
உச்சத்தில் ஏற்றி
பயத்தினைப் போக்கி
பண்புகள் வகுத்தாயே

இன்றும் உன்மடி
இருந்து தவழ்ந்திட
கன்று நானும்
காணாது தவித்திருகின்றேன்

காலனும் உன்னை
கவர்ந்து சென்றானே
காற்றாக மாறி
கலைந்து மறைந்தாயே

வலிக்கிறது நெஞ்சம்
வந்திடுங்கள் அப்பாவே
தள்ளாடி துடிக்கின்றேன்
தாங்கிட வாராயோ

மீண்டும் ஒருசென்மத்தில்
மீட்பாயே தந்தையே
வேண்டும் உன்அன்பு
வேதனையில் வரைகிறேன்

தேடித் தேடி
தேடலில் தொலைகிறேன்
வாடிய மலராய்
வார்த்தையின்றி வாடுகிறேன்

என் எண்ணத்தை
மடலாக்கி தூரிகையில் 
துவளும் மனதோடு
வலிகளை உதிர்த்திட்டேன் 

எப்படிச் சொன்னாலும்
என்உள்ளம் ஆறவில்லை
எழுதுகிறேன் ஓர்கடிதம்
இப்படிக்கு அன்பு மகள்

தமிழ்நதி கிருஷ் அபி இலங்கை 

†******************************************

தந்தையின் தாலாட்டு

கருவில் சுமக்கவில்லை
கட்டியணைத்து கவிபாடி
தோளிலும் மார்பிளும்
தோழனாய் கைசேர்ந்தாய்

உன்ஒற்றை விரலும்
உரம் கொடுத்திடும்
தன்னம்பிக்கை வேர்களை
தந்து வளர்த்திடுவாய்

நானும் கவலைகளின்றி 
வாழ்வதற்கு பாடுபட்டாயே
கடமைகள் காத்திட
நாளும் துன்பப்பட்டாயே

ஆதவனாய் ஒளிகொடுத்து
ஆருயிர் கொண்டாயே
மாதவனாய் இருந்து
மனங்களை வென்றாயே

இரவுபகல் பாராது
இன்னலும் கண்டாயே
வரவினைக் அளிப்பதற்கு
வள்ளலாய் இருந்தாயே

நெஞ்சத்தைப் பூட்டி
நேசத்தைப் புதைத்தாயே
மஞ்சமாய் மடிதனை
மகளுக்குத் தந்தாயே

வேதனைகள் சுமந்து
சாதிக்க வைத்தாயே
வேதங்கள் கற்றிட
வேட்கை வளர்த்தாயே

துணிவைக் கொடுத்து
தூணாக்கி விட்டாயே
பணிவைப் பழக்கி
பண்பாட்டைச் சொன்னாயே

இதயத்தில் இனிப்பாய்
இருத்தி ரசித்தாயே
உதயத்தை பார்த்திட
உச்சியில் ஏற்றினாயே

தந்தையெனும் கடவுள்
கிடைத்திட்ட வரமே
நித்தமும் நினைவில்
வாழுகிறேன் அப்பா

தமிழ்நதி கிருஷ் அபி இலங்கை 

*************************

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

 தரணிக்கு என்னை அறிமுகம் செய்தவர்!    அவர் இன்ப ஊற்றில் உருவானேன்!
   அவரையே எனக்கு முதல்  குரு வாக்கினேன்!

 அவர் என்னை வடித்த சிற்பி !
 அவர் என்னை வரைந்த ஓவியர்!
   அவர் என்னை மார்பிலும் தோளிலும் சுமந்த சுமைதாங்கி!!

 கருவில் சுமக்காது, கருவில் சுமந்தவளையும்! என்னையும், சேர்த்து சுமக்கும் வலி தாங்கி!!

 குடும்ப பாரங்களுக்கும்! இடிகளுக்கும் நல்ல இடிதாங்கி!!
  குடும்ப பாரக் கப்பலின் நங்கூரம் !!
   குடும்பத்தின் அச்சாணி !  குடும்பம் என்ற மலர் செடியின் ஆணிவேர் !

குடும்ப பொருளாதாரச் செடியில் பூவாய் ! நாளும் பூத்துக் குலுங்கும் வாடாத பூ!!

 தன்னலமறியாத, தனக்கென எதையும் சேர்க்காத ,,!
  
  உழைத்து !உழைத்து! ஓடாத்தேயும்ந்தும்!

   தன்கைரேகைகள் அழிந்தாலும்  கவலை கொள்ளாத உழைப்பாளி !
   தன் பிள்ளைகளுக்கு இனிய கூட்டாளி!!
    தன் பிள்ளைகளை வழி நடத்தும் அறிவு திறனாளி !!

   குடும்ப வானத்தில் ஓய்வில்லா சூரியன்!! அவர்தான் அப்பா!!

  குதுகலமாய், குலசாமியாய்!!போற்றிபுகழ்ந்து கும்பிடுங்கள்  இருப்பவர்கள்,,!

   குலகுருவை இதயத்தால்,நினைந்துவாழ்த்தி,வணங்கி! இன்புறுங்கள்!! இழந்தவர்கள்,,!

  
 அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். !
   கவிச்செம்மல் கவிதை மாணிக்கம் 

****************************************

என்னை 
விதைத்தவருக்கு ...
 

மண்ணின் விளைவதற்கு  விதை யானவர் ...

மழையாய் 
  முளைக்க செய்தவர்...

சூரியன்  வெளிச்சம் தருபவர் ...

வேரின் ஈரம் தாங்குபவர்...

இலைகளை வளர   வைத்தவர் ...

பூவின்  வாசம் கொண்டவர்...

காயின் சுவையை அளித்தவர்...

விளைந்ததை பார்த்து ரசிப்பவர்...

கனிந்ததை விற்கச்  செய்பவர்...

எனது தந்தைக்கு மகளாய் .. எனது தந்தையர் தின அர்ப்பணிப்பு.


சைலஜா கணேசன், கோவில்பட்டி..

******************************************


நடமாடும் தியாகிகள்...! (ஆண்கள்....)  தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

முறைத்து பாப்பான்
*முகம் சுளித்தால்*
முன்னுரிமை கொடுப்பான்...!


கோபப்பட்டு பாப்பான்
*கோபித்துக் கொண்டால்*
கொஞ்சி கெஞ்சுவான்...!


அதிகாரம் பண்ண பாப்பான்
*அதட்டி விட்டால்*
அடிபணிந்து விடுவான்...!


மிரட்டி பாப்பான்
*திட்டிவிட்டால்*
சிரித்து விடுவான்...!


அடித்து பாப்பான்
*அழுது விட்டால்*
அணைத்து கொள்வான்...!


சாடி பாப்பான்
*சரிவராது என்றால்*
வாடிவிடுவான்...!


ஏங்கி தவிப்பான்
*பார்த்து விட்டால்*
தாங்கி பிடிப்பான்...!


பெருமை பேசுவான்
*கேட்காவிட்டால்*
பொறுமை அடைவான்...!


சீண்டி பாப்பான்
*எதிர்த்து விட்டால்*
மண்டியிடு வான்...!


அலட்டிக் கொள்வான்
*பார்க்காவிட்டால்*
சுருண்டு விடுவான்...!


*எல்லா உரிமையும்*
*இருந்தும்...!*
தன்னலம்
கருதாமல்
தகுதி பார்க்காமல்...!


*ஆணவம்*
அதிகாரத்தை
*அடகு வைத்து...*

*மானம்*
மரியாதையை
*மறைத்து வைத்து.*

*சுகத்தையும்*
துக்கத்தையும்
*ஒதுக்கி வைத்து...*

*சிரிப்பையும்*
சந்தோசத்தையும்
*ஒளித்து வைத்து...*


பேசத் தெரியாமல்
*பேசி...!*
அலத்தெரியாமல்
*அலுது...!*
கேட்கத் தெரியாமல்
*கேட்டு...*
மறைக்க தெரியாமல்
*மாட்டி...*


*பாதி* சந்தோசம்
மீதி *சன்னியாசம்*
என்று...
வாழ்பவர்களே...
ஆண்கள்...

உங்கள் கவிஞர்
ப.சூர்யசந்திரன்.

**********************************************

அப்பாவாகி...
பார்
எல்லாம்
*தெரியும்*
என்றார்கள்...
பின்னர் தான்
தெரிந்தது
எனக்கு
*அப்பா*
*என்பவர்*
*அடையாளத்திற்கு*
*மட்டுமல்ல*

அன்பை *சுமந்து*
ஆசையை *துரந்து*
பாசத்தை *பகிர்ந்து*
நேசத்தை *சுரந்து*
துணிவை *கரந்து*
பணிவை *முதிர்ந்து*
உழைப்பை *உதிர்ந்து*
துன்பத்தை *அரைந்து*
பொறுமையை *அணிந்து*
எல்லாத்தையும் *கடந்து*
ஒரு 
*குடும்பத்தின் ஆணிவேர்*
என்று...
ஆனால்
அதற்குள்
என் அப்பா 
என்னிடம்
இல்லை...
இறந்து விட்டார்...

மனிதன்
எல்லா வற்றையும்
*அந்த*
*நிலைமைக்கு*
வரும் போதுதான்
உணர முற்படுகிறான்..
அதற்குள்
*வாழ்க்கையோ*
அவர்களிடமிருந்து
*கடந்து*
*சென்றுவிடுகிறது*

நாம்
அனைவரும்
*வாழும்போதே*
*வாழ்வோம்*....!


கவிஞர்
ப.சூர்யசந்திரன்
கம்மங்குடி-நன்னிலம்.

**************************************************

*அப்பா... அப்பா...*

அப்பா 
அன்பினில்
இன்னொரு
அம்மா..

பாசத்தை
வழங்குவதில்
நமக்கான 
பிரம்மா ..

ஒற்றை
விரல்
பிடிக்கையில் 
பரவசம் ..

நிழலாய்
நடக்கையில் 
அதுவும்
ஒரு சுகம் 

தோள்மீது
சுமக்கையில்
தோழனாய்
உற்சவம் .. 

தோள்மீது
கரமாகையில்
தோரணையாய்
உற்சாகம்..

உப்பு
மூட்டையாய்
விளையாட்டில்
சுமந்தாய் ..

கண்ணைப்
பொத்தியே
வேடிக்கையைத்
தந்தாய் ..

பள்ளிச்
செல்கையில்
எனக்காக
வழியானாய் ..

துள்ளி
எழுந்திட
வலியெல்லாம்
நீயானாய் ..

ஒட்டான
சட்டையும்
பிய்ந்த
செருப்பும்,

ஒருநாளும்
மாறவில்லை
எனக்காக
மாற்றவில்லை ..!

வகையான
ஆடைகளை
சுவையான
உணவுகளை,

வாங்கித்
தராமலில்லை
நீயுண்டு
பார்த்ததில்லை ..!

நான்
படித்திட
நீ 
விளக்கானாய் ..

நான்
வளர்ந்திட
நீயே 
தேய்பிறையானாய் ..

முகம்
பார்த்தே
என்னைக்
கண்டறிவாய் ..

சுகம்
காணமால்
மெழுகாய்த்
தானொளிர்வாய் ..

முகப்பு
எழுத்து
தந்தவரும்
நீயே !

பெயரின்
பின்னால்
படிப்பானவரும்
நீயே !

'பிள்ளைங்க
சாப்பிட்டாங்களா'
வாழும்வரை
ஒரே கேள்வி .!

'பிள்ளைங்க
முன்னேறனும்' 
முணுமுணுக்கும்
வேள்வி !

சொத்துச்
சேர்க்காத
சொத்துப்
பத்திரம் ..

சொந்தங்களிடம்
சோர்வாகாத
வலிமையின்
கதாபாத்திரம் ..

வறுமை
வாட்டினாலும் 
வாடாத
குன்றன்றோ !

எளிமையை
விதைத்திடும் 
எங்களின் 
நெல்லன்றோ !

தவறும்
போதெல்லாம்
தாங்கிப்
பிடித்தாய் ..

அயரும்
நாளெல்லாம்
நம்பிக்கை
விதைத்தாய் ..

வேதனை
நிகழ்வுகளில்
அருகில்
இருந்தாய் ..

சாதனை
மலருகையில்
தூரத்திலே
நின்றாய் ..

பட்டம்
வாங்கிட
பட்டமரம்
ஆனாய் ..

பட்டத்
துயரிலும்
உழைப்பின் 
மந்திரமானாய் ..

ஞாயிறிலும் 
ஞாயிறாக 
ஞானத்துடன்
உழைத்தாய் ..

நடிக்காத
வாழ்வினை
வாழ்ந்தும்
காட்டினாய் ..

என்
ரேகையில்
தழும்புகள்
இல்லை !

உன்
கைகளில்
ரேகைகளே
இல்லை !

தந்தே 
பழக்கப்பட்டதால்
எதிர்ப்பார்ப்பதில்லை
தந்தை !

சிறந்தே
விளங்குவதால்
சிறப்பாகும்
சிந்தை !

இருக்கும்
வரை
யாரும்
உணர்வதில்லை ..!

உணரும்
வரை
அப்பாவுக்கு
இணையில்லை ..!

தந்தையர் நன்னாள் வாழ்த்துகள்

முனைவர் இரா. இராமகுமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
விவேகானந்தா கல்லூரி
அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம்.

*******************************************

அப்பா... உங்களுக்கு ஒரு கவிதை...!

இறைவனால் அனுப்பப்பட்ட இணையில்லா பொக்கிஷம்...!

அன்னையானவள் கருவில் சுமந்தாள்  பத்து மாதம்...!

தந்தையானவர் மனதில் சுமக்கிறார்   காலமெல்லாம்...!

குடும்பத்தின் அஸ்திவாரமாக திகழ்பவர் தந்தையே...!

தாய் இல்லையேல் அன்பை மட்டுமே இழப்போம்...!

தந்தை இல்லையேல்  வாழ்வில் அனைத்தையுமே இழப்போம்...!

தங்களையே நண்பனாக கரம்பிடித்தே நடை பழகினேன்...!

தங்கள் வழி காட்டலில் வெளியுலகை புரிந்து கொண்டேன்...!

கண்ணை இமைக்காப்பது போல என்னை காத்தவரே...!

தவறு செய்யும்போது திருத்திய ஆசானே...!

புண்படாத செய்கையினால் பொறுப்புடனே வழிநடத்தியவரே...!

கனவுகளை நனவாக்கும் கல்வியை கொடுத்தவரே...!

மண்ணுலகில்  புகழ்பெறவே மனதார வாழ்த்தியவரே...!

பண்பட்ட மனிதனாய் பாரினிலே வாழ வகைசெய்தவரே...!

வானத்து தாரகைகளை   தங்களுக்கு மணிமகுடமாக  சூட்டுகிறேன்...!

தந்தையே உங்களை மண்டியிட்டு வணங்குகிறேன்...!

முனைவர் 

ம.ப.சாந்தி சங்கரி புதுச்சேரி.

***********************************************

 

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE