magizhchifm2020@gmail.com ஞாயிறு, 04 October 2026
⚡ சமீபத்திய
மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day
ஆன்மிகம், மகியின் கட்டுரைகள்

சிவகிரி தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் வரலாறு

27 ஏப்ரல் 2025 Magizhchi FM 2,529 பார்வைகள்
சிவகிரி தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் வரலாறு

" நம்ம குலசாமிகள் " குலதெய்வங்களும் / குலதெய்வ வழிபாடு - சிவகிரி தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன்கோவில்

- முனைவர் ஜெ.மகேந்திரன், மூத்த ஊடகவியலாளர்

முன்னுரை

குலதெய்வ வழிபாடு என்பது நம் தமிழர்களின் குடும்பத்தின் ஒருங்கிணைப்பையும், அவர்களின் வாழ்வின் அடிப்படையையும் அமைக்கிறது. இதில் குறிப்பாக தென் தமிழகத்தில் அய்யனார், கருப்புசாமி, சுடமாடன் சுவாமி, முனியசாமி, காளியம்மன், பேசியம்மாள், இசக்கியம்மன், மாரியம்மன், போன்று பல்வேறு தெய்வங்களை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர், இதில் குறிப்பாக காளியம்மன் வழிபாடு கிராமப்புறங்களில் பரவலாகவும் முக்கியத்துவமாகவும் உள்ளது. காளியம்மன் காளியின் ஒரு வடிவமாகக் கருதப்பட்டு, தீமைகளை அழிக்கும் தெய்வமாக விரும்பப்படும் ஒரு முக்கிய குலதெய்வமாக இருந்து வருகிறது. இதில் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில்கொஞ்சும் பசுமையான மரங்களுக்கிடையே தேவிபட்டினம் என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது தட்டாங்குளத்து காளியம்மன் கோவில்.

இக்கட்டுரை சிவகிரி தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் காளியம்மன் கோவில் வழிபாட்டின் வரலாறு, சடங்குகள், நம்பிக்கைகள், சமூகத்தின் பெண்களுடன் தொடர்பு, மற்றும் நவீன காலத்தில் வழிபாட்டின் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. குலதெய்வ வழிபாட்டின் வரலாற்று பின்னணி - அதன் முக்கியத்துவம்

குலதெய்வம் என்ற சொல் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கும், வழிகாட்டும் தெய்வத்தை குறிக்கிறது. தமிழர்கள் தங்கள் குலத்தின் மரபு மற்றும் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளை பாதுகாப்பது வழக்கமாகும். இது ஆன்மிக வாழ்வின் மையமாகவும், குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும். குல தெய்வம் தான் நமக்கு எளீதில் அருளினை தரும். மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அவற்றை அலட்சியம் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது.

ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குல தெய்வத்தை எவர் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.

ஒருவரின் குடும்பம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு.  திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். என்ற ஐதீகம் நிலவுகின்றது.

குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது. என்ற முன்னோர்களால் சொல்லப்படுகின்றது.  குல தெய்வத்தின் பெருமையை தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறையாவது தம் குழந்தைகளையும் அழைத்துச் சென்று குலதெய்வத்தின் அனுக்கிரகம், அருள், முன்னோர்களின் ஆசியை பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருகிறார்கள்.
இதில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக முக்கியமாக தேவிபட்டினம் தட்டாங்குளத்து காளியம்மன் வழிபாடு தமிழர்களின் பழங்கால திராவிட மரபுகளில் இருந்து தோன்றியது. காளியம்மன் கிராமங்கள், பல்வேறு சமூகங்களின் வாழ்வுடன் நெருங்கிய உறவாக இருந்து வருகிறது.

காளியம்மன், ஒரு குலதெய்வமாக, தனது பக்தர்களுக்கு பாதுகாவலராகவும், தீமைகளைக் காக்கும் சக்தியாகவும் விளங்குகிறாள். காளியம்மன் வழிபாட்டின் முக்கிய அம்சம் அவள் தாயாக இருப்பதோடு, மாறாக கடுமையான போராளி வடிவில் இருப்பது. இதனால், பக்தர்கள் அவளை கருணையையும், கடுமையையும் ஒருங்கிணைத்த தெய்வமாக அடையாளம் காண்கின்றனர். கிராமங்களில் காளியம்மனை எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கும், நோய்கள் மற்றும் சமூகத் தீமைகளைக் காப்பாற்றுவதற்கும் அவளுக்கு வழிபடுகின்றனர்.

காளியம்மனை பற்றிய பல கதைகள் நம்பிக்கைகள் மாறுபட்டாலும், எல்லா கதைகளிலும் அவருக்கு ஒரே அடிப்படை விளக்கம் உள்ளது. மானுட உலகில் ஏற்பட்ட அநீதி காரணமாக தெய்வீக சக்தியாக மாறியவர் என்று நம்பப்படுகிறது. தேவிபட்டினம் தட்டாங்குளத்து காளியம்மன் கோவில், வரலாற்று சான்றுகளால் பழங்காலம் முதல் பொதுமக்கள் வழிபட்ட ஒரு முக்கிய ஆலயமாகவும் காவல் காக்கும் குலதெய்வமாகவும், வாழிபாட்டின் புனிதத்தலமாகவும் திகழ்கிறது.

2.காளியம்மன் பற்றிய புராண கதை

காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள 'காலா' என்ற ஆண்பெயரின் பெண்பாற்பெயர் ஆகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்குக் 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியத்திலும் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. நம்ம ஊர்களில் 'காளியம்மன்!' இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. 'அவளா.. அவ ஒரு காளி ஆத்தா!' கோபப்பட்ட காளி ஆத்தா மாதிரி ஆடிருவாள் என்று சிலரை பற்றிக் கூறுவதுண்டு. ஏதோ ஒரு பொல்லாத்தனத்தைப் பார்த்து இப்படிச் சொல்வர். காளி படம் வீட்டில் வைக்கலாமா, பூஜை செய்யலாமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுவர். ஆனால், 'காளி' என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி, அவளிடம் ஈடுபாடு ஏற்படும். காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக எடுத்த அவதாரம். இவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள்.

'அறியக் கூடியவள் நான், அறிய முடியாதவள் நான், ஞானமும். அஞ்ஞானமும் நான். பிறப்பும், பிறப்பில்லாததும் நான், கீழும், மேலும் நான், சகலமும் நான்..' என்கிறாள் காளி. உண்மையை மறைத்துக் காட்டுகிறாள். உண்மையைப் புரிந்து கொண்டால் ஸ்வரூபத்தைக் காணலாம். காளியின் இருப்பிடம் மயானம். பேதங்கள் ஒழிந்து. அகங்காரம் அழிந்து, பஞ்ச பூதங்களோடு மனித சரீரம் லயமாகி விடுகிற நிச்சலமான இடம் 'ஆடிப் பாடி மகிழ்ந்த போது, என்னை நீ மறந்திருந்தாலும், நான் உன்னை மறக்காமல், உனக்காக உன்னை எதிர்பார்த்து இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். உன் கடைசி காலத்திலாவது, என் அருள் உனக்கு கிடைக்கும். நான் உலகத்தின் உயிர் தத்துவம். உலகினின்று நான் பிரிந்தால், உலகம் சவமாகிக் கிடக்கும்.

'இதை விளக்கத் தான், நான், சிவ ரூபமான சவத்தின் மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம். ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம். நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும். அதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன். சரீரத்தில் தலையே பிரதானம். அதுவே, ஞான சக்தி நிலையம். இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது.

'பிரமாண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள் அவளே. சங்கல்ப மாத்திரத்தில் விளையாட்டாகவே செய்யக் கூடியவள். இந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள். அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம். கீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம். வர, அபய முத்திரை, பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது. ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப் பட்டுள்ளது. அஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை இல்லாமலிருப்பது விளக்குகிறது. பராசக்தி சிரிக்கிறாள்; அட்டகாசமாகச் சிரிக்கிறாள். 'வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே...' என்கிறாள். வாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு, அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர்.

காளியை வழிபட, பலவித பூஜா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இது தவிர, காளியின் அருள் பெற, அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும். ஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் பிரீதியடைகிறாள். காளி கவசம், காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன. முறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று. சகல பாக்கியங்களையும் பெறலாம். 'காளி... காளி...' என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம். நன்மை செய்யத்தான் காவல் தெய்வமாக நம்மையெல்லாம் காத்து நிக்கிறாள் காளியம்மமன்.

2. தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலின் வரலாறு

தேவிபட்டினம் தட்டாங்குளத்து காளியம்மன் கோவில், தேவிபட்டினம் அருகில் சிவகிரியில் அமைந்துள்ளது. இக்கோவில் தொன்மையானதாகும் மற்றும் இதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் ஆன்மிகம் குறித்து விரிவாக அறிந்து கொள்வது முக்கியம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகும். இது பண்டைய காலத்தில் துவங்கியதென்று கருதப்படுகிறது, அங்கு காளியம்மனை ஒரு காவல் தெய்வமாகக் கருதி, கிராமத்தைப் பாதுகாக்கும் தெய்வமாக மக்களால் வழிபடப்பட்டார். காளியம்மன் பாசங்கரின் ஆறுகளையும், கொடுங்காற்றுகளை நெருங்காமல் தடுத்து மக்கள் சுகபோகவுடனும், நிம்மதியுடனும் வாழ இருப்பதாக நம்பப்படுகிறது.

தென்னிந்தியாவில் காவல் தெய்வங்களுக்கான வழிபாட்டு மரபு மிகப் பழமையானது. குறிப்பாக, கிராமப்புறங்களில் தெய்வங்களை ஊரின் காவலராய்க் கருதுவது வழக்கம். இந்த கோவிலின் வரலாற்றைத் தெளிவாக அறிய வரலாற்று ஆவணங்கள் இல்லாதபோதிலும், மரபு வழியில் சொல்லப்படும் கதைகள், பழமையான சிற்பக் கலைகள், கட்டிடக் கலையால் இக்கோவிலின் தொன்மையை அறியலாம்.

3. கோவிலின் அமைவிடம் மற்றும் அமைப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் கிராமத்தில் தட்டாங்குளம் காளியம்மன் அமைந்துள்ளது, அழகான தோரண வாயிலின் மேல் புறத்தில் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானுக்கும் சிலை மற்றும் சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் காளியம்மன் உருவம் பதித்த தோரண வாயில் அமைந்துள்ளது. குன்றா வரம் தருகின்ற ஸ்ரீ காளியம்மனின் கோவில் குன்றத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. இந்தக் குன்றத்தை தட்டான்குளம் மலை என்றும் தங்க மலை என்றும் அழைக்கிறார்கள். இந்தக் குன்றத்திலே தூண் அமைத்து அதில் மணி கட்டி இருக்கின்றது இந்த மணியை காளியம்மன் கோவிலிலே உச்சி கால பூஜை நடக்கின்ற பொழுது ஒலி செய்கின்றார்கள்.கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் இந்த குன்றத்திற்கு வந்து மணி ஒலிக்கச் செய்து மனமகிழ்கின்றனர். ஸ்ரீ காளியம்மன் கோயிலுக்கு வெளியே தலைமலை வீரப்பசாமியும், ஸ்ரீ கருப்பசாமி யும் அருள் காட்சி கொடுக்கின்றனர். காளியம்மன் கோவிலுக்கு செல்லும் முன்னே மகா மண்டபத்தின் மேல் உள்ள மாடத்தில் காளியம்மனின் திருவடி அமைக்கப்பட்டுள்ளது. மனா நிம்மதி தரும் நல்ல ஓவியங்களையும் அருளார்ந்த அமைதி சூழலும் கொண்டு ஆன்மீகத்திற்கு ஏற்ற நல்ல இடமாக விளங்குகிறது இந்த திருக்கோவில். கருத்தை கவரும் சுதை சிற்பங்கள், சிலைகளைக் கண்டு கவின்மிகு காட்சி தருகிறது காளியம்மன் கோவில் விமானம்.காவியங்கள் புகழ்கின்ற தெய்வங்கள் உறைகின்ற கோவிலாகவும் அமைந்திருக்கின்றது. அதைப்போல் இங்குள்ள ஓவியங்களின் திருவ வடிவங்களை நிறைய காணலாம். சித்தர் பெருமானின் சிலையும் இங்கு அமைந்துள்ளது. இந்த சித்த பெருமானை லாட சன்னியாசி என்று அழைக்கின்றார்கள். அடுத்து ஸ்ரீ சப்த கன்னியர்களின் சந்நிதியும் இந்த திருக்கோவிலில் உள்ளது . வில்லுடன் காட்சி தரும் இறைவனும் அவரது தேவியின் சிலையும் இருக்கிறது. குறவன் குறத்தியாகவும் வேடன் வேடுவச்சியாகவும் இந்த சிலைகள் காட்சி தருகின்றன. பொதுவாக பல கோயில்களில் காணாத தெய்வங்களை இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். இக்கோவிலின் அமைவிடம், அதன் இயற்கை சூழல் மற்றும் புனிதமான குளத்தால் மேலும் சிறப்பிக்கப்படுகின்றது. கோவிலின் சுற்றுப்புறம் பசுமையான நிலங்களால் சூழப்பட்டுள்ளது, இது கோவிலின் புனிதத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றது. கோவில் கட்டமைப்பு பாரம்பரியமான துர்கா மற்றும் காளி வழிபாட்டு க்ஷேத்ரங்களை பிரதிபலிக்கிறது. மூலஸ்தானம், அம்மனின் சன்னதி, அர்ச்சகர் சேவை செய்யும் இடம், மகாமண்டபம், கொடிமரம், வெளிப்பகுதியில் உள்ள பலிவேடைகள் ஆகியவை அங்கு காணப்படும் முக்கியமான பகுதிகளாகும். கோவிலின் சன்னதியில் காளியம்மன், மிகவும் உற்றக்கண் கொண்ட, சூரியன் மற்றும் சந்திரனை வலக்கை, இடக்கையில் ஏந்தியிருக்கும் மிக உயர்ந்த வடிவத்தில் காட்சியளிக்கின்றார்.

4.நேர்த்தி கடன் நிவர்த்தி செய்தல்

ஒரு நாகலிங்கம் மரம் இங்கு அமைந்திருக்கின்றது இந்த மரத்தில் குழந்தை வரம் வேண்டுகின்ற பெண்கள் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு முந்தானையில் உள்ள சேலையை கிழித்து அதில் எலுமிச்சம்பழம் அல்லது கல் முடிந்து தொட்டில் அமைத்து நாகலிங்க மரத்தில் கட்டுகிறார்கள். குழந்தை செல்வத்தினை அருள்கின்ற விதமாக ஸ்ரீ பேச்சியம்மன் சிலையும் அமைந்துள்ளது. இந்த பேச்சியம்மன் சிலை நான்கு கரங்களுடன் தனது ஒரு கரத்தில் குழந்தையை பிடித்தவாறு தரிசனம் தருகிறார் . குழந்தை வரம் வேண்டும் பெண்கள் பேச்சியம்மனுக்கு மஞ்சள் கயிறு கட்டி குழந்தை வரம் வேண்டுகின்ற பழக்கம் இங்கு இருந்து வருகிறது. அன்னையானவள் குழந்தைகளை தொட்டிலிட்டு ஆட்டுவாள் குழந்தைகளான பக்தர்களின் பொருட்டு அன்னை தேவி இங்கு ஊஞ்சலில் ஆடும் காட்சியை காண முடிகிறது. அகிலத்தை கட்டி ஆடும் காளி தேவி இங்கு ஊஞ்சலில் ஆடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக பேச்சியம்மனுக்கு மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் இந்த பேச்சியம்மனுக்கு மஞ்சள் கயிறும் வளையலும் அணிவித்து தொட்டிலை ஆட்டி விடுகின்ற பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது.

5. கம்பீரமாக காட்சி தரும் காளியம்மன்

கோவிலின் மூலஸ்தானத்தில் அம்மனின் மிகச் சிறந்த உருவம் காணப்படும். காளியம்மன் செந்நிறத் தோற்றத்துடன் பவனி கொடுப்பதை போல காட்சியளிக்கிறார். அவளது கண்கள் பக்தர்களை நேராகக் காண்பதை போல இருப்பதால், இது பக்தர்களின் மனதை கவர்கின்றது. காளியம்மனின் திருவுருவம் மிகவும் விசேஷமானதாகும், அது ஆழ்ந்த பாசமும், மகத்தான சக்தியும் கொண்டதாக கருதப்படுகிறது. இக் கோவிலில் மூலவரான காளியம்மாள் வீற்றிருக்கும் கருவறையின் முன் மண்டபத்தில் கஜலட்சுமி அன்னை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கருவறையில் காளியம்மன் கம்பீரமாக நின்ற தோற்றத்துடன் திரு காட்சி தருகின்றார். வீரம், தீரம், ஆற்றல்,வல்லமை,நீதி,அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காளியம்மனைக் காண கண் கோடி வேண்டும் என்று தான் கூற வேண்டும். அகிலத்தை காக்கின்ற காளியம்மனின் திரு கண்கள் அருள் ஒளியாள் பொலிவு பெற்று விளங்குகின்றது. ஐந்து தலை நாகங்கள் குடை விரிக்க விவேகத்துடன் பேரரசியாக காட்சி தருகிறார். இந்த காளி தேவியின் சிலை எட்டு திருகரங்கள், உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது இதில் கோடங்கி, கத்தி, அரக்கன் தலை, விபூதிக்கப்பரை, சாட்டை, பாம்பு, சூலம், சிங்க வாகன தலை, ஆகியவற்றை கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. அரக்கனை மிதித்து நிற்கின்ற வீர தீர நீதிக்கோளத்தில் காளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மனதிற்கு நிறைவான தரிசனம் பக்தர்களின் இதயங்களில் நன்னம்பிக்கையினை விளைவிக்கின்ற அருள் காட்சி தருகிறார். காளியம்மன் கொண்டுள்ள கருணைக்கு அளவே இல்லை என்று சொல்லலாம், இவள் செய்கின்ற திருவருளுக்கும் அளவே இல்லை..! ஆனி மாதம் திருவிழா கண்டு திருவருள் புரிகிறாள். இந்த தட்டான் குளத்து காளியமனை வணங்கி வழிபடுபவர்களுக்கு இம்மையும், மறுமையும் நலமாக அமையும் என்பது உறுதியான ஒன்றாகும். அனிமா மகிமா, லகிமா என்று விவரிக்கும் அஷ்டமா சித்திகளும் காளியை வழிபடுவதனால் நமக்கு சித்திக்கும் என்றால் நாம் அன்றாடம் சந்திக்கும் துன்பங்கள் எம்மாத்திரம்..! அச்சம், கவலை, துன்பம், பகை,என்று நடுக்கம் தரும் எவை எதிர் பட்டாலும் தட்டான்குளம் காளியம்மனை சரணடைந்து காளி... காளி.. காளி... என்று காளியின் திருநாமத்தை சொல்லுங்கள்... அலங்கார ரூபியாக காட்சி தரும் இந்த தட்டாங்குள காளி தேவியின் பாதங்களில் நம் எண்ணங்கள் குவியட்டும் அதுவே நம் பாக்கியம் என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர் .

6. காளியம்மன் வழிபாட்டின் முக்கியத்துவம்

காளி அம்மன், தன் கோபத்தால் தீய சக்திகளை அழிக்கக்கூடிய வீரத்தமிக்க தெய்வமாக அறியப்படுகின்றார். இக்கோவிலில் காளியம்மன், தெய்வீக சக்தி கொண்ட அம்மனாக மதிக்கப்படுகிறார். மக்களிடம் உள்ள நம்பிக்கையின்படி, காளியம்மனுக்கு ஒரு முறையாக பூஜைகள் செய்யப்படுகின்றால், அனைத்து வகையான துன்பங்களும் அகலும். நோய்கள், பாவங்கள், பிரச்சனைகள், குடும்ப தகராறுகள் போன்றவை காளியம்மனின் அருளால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மக்கள் காளியம்மனிடம் பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். இதில் நினைத்த காரியம் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக மொட்டையிடுதல்,பொங்கலிடுதல் ,காதுகுத்து விழாக்களும் நடைபெறுகின்றன. இது தவிர முக்கியமாக ஆடு,கோழி களை பலியிட்டு அந்த மாமிசத்தை உணவாக சமைத்து காளியம்மனுக்கு படையலிட்டு அன்னதானமாக வழங்கி தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மன் அருள் பெறுகின்றனர் . முளைப்பாரி என்பது காளியம்மன் கோவிலின் மற்றொரு முக்கியமான நேர்த்திக்கடனாகும். பெண்கள் எடுத்து வரும் முளைப்பாரிகள், பச்சை பயிர்களை வளர்த்துக் கொண்டு கோவிலுக்கு வந்து அம்மனிடம் காணிக்கையிடுகின்றனர். இது வாழ்வில் செழிப்பு மற்றும் நலம் பெற வேண்டியதற்காக செய்யப்படும் நேர்த்தி ஆகும். இவ்வகை தீவிரமான வழிபாட்டு முறைகள் மக்கள் மனதில் ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குகின்றன. காளியம்மன் சில பக்தர்களின் உடலுக்குள் சென்று, தெய்வீக அறிவுறுத்தல்களை வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வில் சில பெண்கள் அல்லது பூசாரி களுக்கு காளியம்மன் உடலுக்குள் வந்து, அவள் பெயரால் பக்தர்களுக்குப் பரிகாரம் சொல்வார்கள். அதை ஏற்று நேர்த்திக்கடனை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்துவார்கள் .

 7. கோவிலில் நடைபெறும் விழாக்கள்

தட்டாங்குளத்து காளியம்மன் கோவிலில் வருடாந்திரமாக பல திருவிழாக்கள் மிகுந்த பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகின்றன. முக்கியமாக, "ஆடி மாத திருவிழா" ஆனி மாத திருவிழா " மற்றும் "பங்குனி உத்திரம் திருவிழா" மிகவும் பிரபலமானவை. ஆடி மாதத்தில், பெண்கள் அம்மனை வணங்க தங்கள் குடும்ப நலனுக்காக விரதம் இருக்கும். இந்த மாதத்தில் நடைபெறும் அம்மனின் காப்பு கட்டுதல் விழா, மூன்றாவது நாளில் காப்பு அகற்றும் விழாவாக முடிவடைகிறது. பங்குனி மாத திருவிழா, காளியம்மன் திருவிழா என்ற பெயரில் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில், பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி காணிக்கைகள் வழங்குவர். முக்கிய நிகழ்வுகளில் முளைப்பாரி, மாவிளக்கு ஏற்றுதல், பொங்கலிடுதல் ஆகியவை இடம்பெறுகின்றன. இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும்,பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வந்து கூடுவார்கள். காளியம்மன் பொங்கல் திருவிழாவை உள்ளூர் மக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

 8. காளி பூஜைகள் மற்றும் பூஜை முறைகள்

காளியம்மனுக்கு செய்யப்படும் பூஜைகள் மிகவும் விசேஷமானவை. இங்கு நவராத்திரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அவளது முகத்திலிருந்து மக்கள் அம்மனின் அருள் பெற்றுக் கொள்ள முடியும். அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், தாமரை, வெற்றிலை, இலையோடு, மிளகு போன்ற பலவகை பூக்களும், பண்டங்களும் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், வியாபாரம் சிறப்பாக நடைபெறவும், நோய்கள் நீங்கவும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். மேலும், மக்கள் அவளிடம் தங்களின் கோரிக்கைகளை பிரார்த்தனை செய்வதோடு, அம்மனுக்கு நன்றி தெரிவிக்கவும் வருகின்றனர். பிள்ளை வரம், திருமணம் செழிப்பானது போன்ற பல பிரார்த்தனைகள் காளியம்மன் அருளால் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

8. தற்கால சிறப்புக்கள் மற்றும் சமூக பங்களிப்பு

இக்கோவிலில் நடைபெறும் பண்டிகைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் சமுதாயத்தின் கலாச்சாரத்தின் முக்கிய பங்காக இருக்கின்றன. கோவிலில் பங்கேற்கும் மக்கள் சமூக நல்லுறவுகளை மேம்படுத்துவதோடு, தங்களின் ஆன்மிக வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றனர். பக்தர்கள், குடும்ப உறுப்பினர்கள், வியாபார அமைப்புகள் எல்லோருமே இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குபெற்று, சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை வழங்குகின்றனர்.

தட்டாங்குளத்து காளியம்மன் கோவிலின் புகழ், பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் அருளால் . இங்கு வாழும் சித்தர்கள் மற்றும் முனிவர்கள், காளியம்மனைப் பற்றிய பலவிதமான ஆன்மிக விளக்கங்களை மக்களுக்கு வழங்குகின்றனர். இவர்கள் வழிபாட்டு முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் பக்தர்களுக்கு ஆன்மிக ஞானத்தை வழங்குகின்றனர். காளியம்மன் வழிபாடு என்பது சமூக ஒருங்கிணைப்பிலும், கலாச்சார விழாக்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது. கிராமங்களில், கோயில் திருவிழாக்கள் முக்கியமான சமுதாய நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படுகின்றன. இவை மக்கள் ஒருங்கிணைப்பைக் கொண்டு வருகின்றன, மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கின்றன. இன்றைய காலகட்டத்தில், காளியம்மன் வழிபாட்டின் முக்கியத்துவம் மறுபடியும் காணப்படுகிறது. பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள், காளியம்மன் வழிபாட்டு மரபுகளை ஆராய்ந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றனர். தட்டாங்குளத்து காளியம்மன் கோவிலின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கை மிக விரைவாகப் பல மடங்கு உயர்ந்து வருகின்றது. இதனால், கோவிலின் பூஜை முறைகள், திருவிழாக்கள், சடங்குகள் அனைத்தும் மேலும் சிறப்பாக நடைபெறுகின்றன.

முடிவுரை

தட்டாங்குளத்து காளியம்மன் கோவில் என்பது வெறும் கோவில் மட்டுமல்ல, அது பக்தர்களின் வாழ்க்கையில் பிரயாணமாக உள்ளது. காளியம்மன் என்ற பெயர், தமிழில் "அம்மன்" (தாய்) என்ற சொல் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது அவள் தாயின் வடிவத்தை பிரதிபலிக்கிறது. புராணக்கதைகளின்படி, காளியம்மன் ஒரு வீர தெய்வமாகவும், சமயத்தின் காவலரான கடவுளாகவும் இருந்தாள். சாமானிய மக்கள் அவளை வணங்கி, சமூகத்திற்கான பாதுகாப்பை வேண்டிக்கொண்டனர்.

காலகாலமாக, அவளுடைய வழிபாடு கிராமப்புறங்களில் அதிகமாக உருவாகியது. நச்சுப் பூச்சிகள், திடீர் நோய்கள், மற்றும் கயவர்களின் ஆவிகள் எனப்படும் தீய சக்திகளை அழிக்க, காளியம்மனை வணங்குகின்றனர். குலதெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கித்து காவல் தெய்வமாக மக்களை காத்தருள்கிறாள் தட்டாங்குளத்து காளியம்மன். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்   சிறுதெய்வமாகவே காணப்படும் இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்தி குலதெய்வமாய விளங்கும் தேவிபட்டினம் தட்டாங்குளத்து காளியம்மனை குடும்பத்துடன் சென்று பூஜை செய்து அம்மனின் ஆசியைப் பெறுவோம்...! 

நலமுடன் வாழ்வோம் ...!

குறிப்பு : இந்த கட்டுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல்த்துறை சார்பாக காவ்யா பதிப்பகம் வெளியிட்ட நம்ம குலசாமிகள் ஆய்வுகட்டுரை நூலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

- கட்டுரையாளர்

முனைவர்.ஜெ.மகேந்திரன் ,

மூத்த ஊடகவியலாளர் ,

8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE