magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கதைகள்

பேசாத கதைகள் சொல்லும் உண்மை...

05 ஜனவரி 2026 Magizhchi FM 302 பார்வைகள்
பேசாத கதைகள் சொல்லும் உண்மை...

இந்த உலகத்தில்

பேசப்பட்ட உண்மைகளைவிட

பேசப்படாத உண்மைகளே அதிகம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்

யாரிடமும் சொல்ல முடியாத

சில வலிகள்,

சில தீர்மானங்கள்,

சில தவறுகள்,

சில மௌனங்கள்

அப்படியே புதைந்து கிடக்கின்றன.

அவை கூச்சலிடுவதில்லை.

ஆனால்…

மனசுக்குள் மெதுவாக பேசிக்கொண்டே இருக்கும்.

இந்தப் புத்தகம்

அரங்க மேடையில் பேசப்படும் கதைகள் அல்ல.

பத்திரிகை தலைப்பாக மாறிய சம்பவங்களும் அல்ல.

இவை—

நம்மோடு வாழும் மனிதர்களின்,

நாமே அனுபவித்திருக்கக் கூடிய,

அல்லது ஒருநாள் நாமே ஆகிவிடக் கூடிய

பேசாத கதைகள்.

 

இந்த 50 கதைகளும்

ஒரு நீதியை கற்றுக்கொடுக்கவே எழுதப்படவில்லை.

ஒரு முடிவைச் சொல்வதற்காகவும் இல்லை.

மாறாக,

“நீ இதை எப்படி பார்க்கிறாய்?”

என்று வாசகனிடமே

ஒரு கேள்வியை வைக்கவே எழுதப்பட்டவை.

சில கதைகள் உங்களை நிறுத்தும்.

சில கதைகள் உங்களை நெகிழ வைக்கும்.

சில கதைகள்

“நான் இப்படித்தான் இருந்தேன்…”

என்று உங்களை நினைக்க வைக்கும்.

ஒரு கதையாவது

உங்கள் மௌனத்தைத் தொட்டால்,

ஒரு வரியாவது

உங்கள் மனசுக்குள் சின்ன அதிர்வை ஏற்படுத்தினால்,

இந்த நூல்

தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிடும்.

இவை கதைகள் மட்டுமல்ல.

இவை

வாழ்க்கை சொல்லாமல் விட்ட

உண்மைகளின் ஒலி.

பேசாத கதைகள் சொல்லும் உண்மை

அந்த உண்மையை

நீங்களே கண்டுபிடிக்கும் பயணம்.

 

  1. சாட்சி நிற்கும் நிலா  

அந்த கிராமத்தில் வயல்கள் பசுமையோடும், வாய்க்கால்கள் ஓடும் நீர் உயிரோடு இருந்தது. கருப்பன் மற்றும் முத்தையா என்ற இரண்டு உழவர்கள் அந்த வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒழுங்காக வேலை செய்தனர். காலை முதல் மாலை வரை – கருப்பன் மாலை முதல் இரவு வரை – முத்தையா

ஆனால் ஒரு நாள், கருப்பன் தன் நேரத்தை மீறி, முத்தையாவை தாமதப்படுத்தினான்.

முத்தையா அமைதியாக சொன்னான்: “கருப்பா, நீர் பாய்ச்ச நேரம் ஆகுது. கொஞ்சம் விட்டுடுத்து.”

கருப்பன் கோபமாக பதிலளித்தான். வார்த்தைகள் கடுமையாக சண்டை உருவானது. முத்தையா வாய்க்கால் கரையில் மண்ணில் விழுந்தான். அவன் உயிரோடு இருந்தாலும் ஆபத்தான நிலையில் இருந்தான்.

கருப்பன் கையில் இருந்த மம்பட்டியை எடுத்தான். ஒரே அடி. முத்தையா உடனே இறந்துவிட்டான்.

அவன் உடலை வயலின் ஓரத்தில் புதைத்தான்.

முத்தையாவின் இறுதி வார்த்தை கருப்பனுக்குள் ஓலமாக நுழைந்தது: “யாருக்கும் தெரியாது நினைக்காதே… இந்த நிலா சாட்சி சொல்லும்.”

அந்த நாள் முழு நிலா. வானம் அமைதியாக இருந்தது. ஆனால் நிலா தனியாக அந்த சம்பவத்தைப் பார்த்தது.

நாட்கள் ஓடின. மாசங்கள், வருடங்கள் கடந்தன.

முத்தையாவின் மனைவி மற்றும் தாய் காவல் நிலையம் சென்றனர். “என் கணவன் காணவில்லை… என் மகன் திரும்பி வரவில்லை…” ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கருப்பன் வாழ்க்கையை வழக்கம்போல் தொடர்ந்து வாழ்ந்தான். பிள்ளைகள், விவசாயம் என்று வாழ்ந்து வந்தான்.

பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.

ஒரு நாள் இரவு, மின்சாரம் இல்லாமல் இருந்தது. வீட்டுக்குள் புழுக்கம். கருப்பன் வாசலில் நார் கட்டில் படுத்தி படுத்திக் கொண்டிருந்தான்.

முழு நிலா. நிலாவின் ஒளியில் பழைய நினைவுகள் கிளம்பின: வாய்க்கால், சண்டை, மம்பட்டி, புதைக்கப்பட்ட உடல்.

அவன் சிரித்தான். வீட்டு வாசலில் நின்று அவளது மனைவி பார்த்தாள். “எதற்கு நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டாள். அவள் பலமுறை கேட்டும், அவன் சரியான பதில் கொடுக்கவில்லை. இறுதியாக அவள் கேள்வி கேட்டாள்: “நீ எந்த பெண்ணுடன் பழக்கம் வைத்திருக்கிறாய்?”

கருப்பன் மெதுவாக சொன்னான்: “நான் எந்த பெண்ணோடும் தொடர்பில் இல்லை. கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு, முத்தையா வாய்க்காலில் சண்டை வந்த போது, நான் கோவத்தில் கையில் இருந்த மம்பட்டி கொண்டு அடித்தேன். அவன் உடனே இறந்துவிட்டான்.

நான் அந்த உடலை வீட்டின் வயல்காடில் ஒரு இடத்துல புதைத்தேன்.

அவன் இறக்கும் நேரம் சொல்லிய வார்த்தை இன்னும் என் நினைவில் இருக்கிறது: ‘யாருக்கும் தெரியாது என்று நினைக்காதே… ஒரு நாள் நிலா வந்து எனக்கு சாட்சி சொல்லும்.’

அந்த நினைவு தான் என்னை சிரிக்க வைத்தது. இதுவரை இத்தனை வருடங்கள் ஆனாலும், சாட்சி சொல்ல வரவில்லை. ஆனால் அந்த நினைவு இப்போது எனக்கு வந்தது. அதற்காக தான் நான் சிரித்தேன்.”

வாரங்கள் கழிந்தன.

ஒரு நாள் இரவு, தனது மனைவி உணவு பரிமாறினாள். அந்த உணவு மேசையில் வெறும் ரசம் மட்டும் இருந்தது; குழம்பும், பொரியல் எதுவும் இல்லாதது.

கருப்பன் கோபமாக கேட்டான்: “ஏன் வெறும் ரசம் மட்டும் வைத்தாய்? குழம்பும், பொரியல் எதுவும் ஏதுவும் இல்லை?” கோபத்துடன் கையை உயர்த்தினான்.

அதைப் பார்த்த மனைவி சத்தமிட்டாள்: “நீ முத்தையாவை கொன்ற மாதிரி என்னையும் கொல்ல பார்க்கிறாயா?”

அவளது சத்தம் ஊருக்கே ஒலித்தது. மக்கள் எல்லோரும் அந்தச் சம்பவத்தை அறிந்தனர்.

உடனே காவல் நிலையத்திற்கு செய்தி சென்றது. அங்கிருந்து போலீஸ் வந்தனர், சம்பவத்தை விசாரித்து, அவன் மீது நடவடிக்கை எடுத்தனர்.

இன்றைய காலத்தில் பலர் தாங்கள் செய்த தவறுகளையும் “இதுதான் சரி” என்று தங்களுக்கே நியாயம் சொல்லிக் கொள்கிறார்கள். நம்மிடம் எல்லாம் சரியாக இருக்கும்போது அந்த தவறு தவறாகவே தெரியாது. ஆனால் வாழ்க்கை திரும்பி அடிக்கும் போது தான் அந்த தவறின் வலி உணரப்படும்; அந்த வலி, செய்த தவறை விட நூறு மடங்கு கொடுமையாக இருக்கும். எந்த தவறாக இருந்தாலும், அதற்கான தண்டனையை உடனே ஏற்று திருத்திக் கொண்டால், பின்னர் மனசாட்சி இல்லாத வேதனையில்லாமல் நிம்மதியாக வாழ முடியும். நாம் செய்த தவறுகளை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தாலும், நம்ம மேல் எப்போதும் ஒரு கணிப்பாளர் இருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்; அந்த கணிப்பாளர் மனசாட்சி, கடவுள், அல்லது நேரம் ஆகியவையாக இருக்கலாம், அது எப்போதும் நம்மை பார்த்து நியாயம் செய்யும்.

*************************************************************************************************************************

02.அவமானத்தின் விதை – மௌனமாக முளைத்த நாள்

ஒரு அழகிய ஊர். அந்த ஊரில் சுபத்ரா என்ற ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அம்மா, அப்பா இருவரையும் இழந்தவள். அந்த ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் வேலை செய்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாள்.

காலை முதல் மாலை வரை உழைப்பு தான் அவளுக்கு சொத்து. யாரிடமும் குறை சொல்லாதவள். யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாதவள்.

ஒரு நாள், ஒரு வீட்டில் வேலை செய்து முடித்து சுபத்ரா வெளியேறியதும், அந்த வீட்டில் இருந்த பெண் “என் வைர மோதிரம் காணோம்” என்று சத்தமிட்டாள்.

“இப்போதான் இவள் வேலை பார்த்துட்டுப் போனாள்” “இவள்தான் எடுத்திருப்பாள்” என்று ஊர் முழுக்க பேசப்பட்டது.

சுபத்ரா, “நான் எடுக்கல அம்மா… நான் எத்தனை வருஷமா உங்க வீடுகள்ல வேலை பார்த்து உங்களோட சோறைச் சாப்பிட்டு வாழ்றேன்… நான் இப்படிச் செய்வேனா?” என்று அழுதாள்.

ஆனால் யாரும் கேட்கவில்லை. யாரும் சிந்திக்கவில்லை.

ஒரே முடிவு — ஊரை விட்டு வெளியே போ.

அவள் எதுவும் பேசவில்லை. மௌனமாக ஊரை விட்டு நடந்து சென்றாள்.

காட்டுப் பாதையில் அழுதுகொண்டே சென்றபோது ஒரு முனிவர் அவளை பார்த்து “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.

அவள் நடந்ததை எல்லாம் சொல்லி “நான் தவறு செய்யல ஐயா…” என்று உடைந்தாள்.

முனிவர் மெதுவாக சொன்னார்:

“உன்னைப் புரியாதவர்களுக்கு உன் உண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் நேர்மை உன்னை ஒருநாள் உயரத்தில் நிறுத்தும்.”

அருகிலுள்ள நாட்டில் ராணியைத் தேர்ந்தெடுக்கும் விழா நடக்கிறது என்று சொல்லி அவளை அனுப்பினார்.

சுபத்ரா தயக்கத்துடன் சென்றாள். அங்கு நடந்த தேர்வுகளில் அவளின் அறிவும், பணிவும், நேர்மையும் அனைவரையும் கவர்ந்தது.

அவள் தான் அந்த நாட்டின் ராணி ஆனாள்.

ஒரு நாள், அவள் பழைய ஊரிலிருந்து அந்த மோதிரம் தொலைந்த வீட்டுப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்தாள்.

அவள் வந்து பார்த்தபோது சுபத்ரா ராணியாக அமர்ந்திருந்தாள்.

அந்த பெண் அதிர்ச்சியில் ராணியின் காலில் விழுந்து “தவறு என்னோடுதான்… மோதிரம் வீட்டிலேயே இருந்தது… உங்களை சந்தேகித்து ஊரை விட்டு அனுப்பிட்டேன்” என்று அழுதாள்.

ராணி சுபத்ரா சிரித்தாள். அவளுக்கு ஒரு வைர மோதிரத்தைப் பரிசாகக் கொடுத்து சொன்னாள்:

“அன்று நீ என்னை ஊரைவிட்டு அனுப்பவில்லை என்றால் இன்று நான் இங்கே ராணியாக இருக்க முடியாது. அவமானம் தான் என் வாழ்க்கையை மாற்றியது.”

நம்மை உலகம் தவறாகப் புரிந்துகொண்டால் அது முடிவு இல்லை. அது ஒரு தொடக்கம்.

நேர்மை, பணிவு, கடமை — இவை இருந்தால் அவமானமும் ஒருநாள் அரசமகுடமாக மாறும்.

**********************************************************************************************************************************************

03.சுமையைக் கழற்றிய குரு

 

ஒரு காலத்தில், அமைதியான  குருகுலத்தில் துறவறம் பூண்ட  குரு வாழ்ந்து வந்தார். அவருடன் சில சீடர்களும், ஞானத்தைத் தேடும் பயணத்தில் உடனிருந்தனர்.

ஒருநாள் குருவும் சீடர்களும் நடந்து கொண்டிருந்தபோது, அவர்களின் பாதையில் ஒரு ஆறு குறுக்கே வந்தது. அந்த நாளில் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக ஓடியது .

அதே இடத்தில், தலையில் தயிர்கலசம் வைத்துக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள். நீரின் வேகம் காரணமாக அவளால் நடந்து கடக்க முடியவில்லை.

அவள் பணிவுடன் குருவை நோக்கி, “ஐயா… இன்று எனக்கு இந்த ஆற்றை கடக்க முடியவில்லை. தயவு செய்து என்னை அந்தக் கரைக்கு சேர்த்துவிடுங்கள்” என்று கேட்டாள்.

ஒரு நொடியும் யோசிக்காமல், குரு அவளைத் தூக்கினார். அவரும் நீரில் நடக்க முடியாத நிலையில்தான் இருந்தார். ஆனால் துணிவுடனும் கவனத்துடனும், அவளைச் சுமந்து மறுகரையை அடைந்தார்.

பெண்ணை அங்கே இறக்கிவிட்டு, அவளுக்கு வழி காட்டி, குரு தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

சீடர்கள் மௌனமாகவே பின்னால் நடந்தனர். ஆனால் அவர்களுடைய மனங்களில் ஒரு கேள்வி சுமையாக இருந்தது.

பல தூரம் கடந்தபின், ஒரு சீடன் துணிந்து கேட்டான்: “குருவே… நீங்கள் ஒரு துறவி. ஒரு பெண்ணைத் தூக்கி சென்றது சரியானதா?”

குரு நின்றார். மெதுவாகச் சொன்னார்:

“மகனே… நான் அந்தப் பெண்ணை ஆற்றுக் கரையிலேயே இறக்கிவிட்டேன். ஆனால் நீயோ, இதுவரை அவளை உன் மனதில் சுமந்து வருகிறாய்.

துறவறத்தில் ஆண் இல்லை… பெண் இல்லை… உதவி தேடும் மனிதர் மட்டுமே.

உதவி செய்த பின்பு விடுவதே ஞானம்.”

சீடனின் கண்கள் தெளிந்தன. அந்தக் கணமே, அவனது மனச்சுமை கரைந்தது.

சுமை செயலில் இல்லை… எண்ணங்களில் தான் இருக்கிறது.

***********************************************************************************************************************

 

04.உணர்வின் கணம்

ஒரு சிறிய ஊரில், சிவன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் வீட்டின் ஓர் மூலையில், சிறிய சிவன் சிலை ஒன்று இருந்தது. அந்த சிலை அவனுக்கு கடவுள் மட்டுமல்ல… நம்பிக்கை, உறுதி, வாழ்க்கையின் துணை.

ஒவ்வொரு காலையும் அவன் தவறாமல் எழுந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, நெய்வேத்தியம் படைத்து, மனமார வணங்குவான்.

“ஒருநாள் சிவன் எனக்கு காட்சி தருவார்… நான் செய்யும் இந்த பக்தியை அவர் உணர்வார்…” என்ற முழு நம்பிக்கையோடு அவன் நாள்தோறும் பூஜை செய்தான்.

நாட்கள் நகர்ந்தன… மாதங்கள் கழிந்தன… ஆண்டுகள் உருண்டோடின…

ஆனால், சிவன் காட்சியளிக்கவில்லை.

அவன் மனதில் மெதுவாக வருத்தம் குடியேறியது. “இத்தனை ஆண்டுகள் பூஜை செய்தேனே… என் பக்தி உண்மையில்லையா?” என்ற கேள்வி அவனை காயப்படுத்தியது.

ஒரு நாள், மனம் உடைந்து, “சரி… இனி விஷ்ணுவை வழிபடலாம். ஒருவேளை அவர் எனக்கு அருள் புரிவார்…” என்று முடிவெடுத்தான்.

அன்று சந்தைக்கு சென்று, ஒரு விஷ்ணு சிலையை வாங்கி வந்தான். விஷ்ணு சிலையை பூஜைக்கு வைக்குமுன், பல ஆண்டுகள் வழிபட்ட சிவன் சிலையை வீட்டின் மேல் பரணில் எடுத்தான்.

புதிய பூஜை ஏற்பாடுகள் தொடங்கின. சாம்பிராணி, தூபம்… வாசனை வீடெங்கும் பரவியது.

அப்போது, அவனுக்குள் ஒரு சிந்தனை மின்னலாய் தோன்றியது.

“மேல பரணில் இருக்கும் சிவன்… இந்த வாசனை அவருக்கு போகுமோ? அவர் மூச்சில் இது கலந்துவிடுமோ?”

அந்த எண்ணம் அவனை கலங்க வைத்தது. உடனே அவன் பரண்மேல் ஏறி, சிவன் சிலையின் அருகே சென்றான். “இந்த வாசனை சாமியின் மூக்கில் போகக்கூடாது…” என்று நினைத்து, பஞ்சை எடுத்து, சிவன் மூக்கின் அருகே மெதுவாக அடைத்தான்.

அடுத்த கணமே… சிவன் காட்சியளித்தார்.

பக்தன் திகைத்து நின்றான், கண்களில் கண்ணீர், மனதில் ஆச்சரியம்.

“இத்தனை ஆண்டுகள் உன்னை அழைத்தேன், தினமும் பூஜை செய்தேன், நெய்வேத்தியம் படைத்தேன்… அப்போதெல்லாம் வராத நீ, இப்போது ஏன் வந்தாய்?” என்று கேட்டான்.

சிவன் புன்னகையுடன் சொன்னார்:

“இன்று தான் நீ என்னை உணர்ந்தாய். இதுவரை நீ செய்த பூஜை ஒரு கடமை போல இருந்தது, எதிர்பார்ப்போடு இருந்தது. ஆனால் இன்று… ‘இந்த வாசனை கூட என் மூச்சில் கலந்துவிடக்கூடாது’ என்று நினைத்த அந்தக் கணத்தில், என்னை நீ உணர்ந்தாய்.

என்னை ஒரு சிலையாக அல்ல, உயிராக நினைத்தாய். அந்த உணர்வின் கணமே, என்னை உனக்கு காட்சியளிக்க வைத்தது.”

பக்தன் தலைவணங்கி நின்றான்.

சிவன் தொடர்ந்தார்: “பக்தி என்பது பூஜை அல்ல… எதிர்பார்ப்பும் அல்ல… உணர்வே பக்தி.”

அந்த நாள் முதல், அவன் பூஜை செய்தான்… ஆனால் எதிர்பார்ப்பில்லாமல். அவன் உணர்ந்தான்: கடவுள் வெளியில் இல்லை, உணர்வில் தான் இருக்கிறார்.

இந்தக் கதையிலிருந்து நாம் கற்க வேண்டியது:

உறவு, நட்பு, உறவுகள் நீடிப்பது நேரம் அல்ல; உணர்வு தான். நாம் யாரோட இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்று உணர்ந்து, அவர்களுக்கு நெஞ்சார்ந்த கவனம் காட்டினால், அந்த உறவு என்றும் நிலைத்திருக்கும்.

சிறிய வார்த்தையில்: “உறவுகள் உணர்வால் வாழும், நேரத்தால் அல்ல.”

********************************************************************************************************************************

05. “வேர் பிடித்த வளர்ச்சி”

ஒரு கிராமத்தில் இரண்டு அணிகளுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது.

ஒரு தரப்பு,

“இன்றைய சமுதாயத்துக்கு இளைஞர்கள்தான் தேவை” என்றது.

மற்றொரு தரப்பு,

“முதியோர்களின் அனுபவமே நாட்டின் பலம்” என்றது.

வாதம் தீவிரமானபோது, ஒரு நடுவர் வந்தார்.

அவர் சண்டையை நிறுத்தி,

“யார் தேவை என்று பேசுவதற்கு பதிலாக, ஒரு செயலில் நிரூபிப்போம்” என்றார்.

இரு தரப்பினருக்கும் தலா ஒரு செடியைக் கொடுத்து,

“இந்த செடியை யார் அழகாகப் பராமரித்து வளர வைக்கிறார்களோ, அவர்களே இந்த சமுதாயத்துக்கு தேவை” என்று சொல்லி சென்றார்.

இளைஞர் தினமும் அந்தச் செடிக்கு நீர் ஊற்றி, உரமிட்டு, கவனமாக பார்த்து வந்தார்.

முதியோர் அந்தச் செடியை அதிகம் தொட்டதில்லை;

அது வளர வேண்டிய போக்கில் வளர விடுத்தார்.

மாதங்கள் கடந்தன.

ஒரு நாள் நடுவர் வந்து பார்த்தார்.

அன்று அதிர்ச்சி…

இளைஞர் வளர்த்த செடியை காணவில்லை.

முதியோர் வளர விட்ட செடி மட்டும், மெதுவாக ஆனால் உறுதியாய் வளர்ந்து நின்றது.

இளைஞர் பதறி,

“நான் தினமும் கவனித்தேன்…

அப்படியிருக்க இந்த செடி எங்கே?” என்று கேட்டார்.

நடுவர் அமைதியாகச் சொன்னார்:

“நீ செடியை வளர்க்க நினைத்தாய்;

அவர் செடியை நிலை கொள்ளச் செய்தார்.

நீ தினமும் நீர் ஊற்றியதால் வேர் மேலே தங்கியது.

மழை வந்தபோது அது தாங்காமல் விழுந்தது.

ஆனால் இவர், செடியை அதன் போக்கில் வளர விட்டதால்,

வேர் ஆழமாகப் பிடித்தது.

அதனால் இன்று அது நிலைத்திருக்கிறது.”

அனைவரும் அமைதியானார்கள்.

விளக்கம் :

இந்தக் கதை சொல்லும் உண்மை மிக எளிமையானது.

வளர்ச்சி என்பது அவசரத்தில் வருவதல்ல;

நிதானத்தில் உருவாகுவது.

இளைஞரின் முயற்சி தவறல்ல.

முதியோரின் அமைதியும் குறையல்ல.

ஆனால் உண்மையான வளர்ச்சி என்றால்,

அது ஆழமாக வேர் பிடிக்க வேண்டும்.

எந்த போட்டியாக இருந்தாலும்,

எந்த முயற்சியாக இருந்தாலும்,

அதை அவசரமாக இழுத்துச் செல்லாமல்,

அதன் இயல்பை புரிந்து,

அதன் போக்கில் வளர விட வேண்டும்.

அப்போதுதான் மனிதனும்,

சமுதாயமும்,

நிலைத்து நிற்கும்.

***************************************************************************************************************************

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE