பறவைகள்...

புதுக்கவிதை

பறவைகள்...

இரவில் கூடடையாத பறவைகள்
 தலைக்குள் வந்தடைகின்றன

பறவைகளின் சப்தமென்பது
அதன் அன்றாட அங்கலாய்ப்புகளின்றி
வேறேது?

வானம் எத்தனை 
பெரியதாய் 
இருந்தால் என்ன
அங்கே உறங்குவதற்கு ஒரு கிளையில்லையே

சிறகுகள் தான் பறவையென்றாலும்
கால்கள்  தானே பறவையின் இருப்பு.

உறங்குவது போல் தான்
சாக்காடு என்றா லும்
நினைத்தால் உறங்கிவிட முடிகிறதா
அல்லது செத்துவிடவாவது?

இருப்பில் தகிக்கும்
அலகுகளின் துயரத்தை
முழு நீளப் பாடலாய் பாட முடியாதென்றாலும்
கீச்சுக் குரல்களால் 
கத்தி தீர்க்க முடியாதா  என்ன ?

தங்கேஸ்