இருள் பெண்

மொழிபெயர்ப்பு கவிதை

இருள் பெண்

மொழி பெயர்ப்பு கவிதை

SONNET 138  

டார்க் லேடி  (  இருள் பெண் ) 

ஷேக்ஸ்பியர் என்ற ஒப்பற்ற கவியின் மேதமைக்கு இதுவும் ஒரு சான்று 

 ஷேக்ஸ்பியரின் 26 சானட்களில்  தொடர்ந்து  கதாநாயகியாக வரும் பெண் முகம் காட்ட மறுப்பவள் கவிஞரின் காதலியாக இருக்கலாம் ஆனாலும் கவிஞருக்கு மட்டுமே காதலி அல்ல .ஷேக்ஸ்பியர் தன் கவிதைகளில் இவளது அழகை ஆராதிப்பதும் அவளை சாகாவரம் பெற்ற கவிதைநாயகியாக மாற்றியதும் கவித்துவத்தின் உச்சம் /)

கவிதைச்சூழல்

அந்த இருள் பெண் நான் உனக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறேன் என்று சொல்கிறாள். கவிஞர் ஆமோதிப்பாக தலையாட்டுகிறார். நீ  சூது வாது தெரியாத உலகமறியாத இளைஞன் என்கிறாள். அதற்கும் ஆமா என்று கவிஞர் தலையாட்டுகிறார். இது இரண்டுமே பொய் என்று கவிஞருக்கு தெரியும். கவிஞருக்கு இது பொய்யென்பது புரியும் என்பது அவளுக்கும் தெரியும். இருவரும் பரஸ்பரம் பொய்களை பரிமாறிக்கொள்வது இந்த வயோதிகத்தில் காதலுக்கு ஒரு முதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் வழங்குகிறது  என்பது இதை வாசிக்கும் யாருக்கும் புரியும்.

SONNET 138  

டார்க் லேடி  (  இருள் பெண் ) 

‘அன்பே நான் உன்னை மட்டுமே 
மனதில் வரித்திருக்கிறேன் 
உண்மையாக ....

நானறிவேன் அன்பே !

உன் மீது தான் உயிரையே 
வைத்திருக்கிறேன்

அது  எனக்குத் தெரியாதா அன்பே ?

(ஆஹா எவ்வளவு  அழகாக
பொய்சொல்கிறாள் என் காதலி  ?)

பரவாயில்லை
நீ பொய் சொல்லும் போது தான் 
என் காதல் அவ்வளவு 
அழகாகி விடுகிறது 
கண்மணி ?

அன்பே நீ சூதுவாது தெரியாதவன்
அப்பாவிக் குழந்தை 
உன்னை எளிதில் யாரும் 
ஏமாற்றிவிடக்கூடும்

சரி தான் அன்பே !

உலகம் அறியாத பச்சிளம் 
இளைஞன்  நீ 

ஏற்கிறேன் அன்பே !

( அடி அன்பே  ! 
எத்தனை அழகாக 
என் முதுமையை மறைக்கின்றாய்?)

பொய் பேசும் உன் நாவிற்கு 
என் முத்தங்களை கொடையாக  வழங்கட்டுமா ?

அவள் ஏன்  என்னிடம் 
என் மனதில் நிற்பவர்களில்  
நீயும் ஒருவன் என நிஜத்தை  
சொல்லவில்லை ?

நான் ஏன் அவளிடம் 
நான் முதுமையை எட்டிப்பிடித்துவிட்டேன்
என்று என் வயதைக்கூறவில்லை?

ஏன் இருவருமே உண்மையை 
இப்படி கிள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறோம் ?

ஓ காதல் என்றாலே 
நம்புவது என்று தான் அர்த்தமா ?                             ஓ காதல் என்றாலே 
வயதை தொலைப்பது                      
என்று அர்த்தமா ?

இளமைக்குள் இறங்குமுகம்  காட்டும் வயது 
முதுமைக்குள் மட்டும் ஏறுமுகமே காட்டாதோ             
காதலில்  ?

ஓ ... காதலினால்  மட்டுமே நாங்கள்                                ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லிக் கொள்கிறோமோ?

ஓ அழகான பொய்கள் தான் 
எங்கள் அற்பங்களை மறைத்து
உறவுக்கு உயிரூட்டுகின்றனவோ
என்னவோ ?

 
மூலம் – ஷேக்ஸ்பியர்

மொழிபெயர்ப்பு - தங்கேஸ்