12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர்.
அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர்.
இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
94.80 சதவீத மாணவிகள், 89.41 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
+2ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் 96.99% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு 2 வது இடமும், 96.39 % பேர் தேர்ச்சி பெற்று கோவை 3 வது இடமும் பிடித்துள்ளது.
http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.