100 நாள் வேலை திட்டம் சார்ந்த அடிப்படைத் தகவல்கள்

0
234

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் என்பது.(DEMAND DRIVEN SCHEME) இந்திய நாட்டில் வசிக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை,எழுத்துரிமை கருத்துரிமை,சொத்துரிமை வாழ்வதற்கான உரிமை போன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமும் ஒரு அடிப்படை உரிமை.

1.100 நாள் வேலை திட்டத்தில் யாரெல்லாம் வேலை செய்யலாம்?
ஒரு ஊராட்சியில் வசிக்கக்கூடிய வாக்குரிமை பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உடல் உழைப்பைத் தர தயாராக இருக்கின்ற யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

2.100 நாள் வேலை திட்ட அட்டை எப்படி பெறுவது?
ஒவ்வொரு ஊராட்சியிலும் வசிக்கக்கூடிய நீங்கள் உங்களுக்கு 100 நாள் வேலை திட்ட அட்டை வேண்டும் என்றால் உங்களுடைய ஊராட்சி மன்ற செயலாளரையோ அல்லது ஊராட்சி மன்ற தலைவரையோ அனுகி வாய்மொழி வாயிலாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாக கேட்டால் உங்களுக்கு 15 நாட்களுக்குள் 100 நாள் வேலை திட்ட அட்டை வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி.அப்படி 15 நாட்களுக்கு மேல் வழங்கப்படாமல் இருப்பின் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 0.005% உங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் வேண்டும் என்கிறது நூறு நாள் வேலைத்திட்ட சட்ட விதிகள்.

3.100 நாள் வேலை திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு எத்தனை வேலை நாட்கள் வழங்கப்படும்?
நூறு நாள் வேலைத்திட்டத்தை பொருத்தவரை ஒரு குடும்பத்திற்கு மொத்தம் 100 வேலை நாட்கள் வழங்கப்படும்.இது மாநில அரசாங்கங்களின் வழிகாட்டுதலின்படி கூட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டே தவிர குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.ஏனென்றால் மத்திய அரசாங்கம் இந்த திட்டத்தின் குறைந்தபட்ச வேலை நாட்களாக 100 நாட்களை வகுத்து இருக்கிறது.

4.100 நாள் வேலை திட்ட அட்டை இலவசமா?
நிச்சயம்,100 நாள் வேலை திட்ட அட்டை என்பது இலவசமாக வழங்கப்படுவது.இதனை எக்காரணம் கொண்டும் பணம் கொடுத்து வாங்காதீர்கள் யாராவது பணம் கொடுத்தால்தான் வேலை திட்ட அட்டை கிடைக்கும் என்று கூறினால் அவர்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

5.100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி செய்யவும் மற்றும் பணிகளில் அவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் இருக்கிறதா?
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உண்டு அவர்களுக்கு வேலை திட்ட அட்டை நீல நிறத்தில் வழங்கப்படும் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டவும்.மேலும் அவர்களின் ஊனத்தின் சதவிகிதம் 40% சதவீதத்துக்கு மேல் இருந்தால் அவர்கள் குறைந்த பட்ச வேலை செய்தாலும் முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த திட்டத்தில் குறிப்பிட்டுயிருக்கிறது.

6.100 நாள் வேலைத்திட்டத்தில் எதற்கெல்லாம் அனுமதி இல்லை?
100 நாள் வேலை திட்டத்தில் 1.ஒப்பந்ததாரர்கள் இல்லை
2.பெரிய இயந்திரங்களுக்கு அனுமதி இல்லை
3.ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படுகின்ற ஊதியத்தில் வேறுபாடுகள் இல்லை.

7.100 நாள் வேலை திட்ட ஊதியம் குறித்து அடிப்படை தகவல்.
100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படக்கூடிய சம்பளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி கொண்டிருக்கின்றன.இந்த ஊதியம் எப்படி வழங்கப்படுகிறது என்றால் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் துறை சார்ந்து வரைமுறை செய்து ஒவ்வொரு துறையிலும் வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. உதாரணமாக விவசாயத்துறை என்று எடுத்துக்கொண்டால் அதில் கூலி வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நூறு ரூபாய் என்று எடுத்துக்கொண்டால் அதிலும் குறைவாக ஊதியம் வழங்கக் கூடாது என்பது 100 நாள் வேலை திட்டத்தின் சட்ட விதி.அதன்படி தற்போது 100 நாள் வேலை திட்ட பணியில் இருப்பவர்களுக்கு 256 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

8.நூறு நாள் வேலைத்திட்டத்தை பொறுத்தவரை கிராமசபை மற்றும் கிராம பஞ்சாயத்து மிகப்பெரிய பங்காற்ற கூடிய இடத்தில் இருக்கிறது.உங்கள் ஊராட்சியில் என்னென்ன வேலைகள் செய்யலாம்,எந்த இடத்தில் செய்யலாம்,எவ்வளவு ஊதியம் போன்றவற்றை நிர்ணயிக்க கூடிய உரிமை பொது மக்களாகிய உங்களுக்கு நமக்கு உண்டு.அதை நாம் பங்கேற்கக் கூடிய கிராம சபையிலேயே முடிவு எடுப்பார்கள் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

9.100 நாள் வேலைத்திட்டத்தில் எந்தந்த இடங்களிலெல்லாம் பணிகள் செய்யலாம்?
1.பொது இடங்கள்
2.தனியார் இடங்கள்
3.அரசு திட்டங்கள்
4.கட்டுமான பணிகள்

1.பொது இடங்களில் : நீர் மேலாண்மை சார்ந்த பணிகள்
புனரமைப்பு சார்ந்த பணிகள் கால்நடை கொட்டகைகள் தடுப்பணைகள்
சிறுபாசன பணிகள்
காடுகள் வளர்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

2.தனியார் இடங்களில் : ஒரு தனி நபருடைய நிலத்தை மேம்படுத்தி கொடுத்தல் பண்ணைக்குட்டை அமைத்தல்
நாற்றங்கால் பண்ணை அமைத்தல்
தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

3.அரசு திட்டங்களில் : தேசிய வாழ்வாதார திட்டம் மூலமாக கிராமத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொள்ளலாம் அதில் மண்புழு உரம் தயாரித்தல்
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள் சார்ந்த வேலைகள் போன்றவற்றை செய்து கொள்ளலாம்.

4.ஊரக கட்டுமான பணிகளில் :இணைப்புச் சாலைகள்
விளையாட்டு திடல்
பஞ்சாயத்து கட்டிடங்கள்
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள்
உணவு பாதுகாப்பு கிடங்குகள் கிராம சேவை மைய கட்டிடம் அங்கன்வாடி கட்டிடம் போன்றவற்றில் எல்லாம் 100 நாள் வேலை ஆட்கள் மூலமாக பணிகளை மேற்கொள்ளலாம்.

10.100 நாள் வேலைத்திட்டத்தில் சமூக தணிக்கை என்பது மிக மிக முக்கியமான விஷயம்:
சமூக தணிக்கையை தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் மேற்கொள்ளும் இந்த சமூக தணிக்கை சங்கத்தின் உறுப்பினர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஊராட்சிக்கும் வரவேண்டும்.ஒரு நபர் வருவார் ஏழு நாட்கள் உங்கள் ஊராட்சியில் தங்கியிருப்பார். உங்கள் ஊராட்சிக்கு அருகில் இருக்கக்கூடிய ஊராட்சியில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள்,மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியவர்களுக்கு சமூக தணிக்கை சார்ந்த பயிற்சிகளை அளிப்பார்கள்.அதாவது MUSTER ROLL,JOB CARD REGISTER,EMPLOYMENT REGISTER,WORK SITE REGISTER,M BOOK போன்றவற்றை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்த பயிற்சிகளை அளிபார்கள்.நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக உங்கள் ஊராட்சிகளில் செய்யப்பட்ட வேலைகளை கள ஆய்வு செய்வார்கள். ஒட்டுமொத்தமாக இந்த கள ஆய்வு இன்ன பிற ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவற்றை முடித்த பிறகு சமூக தணிக்கைக்கு என்று சிறப்பு கிராம சபை ஒன்று கூட்டப்படும். கிராம சபை குறித்து பொதுமக்களுக்கு உரிய அறிவிப்பின்படி கிராமத்தில் நடைபெறும் அதில் உங்கள் ஊராட்சியில் நடைபெற்ற இருக்கக்கூடிய நடைபெற்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் அது சம்பந்தமாக உங்களுக்கு தெரிவிக்கப்படும் அது சம்பந்தமாக நீங்கள் உங்களுடைய உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு என்று சமூக தணிக்கைகாக நடத்தப்படும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொதுமக்களாகிய நாம் முறையாக கவனித்தாலே நூறு நாள் வேலைத் திட்டங்களில் முறைகேடு என்பது நடைபெறாது. மேலும் கூடுதலாக 100 நாள் வேலை திட்ட அட்டை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் என்றால் மேலே குறிப்பிட்ட 100 நாள் வேலை சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் பார்வையிட தகுதியானவராக ஆகிவிடுகிறீர்கள் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆவணங்களை பார்வையிட உங்களுக்கு உரிமை இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. இதை ஒரு தோல்வியடைந்த திட்டமாகவே பல்வேறு கட்சிகளும் பொதுமக்களும் கூட நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் உண்மையில் 100 நாள் வேலை திட்டம் மூலமாக மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான வேலைகளை பல்வேறு ஊராட்சிகளும் செய்து கொண்டுதான் இருக்கின்றன.மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இந்த மாதிரியான முறைகேடுகளுக்கும் விமர்சனங்களுக்கும் காரணமாக இருக்கின்றன.விழிப்புணர்வை வழங்க வேண்டிய அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு வழங்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. எனவே நமக்குத் தெரிந்ததை பிறருக்கு தெரிய செய்து மக்களை விழிப்படையச் செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here