கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.
அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.
சூரியதேவன், நவவியா கரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.
பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராக சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவி யுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார். காணக்கிடைக்காத அரிய ஸரீகல்யாண ஆஞ்சநேயர்.
சென்னை தாம்பரத்தை அடுத்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது கூடுவாஞ்சேரி. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகில் உள்ளது ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். கடந்த 99-ஆம் வருடம், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்தாபகரான ரமணி அண்ணாவால், மூலவரான ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் அமைக்கப்பட்டதாம்!
பிறகு, 2004-இல், ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தசகோடி ஸ்ரீராமநாம மணித்தூண், ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி ராமநாம ஜப மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, ஸத்குரு ஸ்ரீநாமானந்தகிரி சுவாமி முன்னிலையில் ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது.
பத்மபீடத்தில் நின்ற திருக்கோலம்; இடது கையை இடுப்பில் வைத்திருக்க, வலது கையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர் இந்தக் கோலத்தில் தரிசனம் தர… உற்ஸவர் சதுர்புஜங்களுடன் சங்கு, சக்கரம், கதையுடனும், அருகில் தன் தேவியும் சூரிய புத்திரியுமான ஸ்ரீஸூவர்ச்சலாதேவியுடனும் அற்புதமாகக் காட்சி தருகிறார்! இவரின் திருநாமம்… கல்யாண ஆஞ்சநேயர்!
சனிக்கிழமைகளில் சென்னை, தாம்பரம் முதலான பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அனுமனை தரிசித்து வாழ்வில் வளம் பல பெறுகின்றனர்
இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீஸூவர்ச்சலா தேவியுடன் காட்சி தரும் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் கூட விரைவில் நடந்தேறி விடும் என்கிறார்கள் பக்தர்கள்!