வ.உ.சி அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.அவர்களில் கடைசியாகப் பிறந்தவர் ‘வாலேஸ்வரன்’ வ.உ.சி அவர்களின் பேரனாகிய செல்வராமன் அவர்களின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று மற்றொரு பேரனாகிய சிதம்பரநாதன் கூறினார்….. சுவையாக இருந்தது அந்த விஷயம்…. சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ்வரன் என்று உரைத்தது.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி அவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது ‘சன்னத்’தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் “வாலஸ்”. அவர் நினைவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் “வாலேஸ்வரன்”.