வித விதமான பட்ஜெட் சமையல்…

0
67

விலைவாசியைப் பத்தி சோககீதம் பாடுறதைவிட, பிளானிங் பண்ணினா செலவை குறைக்க முடியும்’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால் முடிந்த அளவு குறைவான செலவில் தயாரிக்கக்கூடிய, ருசியான உணவு வகைகளை, வெரைட்டியாக தயாரித்து இந்த இணைப்பிதழில் வழங்குகிறார்.

வெந்தயக்கீரை ரைஸ்

தேவையானவை: பச்சரிசி – 2 கப், வெந்தயக்கீரை – 2 கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), பூண்டு – 8 பல், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி (பால் எடுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு… பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கவும். பிறகு வெங்காயம், வெந்தயக்கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள். சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு தேங்காய்ப்பால், 4 கப் நீர், உப்பு, அரிசி சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

பூண்டு தொக்கு

தேவையானவை: நாட்டு பூண்டு – கால் கிலோ (தோலுரித்து, ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும்), புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிள காய்த்தூள் – 2 டீஸ்பூன், பெங்களூர் தக்காளி – 2, கடுகு, – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பெங்களூர் தக்காளியுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நசுக்கிய பூண்டை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். அதில் புளிக்கரைசல், தக்காளி கலவையை சேர்த்துக் கொதிக்க விட்டு, நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

உளுந்துப்பொடி ரைஸ்

தேவையானவை:
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப், முழு வெள்ளை உளுந்து – 4 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெள்ளை உளுந்து, துவரம்பருப்பு, கொப்பரைத் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியுடன் கலக்கவும். இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து… உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

கறிவேப்பிலை தொக்கு

தேவையானவை:
கறிவேப்பிலை (உருவியது) – 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் (அரைக்க) – 8 (அல்லது காரத்துக் கேற்ப), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2, பொடித்த வெல்லம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கறிவேப்பிலையை கழுவி, துடைத்து உலரவிடவும். புளியை கால் கப் வெந்நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொண்டு… கறிவேப்பிலையை அதே எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக வதக்கி எடுக்கவும். வதக்கிய கறிவேப்பிலை, ஊறிய புளி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங் காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த கறிவேப்பிலை விழுது, வெல்லம் சேர்த்து (அடுப்பை `சிம்’மில் வைத்து), 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

உளுத்தம்பருப்பு துவையல்

தேவையானவை:
உளுத்தம்பருப்பு – அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் (அரைக்க) – 4, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளி – கோலி குண்டு அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (தாளிக்க) – ஒன்று, கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). இதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்த துவையலில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

எலுமிச்சை தொக்கு

தேவையானவை:
எலுமிச்சைப் பழம் – 6, பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், வெந்தய – பெருங்காயப் பொடி (வறுத்துப் பொடித்தது) – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
எலுமிச்சைப் பழத்தைக் கழுவித் துடைத்து, இரண்டாக நறுக்கி, விதைகளை நீக்க்கவும். இதனுடன் பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் இதை மிக்ஸியில் மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், வெந்தய – பெருங்காயப் பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

ராகி கார அடை

தேவையானவை:
கேழ்வரகு மாவு – 2 கப், முருங்கைக்கீரை (உருவியது) – அரை கப், பச்சரிசி மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகு மாவு, பச்சரிசி மாவை ஒன்று சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதை மாவில் போட்டு… தேவையான உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்துப் பிசைந்து, தவாவில் சற்று கனமான அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

டொமேட்டோ ரைஸ்

தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப், தக்காளிச் சாறு – ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, பூண்டு – 4 பல் (நறுக்கிக்கொள்ளவும்), பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாசுமதி அரிசியை 10 நிமிடம் நீரில் ஊறவிட்டு, நீரை வடிக்கவும். வெங்காயம், பச்சை மிள காயை நீளநீளமாக மெல்லியதாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, முக்கால் கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

பீர்க்கங்காய் மசாலா

தேவையானவை:
இளசான பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பீர்க்கங்காயை நன்கு கழுவி, தோலோடு பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறு துண்டுகளாக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். நறுக்கிய பீர்க்கங்காயுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து, தக்காளி, பீர்க்கங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்தூள் சேர்க்கவும். பிறகு, உருளைக்கிழங்கு துண்டுகள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு… கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

இஞ்சித் துவையல்

தேவையானவை:
இஞ்சி – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு, இஞ்சியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். சற்று ஆறியதும் இதனுடன் புளி, வெல்லம், உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து, நைஸாக அரைக்கவும்.

ஜவ்வரிசி கிச்சடி

தேவையானவை:
நைலான் ஜவ்வரிசி – ஒரு கப், கெட்டித்தயிர் – அரை கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியை கழுவவும். தயிருடன் ஜவ்வரிசி மூழ்கும் அளவுக்கு தேவையான தண்ணீர் சேர்த்து… அதில் ஜவ்வரிசி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பொட்டுக்கடலையை சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து சற்றே கொரகொரப்பான விழுதாக அரைக்கவும். வாணலியில் எண் ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… ஊறவைத்த ஜவ்வரிசி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

கார்ன் கிரேவி

தேவையானவை:
ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – ஒரு கப், வெங்காயம், – ஒன்று, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 , கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஸ்வீட் கார்ன், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கி, அரை கப் நீர் சேர்த்து மூடி, மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

தண்ணி சாம்பார்

தேவையானவை:
துவரம்பருப்பு – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10 (தோல் உரிக்கவும்), தக்காளி – 2 (நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல் (நசுக்கவும்), கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நன்கு வேகவிட்டு மசித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் பருப்புக் கலவை, நசுக்கிய பூண்டு, மிளகு – சீரகப் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

கம்பு அடை

தேவையானவை:
கம்பு – 2 கப், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, பச்சை மிளகாய் – 4, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கம்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி, சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விடாமல் கிரைண்டரில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்துப் பிசைந்து, தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். கம்பை உலரவிட்டு, மெஷினில் கொடுத்து மாவாக்கி பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.

சீரக ரசம்

தேவையானவை:
பருப்புத் தண்ணீர் – 2 கப், நீர்க்க கரைத்த புளித் தண்ணீர் – ஒரு கப், தக்காளி – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சீரகம் – இரண்டரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டுப் பல் – 3 (நசுக்கிக்கொள்ளவும்), கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சீரகம், கறிவேப்பிலையை மையாக அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். பருப்புத் தண்ணீருடன் அரைத்த சீரக விழுது, தக்காளி விழுது, நசுக்கிய பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். வாணலி யில் நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து… பருப்புக் கலவையை சேர்த்து, நுரைத்து கொதி வரும் சமயத் தில் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

மோர் ரசம்

தேவையானவை:
மோர் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.
வறுத்துப்

பொடிக்க:
தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம், மிளகு – தலா கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.

செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். மோருடன் மஞ்சள்தூள், கறிவேப் பிலை, பெருங்காயத்தூள், ஒரு கப் நீர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மோர் கரை சலை ஊற்றி நுரைத்து வரும் சமயம் வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலந்து, கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

கார்ன் ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஸ்வீட் கார்ன் முத்துக்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது, உப்பு, நெய், எலுமிச்சைச் சாறு, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ராகி – சிவப்பு பூசணி ரோஸ்ட்

தேவையானவை:
கேழ்வரகு மாவு – 2 கப், சிவப்பு பூசணி துருவல் – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சிவப்பு பூசணி துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கேழ்வரகு மாவுடன் அரைத்த சிவப்பு பூசணி விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சற்று கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண் ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சுரைக்காய் பால் கூட்டு

தேவையானவை:
மீடியம் சைஸ் சுரைக்காய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, வேகவைத்த பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சுரைக்காயை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிள காயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சுரைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து தீயைக் குறைத்து, வாணலியை மூடி வைக்கவும். காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியாக சேர்ந்தாற்போல் வரும்போது நன்கு கிளறி இறக்கவும்.

சிறுகீரை கடையல்

தேவையானவை:
சிறுகீரை – ஒரு கட்டு, வேகவைத்த துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பழுத்த நாட்டுத் தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். வாணலி அல்லது மண் சட்டியில் நெய் விட்டு, சீரகம் தாளித்து… அரைத்த தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கீரை, மிளகாய்த்தூள், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து வேகவிடவும் (தேவையெனில் கால் கப் நீர் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). கீரை வெந்த பின் இறக்கி, நன்கு கடையவும்.

ஈஸி மோர்க்குழம்பு

தேவையானவை:
புளிக்காத கெட்டித்தயிர் – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, மிளகு – தலா கால் டீஸ்பூன், கொத்த மல்லித்தழை – சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தயிரை நன்கு கடைந்து மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டுக் கரைக்கவும். வாணலி யில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, மோர்க்கரைசலை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் ரைஸ்

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப், தேங்காய் – அரை மூடி (ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளவும்), பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டுப் பல் – 4, பச்சை மிளகாய் – 2, பட்டை – சிறு துண்டு, லவங்கம் – ஒன்று, வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும், பட்டை, லவங்கம் தாளித்து… வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேங்காய்ப் பால், முக்கால் கப் நீர், தேவையான உப்பு சேர்க்கவும். இதில் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், அடுப்பை `சிம்’மில் வைத்து, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும். கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை:
பச்சை சுண்டைக்காய், சின்ன வெங்காயம் – தலா 10, கீறிய பச்சை மிளகாய் – 2, கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், தக்காளி – 2, வேகவைத்து, மசித்த துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கி சேர்த்து… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாக கொதி வந்த பின் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

ஹனி சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் கலக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் – எண்ணெய் கலவையை விட்டு சுட்டு எடுக்கவும்.

முளைக்கீரை மசியல்

தேவையானவை:
முளைக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கடையவும். பிறகு, வேகவைத்த பருப்பு, நெய் சேர்த்து மேலும் ஒரு முறை கடைந்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பூண்டுக் குழம்பு

தேவையானவை:
பூண்டு – 20 பல், சின்ன வெங்காயம் – 10, நாட்டுத் தக்காளி – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சைப் பழம் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, வெந்தயம் – அரை டீஸ்பூன், வெல்லத்தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு –
தேவையான அளவு.

செய்முறை:
பூண்டு, சின்ன வெங் காயத்தை தோல் உரிக்கவும். தக் காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை, வெந்தயம் தாளித்து, பூண்டைப் போட்டு வதக்கவும். பிறகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக அரைத்த தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், மிள காய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டி யானதும் வெல்லத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

புழுங்கலரிசிக் கஞ்சி

தேவையானவை:
புழுங்கல் அரிசி ரவை – அரை கப், பூண்டு – 6 பல், மோர் – 2 கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கல் அரிசி ரவையுடன் நீர் சேர்த்து… தோல் உரித்து, பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெந்தவுடன் ஆறவிட்டு… மோர், தேவையான உப்பு சேர்த்துப் பருகவும்.

பம்ப்கின் கிரேவி

தேவையானவை:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ, கடலைப்பருப்பு – அரை கப், பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, பூண்டு – 3 பல் (நசுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளைப் பூசணியை தோல், விதை, நீக்கி பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வேகவைத்த பருப்பை வாணலியில் போட்டு, நறுக்கிய வெங்காயம், பூசணி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு நன்கு வேகவிடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூசணி கிரேவியில் சேர்த்துக் கலந்து, இறக்கிப் பரிமாறவும்.

க்ரீன் உப்புமா

தேவையானவை:
அரிசி ரவை – ஒரு கப், கொத்தமல்லித்தழை – ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், புளி ஆகிய வற்றை ஒன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இரண்டரை கப் நீர் சேர்க்கவும். இதில் அரைத்த கொத்தமல்லி விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்து நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்), வேகவிடவும். வெந்த பின் நன்றாக கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

அரிசி போளி

தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப் (நீரில் கழுவி, நிழலில் உலர்த்தி, அரைத்தது), தேங்காய்த் துருவல் – கால் கப், மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அடிகனமான வாணலியில் முக்கால் கப் நீர் விட்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
இந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, போளி போல தட்டி, தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, மறு புறமும் திருப்பிப் போட்டு, வெந்தபின் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here