மான மறவனே
மாசறு மாவீரனே மாநிலம் கண்ட மன்னனே
ஒழிவிலாது உழைத்த
காய்கதிர்ச் செல்வனே !
ஓய்ந்ததுவோ தொக்கேந்திய உன்
தடக் கைகள்!
மாய்ந்தனவோ கனல் தெறிக்கும் வேங்கையின் நோக்கு!
தீர்ந்ததுவோ எழுச்சியூட்டும் வீரத் தமிழ்ப் பேச்சு!
கனவு கண்டாய்
களம் கண்டாய்
நிலத்திலே வீழ்த்தினாய்
நீரிலே வீழ்த்தினாய்!
விண்ணிலும் வீழ்த்தினாய்!
வீணர் கூட்டம் வீழ்ந்ததென்று இறுமாந்திருந்தோமே!
காத்திருந்தோம்
வாகை சூடி வருவாயென!
அந்தோ!
உன் தொப்புள் கொடி
உறவே உன்னை
வேரறுக்கும் என்று கனவிலும் கருதியிருக்கமாட்டாய்!
அனைத்தும் உணர்ந்து
ஆட்சி செலுத்தினாய்!
காலம் குறைவெனினும்
காவல் சூழ்ந்ததெனினும்
மாண்ட உன் ஆட்சியில்
மகிழ்வுற்றிருந்தது எம்
தமிழ்ப் பெருங்குடி!
ஒரு பத்துடன்
ஓராண்டும் ஓடிவிட்டனவே!
தாங்குதிறல் மறவர்
தத்தம் ஆற்றல்
வீங்குபெறும் படையுடைத்தாய்!
மண்கெழு மறவன்
மாற்றவரைத் தடுத்து
மண்ணில் வீழ்ந்ததும்
மட்டில்லா மாவீரமாம்!
மறக்குமோ எம் இதயம்!
இனியொரு பிரபாகரன்
ஈழத்தில் உதித்து
இழந்ததை மீட்பானா?
ஒவ்வொரு நாளும்
ஓய்விலாது மனதைக்
கொத்தும் கேள்வி
பொருகளத்து ஆவிதுறந்த
உம் வீரர்க்கும்
எம் வீர வணக்கம்!
மாவீரனே, மறத்தினால்
நீ வீழ்ந்து விடவில்லை
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!
தரணியில் தமிழனும் தமிழும் உள்ளவரையிலும்
நீ வாழ்ந்திருப்பாய்!
வெல்க வெல்க வெல்க
விடுதலைப்புலிகள் வெல்க!
எழுக எழுக எழுக
எமது தமிழீழம் எழுக!
நித்தமும் நினைவிலேந்தி நிற்கும்
-மா.பாரதிமுத்துநாயகம்