ஒரு வாரகாலம் துக்கம் கடைபிடிக்க தொண்டர்களுக்கு அறிவிப்பு !
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் மூத்த சகோதரியும் லட்சோபலட்சம் விடுதலைச் சிறுத்தைகளின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த திருமதி கு. பானுமதி அவர்கள் இன்று காலை உயிர் நீத்தார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமதி கு. பானுமதி அவர்கள் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு மூத்த சகோதரியாக மட்டுமின்றி ஒரு தாயாகவும் இருந்து அன்பு பாராட்டியவர். தனது வாழ்வை எழுச்சித்தமிழர் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ‘ நான் இறந்து போனால் தம்பியை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் எனக்குப் பெரும் கவலை’ என்று அவர் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டிருந்தது விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வொருவரையும் மனம் நெகிழச் செய்திருந்தது. அந்த அளவுக்கு எழுச்சித் தமிழர்மீது பாசம் வைத்திருந்தவர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் நன்றாகத் தேறி வந்தார். தானே உணவு உண்ணவும், உடற்பயிற்சிகளைச் செய்யவும் அவரால் இயன்றது. ஒரு சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் இன்று காலை எதிர்பாராமல் நேரிட்ட மாரடைப்பின் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
திருமதி கு. பானுமதி அவர்களது கணவர் சில வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். அவருக்கு இளையராஜா, மாலதி, இசையமுதன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் எல்லோருமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
தலைவர் எழுச்சித் தமிழரை மட்டுமின்றி ஒட்டுமொத்த விடுதலைச்சிறுத்தைகளையும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய திருமதி கு. பானுமதி அவர்களின் திடீர் மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பேரிழப்பாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமதி பானுமதி அவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்சியின் கொடிகளை ஒரு வார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், துக்கம் கடைபிடிக்குமாறும் விடுதலைச் சிறுத்தைகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
தலைமையகம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி