வாழ்வோமடி கண்ணே வா!

0
99

 

வயதோய்ந்த போதிலும்,
வாழ்வோய்ந்த போதிலும்,
காதலோய்ந்து போகாமல்
வாழ்வோமடி கண்ணே வா!

கிழ பருவம் எய்தினும்,
இள பருவம் குன்றினும்
காதல் பருவம் குன்றாது
வாழ்வோமடி கண்ணே வா!

நோய்வாடு பட்டு நோகினும்,
நரம்பு தளர்ந்து படுக்கையாகி போகினும்,
உன் எச்சில் நான் கழுவி,
என் எச்சில் நீ கழுவி
வாழ்வோமடி கண்ணே வா!

முட்டிக்கால் தேய்ந்தோயினும்,
முதுகெலும்பு முறிந்தோயினும்,
முத்த நேசம் குறையாமல் முத்தமிட்டு
வாழ்வோமடி கண்ணே வா!

பிறப்பின் சுவையும்,
இறப்பின் சுவையும்,
ஓன்றாய் கலந்தூட்டி
என்னை தாங்கியவளே!
காதல் பித்தேய்து
ஒன்றாய் சாவதற்காய்
வாழ்வோமடி கண்ணே வா!

கூந்தல் அவிழ்த்து,
தலை கோதி,
கொஞ்சி குலாவி,
நெற்றிக் குமிழில் முத்தங்கள் தொடங்கி,
கன்னக் குழியில் முத்தங்கள் நிரப்பி,
உதட்டுச் சுனையில் நீரறுந்தி,
செங்கழுத்து பரப்பில் உதடு துடைத்து,
மார்பு மிதப்பில் முகம் புதைத்து,
இடையில் சிருங்காரம் மீட்டி,
உயிர்குழியில் நேசங்கள் நிரப்பி,
உடல் குழியில்
ஒருவரையொருவர் நிரப்பி,
ஆத்மாவின் காமயழுக்கை போக்கி
பாதங்களில் களைந்தோய்ந்து
வீழ்ந்து இறக்கவாவது,
வாழ்வோமடி கண்ணே வா!

இரத்தம் சுண்டி,
உடல் சுருங்கி,
பார்வைகளற்று
கண்கள் மூடி,
மொழிகளற்று
உள் நாக்கு முடங்கி,
தொண்டைக்குழி உறைந்து
உயிர் அடங்கி போய்
சுடுகாட்டு மெத்தையில்
ஈரூடலை ஒரூடலாய் கூட்டி வைத்து
கால நெருப்பு நம்மை எரித்தாலும்,
நம் காதல் நெருப்பு
அடுத்த தலைமுறை தாண்டியும்
அணையாது வாழ
வாழ்வோமடி கண்ணே வா!

  -சுயம்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here