வானொலியின் வரலாறு…வளர்ச்சியும்…

0
588

‘பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் … எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்…’ என்ற பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளைப் போல, மனிதன் எதிரொலி கேட்டு வானொலி படைத்த காலம் முதலே மக்களிடையே சிற்றலை வானொலிகளும் மத்தியலை வானொலிகளும் பிரபலமாக இருந்தன. இதை தொடர்ந்து வானொலியின் வளர்ச்சியானது பண்பலையாகவும் ,இணைய வானொலியாகவும் உச்சத்தை தொட்டது.இன்றும் வானொலிக்கெற்று தனி நேயர்கள் பட்டாளத்தை தக்கவைத்திருக்கிறது.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு வானொலிதான் செய்தி அறிந்துகொள்ளவும் பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது. தொலைக்காட்சி வந்த பிறகு தன் செல்வாக்கை அது சற்று இழந்தாலும் இன்றும் வானொலிவின் பயன்பாடு அதிகமாகத்தான் இருக்கிறது. தந்தி, டெலிபோன், ரேடியோ மூன்றும் நெருக்கமான கண்டுபிடிப்புகள். தந்தி, டெலிபோன் கண்டுபிடிப்புகளிலிருந்து பெறப்பட்ட தகவல் பரிமாற்றத்தை வைத்தே வானொலி கண்டுபிடிப்பில் பலரும் ஈடுபட்டனர்.

1864-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் வானொலி அலைகளைப் பற்றிய கருத்தை உலகத்துக்குத் தெரிவித்தார். 1886-ம் ஆண்டு ஹென்ரிச் ஹெர்ட்ஸ் வானொலி அலைகளில் மின்னோட்டத்தின் வேறுபாடுகளைக் கண்டறிந்தார்.

மார்கோனியின் காதுகள் மிகப் பெரிதாக இருந்ததால், ஒரு நாள் அவரது அம்மா செல்லமாகக் கிண்டல் செய்தார். உடனே அவரது அப்பா, “இந்தப் பெரிய காதுகளால்தான் அவனால் மிகச் சிறிய ஒலியையும் கேட்க முடிகிறது” என்றார். இந்த விஷயம் மார்கோனியின் மனதில் பதிந்துவிட்டது. மின்காந்த அலைகளை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மின்காந்த அலைகளை ஒலி அலைகளில் செலுத்தி, நீண்ட தூரத்துக்குத் தகவல் அனுப்பும் முயற்சியில் இறங்கினார்.

1884-ம் ஆண்டு அமெரிக்க வாழ் செர்பியரான நிகோலா டெஸ்லா, வானொலி அலைகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இது டெஸ்லா காயில் என்று அழைக்கப்பட்டது. இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1895-ம் ஆண்டு, 80 கி.மீ. தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்புவதற்கான தயாரிப்பில் டெஸ்லா ஈடுபட்டிருந்தபோது, அவரது பரிசோதனைக் கூடம் சிதைந்துவிட்டது.

1894-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ் கம்பியில்லாத் தகவல் அனுப்பும் கருவியை உருவாக்கினார்.

மார்கோனியின் பரிசோதனை முயற்சிகளுக்கு இத்தாலி அரசு ஆதரவு அளிக்காததால், இங்கிலாந்துக்குச் சென்றார். 1896-ம் ஆண்டு மோர்ஸ் குறியீடைப் பயன்படுத்தி, 6 கி.மீ. தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்பிக் காட்டினார். அதே ஆண்டு கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையை உருவாக்கியதற்காக காப்புரிமை பெற்றார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் டெஸ்லா, தன்னுடைய ரேடியோ கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். 1900-ம் ஆண்டு டெஸ்லாவின் ரேடியோ தொடர்பான பல கருவிகளுக்கு அமெரிக்கா காப்புரிமை வழங்கியது.

அதே ஆண்டு ரேடியோவுக்காகக் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார் மார்கோனி. ஆனால் காப்புரிமை கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காப்புரிமையைப் பெற்றுக்கொண்டார். 1909-ம் ஆண்டு மார்கோனியின் ரேடியோ தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு கார்ல் பெர்டினாண்ட் பிரெளன் என்பவரோடு பகிர்ந்தளிக்கப்பட்டது.

தன்னுடைய பல கருவிகளை வைத்துதான், மார்கோனி ரேடியோவை உருவாக்கியதாக டெஸ்லா வழக்குத் தொடுத்தார். ஆனால் வழக்கு மார்கோனிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து செய்த ஆய்வுகளின் விளைவாகக் கரையில் இருந்து கடலில் இருக்கும் கப்பல்களுக்குச் செய்தி அனுப்பும் கருவியை உருவாக்கி, அதைச் செயல்படுத்தியும் காட்டினார் மார்கோனி.

இதன் மூலம் ஆபத்தில் மாட்டிக்கொண்ட கப்பல்களுக்குத் தகவல் கிடைத்து, மனிதர்கள் உயிர் பிழைத்தனர். அமெரிக்காவுக்குச் சென்று படகுப் போட்டியில் உடனுக்குடன் போட்டி நிலவரங்களை ரேடியோ மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

ரேடியோ, ரேடியோ தொடர்பான பல கருவிகளை உருவாக்கி, புகழும் பணமும் பெற்றார் மார்கோனி. 1943-ம் ஆண்டு டெஸ்லா இறந்த பிறகு, தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே மறைந்தவிட்ட மார்கோனியின் காப்புரிமையை ரத்து செய்து, டெஸ்லாவுக்கு வழங்கியது அமெரிக்க நீதிமன்றம்.

வானொலியைக் கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு எல்லோரும் மார்கோனியைத்தான் பதிலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வானொலி கண்டுபிடிப்பில் பலரின் பங்கு இருப்பதையும் அதில் மார்கோனிக்கும் டெஸ்லாவுக்கும் முக்கியப் பங்கு இருப்பதையும் யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

இந்திய வானொலி வரலாறு

இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகள் ‘ரேடியோ கிளப் ஆப் பாம்பே’ என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, நிர்வாகம் செய்து வந்தது. 1936 ஆம் ஆண்டு முதல் வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது. 1947 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெறும் போது 6 வானொலி நிலையங்கள், 18 டிரான்ஸ் மீட்டர்கள் இருந்தது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்து கொண்டிருந்தமையால் வெறும் 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இந்தியா முழுவதும் 208 வானொலி நிலையங்கள் உள்ளது. பல்வேறு அலை நீளம் கொண்ட 326 டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன. இந்த பிரம்மாண்ட வானொலி சேவை 89.5 சதவிகித பகுதிக்கு சென்று சேர்கிறது. 98.82 சதவீத மக்கள் வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது வரவேற்கப்பட வேண்டிய செயலே.

பண்பலை வானொலிகள்

அகில இந்திய வானொலி நிறுவனம் 24 இந்திய மொழிகளில் அதன் உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இவை மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும், 16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, ​​2.25 லட்சம் வானொலி பெட்டிகள் மட்டுமே இருந்தன. தற்போது, ​​11.10 கோடி வானொலி பெட்டிகள் உள்ளன. அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மட்டும் 88 செய்தி தொகுப்புகளை ஒலிபரப்பு செய்கிறது. இத்துடன் 42 மாநில மொழி நிலையங்கள் வழியாக 202 செய்தி தொகுப்புகளும் ஒலிபரப்பாகின்றன.

சென்னை வானொலி நிலையம்

வர்த்தக நோக்கில் ‘விவித் பாரதி‘ என்ற சேவை 1957 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கியது. 1969 ஆம் ஆண்டு ‘யுவவாணி’ என்ற ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், டிஜிட்டல் ரேடியோ, ‘பிராட்காஸ்டிங்’ ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இணையதளம் வழியாக நேயர்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்பும், ‘ரேடியோ ஆன் டிமாண்ட் சர்வீஸ்’ என்ற இணைய சேவையும் தொடங்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டில், நியூஸ் அண்ட் டெலிபோன் என்ற தொலைபேசி வாயிலாக செய்திகளை கேட்டு தெரிந்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் தான் முதல் பண்பலை நிலையம் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள் துவங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் அகில இந்திய வானொலி ‘ரெயின்போ’, ‘கோல்டு’ என்ற இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரெயின்போ என்பது முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், சிறு சிறு தகவல்களையும் அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல் வெளியிடுவதாகும். கோல்டு என்ற இரண்டாவது அலைவரிசை இந்தியா முழுமைக்குமான ஒலிபரப்பாகும். இதில், தேசிய செய்திகள், செய்தி விமர்சனம் போன்றவை முக்கியமாக கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களும் கூட ஒலிபரப்புகிறது. பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை 40 முதல் 50 கிலோ மீட்டர் தான் இருந்தது. குறைந்த தொலைவு, தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பது தான் பண்பலையத்தின் இலக்கணமானது. இதில்,விதிவிலக்காக கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. அதன் டிரான்ஸ் மீட்டர் எனும் ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், அதன் ஒலிபரப்பு எல்லை கிட்டத்தட்ட 250 முதல் 300 கி.மீ. தொலைவில் வரை செல்கிறது. இதனால், தென்னிந்தியத்தின் 22 மாவட்டங்களுக்கு ஒலிபரப்பாகிறது.

இணைய வானொலிகள்

இன்றோ மத்தியலை, சிற்றலை வானொலிகளுக்கு மாற்றாக இணைய வானொலிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகின்றன. ஒலிப்பதிவுக் கூடம், ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சியை ஒலிபரப்பப் பெரிய ஒலிபரப்பி (Transmitter) என்று இருந்த நிலை, தற்போது மாறி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டே ஒலிபரப்பி இல்லாமலேயே இணையம் வழியாக உலகின் எந்த இடத்திலும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப முடியும், அதுவும் குறைந்த செலவில்.

இணைய வானொலிகளில் இரண்டு வகை உண்டு. தங்கள் நிகழ்ச்சிகளை இணையத்தில் மட்டுமே ஒலிபரப்பும் வானொலிகள். இணையத்திலும் தங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பாரம்பரிய வானொலிகள். இந்த இரண்டு வகையான ஒலிபரப்புகளும் தற்போது அதிகம் பிரபலமாகிவருகின்றன.

நூற்றுக்கணக்கான இணைய வானொலிகள், தங்கள் நிகழ்ச்சிகளைத் தற்போது ஒலிபரப்பி வருகின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஒலி’பண்பலை வானொலி, இந்தியாவின் அகில இந்திய வானொலி போன்ற பல வானொலி நிலையங்கள் இணையத்தின் வாயிலாகவும் செயலி மூலமாகவும் மக்களைச் சென்றடைகின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இணைய வானொலி நடத்தக் கணினிக் கட்டமைப்பை (சர்வர்) குறைந்த செலவில் வழங்க நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் இணையத்தின் வேகமும் தரமும் மேலும் அதிகரித்தால் இன்னும் பல இணைய வானொலிகள் தொடங்கவும் கேட்கவும் ஏதுவாக இருக்கும்.

இணைய வானொலிகள் இந்தியாவில் இன்னும் வளராமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் நிறைய இணைய வானொலி நிலையங்கள் வந்துவிட்டன. இணைய வானொலிகளில் ஒலிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாயும் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு –
(புதிதாக இணைய வானொலிகள் தொடங்க ஆர்வமுடையவர்கள், 8838078388 இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் இணைய வானொலியை குறைந்த கட்டணத்தில் உருவாக்கி கொள்ளலாம்.)

உலக வானொலி தினம் பிப்ரவரி 13.

இணையத்தில் அன்மையில் 90’ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றினாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினம் என அறிவித்து கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு வானொலி தினம், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி எனும் கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.

இப்படி நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது வானொலி. இல்லத்தரசிகளும்,தொழிலாளர்களும் எந்த வேலை செய்தாலும் இடையூறு இன்றி வானொலி கேட்டுக்கொண்டே வேலைகளை சிறப்பாக செய்ய உறுதுணையாக இருக்கிறது.
வானொலிகள் உலகில் இன்றும்… என்றும்…என்றென்றும் … காற்றின் அலைவரிசை ஒலித்துக்கொண்டே இருக்கும் …
– உங்கள் சிநேகிதன் ஜெ.மகேந்திரன் ,
                      மகிழ்ச்சி வானொலி குழுமம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here