ராஜ்புத் இனத்தவரும் அல்வாவும்…

0
9

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சொக்கம்பட்டி ஐமீன்தாரின் அழைப்பின் பேரில் தமிழகம் வந்தவர்கள் ராஜபுத்திரர்கள் மரபைச் சேர்ந்தவர்கள்.

ஜமீன்தாருக்கு வடக்கிலுள்ள உணவு வகைகளையும் இனிப்புகளையும் தயாரித்து வழங்கி அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர். சர்க்கரை வியாதி வந்ததா என்று அறியக்கூடவில்லை! அவற்றில் ஒன்றுதான் ‘ஹல்வா’! தமிழில் அல்வா! மலையாளத்தில் ‘ அலுவா!’

நெல்லையில் உள்ள இருட்டுக்கடை, லட்சுமி விலாஸ், தென்காசி பெரிய கோயில் எதிரே இருக்கும் புராதன லாலா, ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்குத் தெற்கிலுள்ள பால்கோவா, அம்பாசமுத்திரத்திலுள்ள பெரிய லாலா கடை… இவையெல்லாம் இந்தக் குடும்ப உறவின் முறையினருடையவைதான்!

இவர்களுக்கு உறவினராகிய முரளி பிரசாத் சிங் என்னைக் காண வேண்டி வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தார். எத்தனையோ பிரபலங்கள் அம்பை லாலா தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களாக இருப்பதைத் தெரிவித்த அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கே வேலை செய்தாலும், லட்டுப் பிடிப்பதை மட்டும் இன்றைக்கும் அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் செய்கிறார்களாம்.

ஏன் என்று கேட்டதற்கு அவர் தந்த விளக்கம்:

” மற்ற ஸ்வீட்டுகளைப் போலல்லாது லட்டு வாங்கிச் செல்கிறவர்களில் பலரும் அதைத் தாங்கள் பூசிக்கும் கடவுளுக்குப் படைக்கின்றனர். பிரசாதமாகவும் இங்கிருந்து வாங்கிச் செல்லும் லட்டுகள் வழங்கப்படுகின்றன. வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டிலோ அல்லது வெளியிலோ அசைவ உணவு சாப்பிட்டு விட்டு வரலாம். அந்தக் கையில் சிறிதளவேனும் மாமிச வாசனை இருக்கும்! அந்தக் கைகளைக் கொண்டு லட்டுகளைப் பிடித்தால் அது பூஜைக்கோ பிரசாதமாக வழங்கவோ தகுதியில்லாமல் போகிறது. அதனால் லட்டுப் பிடிக்கும் வேலையை மட்டும் வீட்டிலுள்ள பெண்களே ( பள்ளி மாணவிகளும்) சேர்ந்து செய்யும் ஒரு வழக்கத்தை வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல; எத்தனைப் பெண்கள் பிடித்தாலும் ஒரே அளவில்தான் அவை இருக்கும்! அதாவது ஒரு கிலோவுக்கு 28 லட்டுகள்! கூடாது, குறையாது”

என்றார்!

அடடே… இது விஷயம் புதுசா இருக்கே என்று ஆச்சரியப்பட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து அங்கே சென்றபோது அரை கிலோ அல்வா வாங்கினேன். முரளி சொன்னது நினைவுக்கு வந்தது. சோதித்துப் பார்க்க நினைத்து, கால் கிலோ லட்டு வாங்கினேன். அவர் பேக் செய்யும் முன் எத்தனை இருக்கிறது என்று பார்த்தால் ஏழு இருந்தது. அதாவது கிலோவுக்கு 28 !

கைப் பக்குவம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன் என்பவர் இவர்களுடைய அல்வாவை ருசித்துச் சாப்பிட்டாராம்!

முன்னப் பின்ன பழக்கமில்லாமல் மனிதர் அல்வாவை எப்படி வாயில் மென்று தள்ளினாரோ!

ஒவ்வொரு கடை அல்வாவும் ஊரூருக்கு சுவையிலும் அடர்த்தியிலும் மாறுபடும்!

சங்கரன்கோவில் பிரியாணிக்குப் பேரானது போல, வெள்ளையன் மெஸ் சைவச் சாப்பாடும் ராசா கடை அல்வாவும் அத்தனை சுவையாக இருக்கும்!

ஒரு நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் மலையாளி. அவருக்கு வெள்ளையன் மெஸ் சாப்பாட்டை வாங்கிக் கொடுத்து விட்டு, நேராக ராசா கடைக்குக் கூட்டி வந்தேன். மலையாள நாட்டின் அல்வா குழைவாக இருக்காது; இருந்தால் அவர்களுக்குப் பிடிக்காது!

இந்த மலையாளி வாழையிலையில் சூடாக இருந்த அல்வாவைச் சாப்பிட்டார். அவர் அபிப்ராயத்துக்காக காத்திருந்தேன். ஆனால் வாய்விட்டுக் கேட்கவில்லை. ஏனென்றால் என் வாயிலும் அல்வா இருந்தது! அந்தச் சுவையில் லயித்திருந்தேன்! வாயில் கரையும் அல்வாவை வயிற்றுக்குள் தள்ளியபடியே அவர் சொன்ன ஒரேயொரு சொல்:

” Amazing ! ”

சொல்லிவிட்டு, இரண்டு கிலோ அல்வா வாங்கிச் சென்றார் அவர்!

வடக்கே பயணம் போகிறவர்கள் போகும் போதெல்லாம் அல்வா வாங்கிக் கொடுத்தே காரியம் சாதித்துக் கொள்வார்கள்! அத்தனை ஆற்றல் மிக்கது அல்வா!

இந்த அல்வா கடை மதியம் 12 மணிக்குத்தான் திறக்கும்!
2.30 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டுக் கடையை அடைத்து விடுவார்கள்!

அதன் பிறகு மறுநாள் மதியம்தான்!

ஒரு பிரபலமான பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகள் நடத்தும் ஒருவரிடம் ஒரு காலத்தில் இரவு நேரங்களில் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்பவர் அவர். புது வகை எது வந்திருந்தாலும் என்னைச் சாப்பிடச் சொல்லி அபிப்பிராயம் கேட்பார்! நானும் உணர்ந்ததைச் சொல்வேன்!

அப்படி ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும் போது, நான் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதி பால்கோவா சுவை பற்றிக் கேட்டேன்.

” உங்கள் பால்கோவா நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதி பால்கோவா போல குருணை குருணையாக ( கிரானுவல்ஸ்) இல்லையே, அது ஏன்? ” என்று அந்த பிரபலத்திடம் கேட்டேன்.

அதற்கு அவர்,

” அண்ணாச்சி, அந்தக் குறிப்பிட்ட கடையிலுள்ள மாஸ்டரையே கூட்டி வந்து தயார் செய்து பார்த்தோம். நீங்கள் சொல்கிற பக்குவத்தை எங்களால் கொண்டுவர முடியவில்லை ”

என்று வெளிப்படையாகவே கூறினார்!

இன்று அவர் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்! தொடர்பும் இல்லை!

முடிவாக அவர் சொன்னது:

” அண்ணாச்சி, அங்கே உள்ள பாலில்தான் ஏதோ சூட்சுமம் இருக்கிறது! ”

இந்தத் தனித்தன்மையை மாற்றினாலோ, இழந்து விட்டாலோ குறிப்பிட்ட கடை அல்வாவுக்கு உள்ள பெயர் போய்விடும்! நாம் பிரமாதம் என்று நினைக்கிற அல்வா சிலருக்குக் கொஞ்சம் கூட பிடிக்காமல் போன அதிசயத்தையும் பார்த்திருக்கிறேன்!

அப்படிப் பார்த்தால் அல்வா என்று நாம் சுவைப்பது ஒரே மாதிரியானவை அல்ல!

-மா. பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here