மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த பிறந்த தினம் பிப்ரவரி 7.

0
85

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

_தமிழில் ‘சோறு ‘ என்று சொல்வதற்குத் தயங்கி, ‘சாதம்’ என்று வடமொழியிலும், ‘ரைஸ்’ என்று ஆங்கிலத்திலும் வழங்குவது நிலைத்து விட்டது!_

_வீட்டில் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிடுபவர்கள் பொதுவெளியில் சாதம்தான் கேட்கிறார்கள். சோறு நம் சொந்தச் சொல். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் சொல். வல்சி என்ற சொல் பொதுவாக உணவைக் குறிக்கும். ஆனால் சோறு என்பது சோற்றையே குறித்தது._

*’எத்திசை செலினும் அத்திசைச் சோறே’*

_என்பார் ஔவையார் புறநானூற்றில்!_

_சேரமன்னன் ஒருவனுக்கு ‘பெருஞ்சோற்று உதியலாதன்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு._

_வைணவ மரபில் வந்த ஆண்டாள் நாச்சியார்,_

*’ அம்பரமே தண்ணீரே சோறே’*

_என்று பாடுவாள்!_

( அம்பரம் – அணியும் ஆடை, )

_ஆண்டாளை வளர்த்தெடுக்கும் பேறு பெற்ற பெரியாழ்வார் தான் பாடிய திருப்பல்லாண்டில்,_

‘ *நெய்யுடை நல்லதோர் சோறும்’*

_என்று பாடுவார்!_

_பார்ப்பனராய்ப் பிறந்த பாரதியாரோ பல இடங்களில் ‘சோறு ‘ என்கிற சொல்லைக் கையாளுகிறார்!_

_இவர்களைவிட வேறு அத்தாரிட்டி வேண்டுமா?_

_ஆனாலும் சோறு நம் வாய்க்குள் நுழைந்து வயிற்றுக்குள் போய்க்கொண்டிருக்கிறது!_

_வாயிலிருந்து வரத்தான் மறுக்கிறது!_

_தேவநேயப் பாவாணர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே அடியேன் குறிப்பிட விரும்புகிறேன்:_

*_’சென்னையில் ஒரு முறை பாவாணரும் தாமரைத்திரு. சுப்பையா பிள்ளையும் உரையாடிக் கொண்டிருந்த போது, நெல்லையிலிருந்து சைவ வேளாளர் சாதியைச் சேர்ந்த ஒருவர் சாப்பிட்டு விட்டு அங்கு வந்தார்._*

*_பாவாணர் அவரைப் பார்த்து,_*
*’ நன்றாகச் சாப்பிட்டார்களா’*
*_என்று வினவினார்._*

*_அவர் மறுமொழியாக,_*

*_” சாதம் ‘ நன்றாக இருந்தது_* ” *_என்றார்._*

*_அப்போது பாவாணர்_*,
*” சோறு ” என்று சொல்லுங்கள் “*
*_என்றார்._*

_(இதுவரை சிக்கல் ஒன்றுமில்லை; மேற்கொண்டு சாப்பிட்டு வந்தவர் சொன்னதுதான் பாவாணரை வெகுண்டு எழ வைத்து விட்டது!)_

*_வந்தவரோ, ” சோறு என்று சொல்லுவதற்கு பள்ளு பறையா? என்று கேட்டார்._*

*_அதற்குப் பாவாணர்,_*

*”பள்ளு பறையன்தான் ‘சோறு’ உண்பதா? அப்படியானால் நீர் ‘ வேறு ‘ உண்ணும் “*
*_என்றார்._*

*_பாவாணர் முன் ‘ சாதம்’ என்று சொன்னால், சும்மா விடுவாரா?’_*

_– பாவாணரின் மகன் திரு. தே. மணி அவர்கள் எழுதிய ‘ பாவாணர் நினைவலைகள் ‘ நூலின் முன்னுரையிலிருந்து._

*’தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே*

தமிழுயரத் தானுயர்வான் தான்’

_—பாவாணர்._
_(அடைப்புக்குறிக்குள் இருப்பவை அடியேனுடையதாகும்)_

_இன்று அந்த அறிஞரின் பிறந்த நாள்._

*பாவாணர் புகழ் வாழ்க!*

மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here