மாஸ்டர் படம் எப்படி இருக்கு …?

0
43

மாஸ்டர் 2020ம் ஆண்டில் வெளியாகியிருக்க வேண்டிய தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் கொரோனா காரணமாக, ஒத்திப்போடப்பட்டாலும் திரையரங்குகளில் வந்தே தீர்வது என்கிற தீர்மானத்தில் உறுதியாயிருந்து இன்று திரையரங்கம் கண்டிருக்கிறார்கள். இரசிகர்களின் அத்தனை கால காத்திருப்பு மற்றும் இந்த கொரோனா காலத்தில் அத்தனை ரிஸ்க் எடுத்து திரையரங்கம் செல்லும் இரசிகர்களை இந்த திரைப்படம் திருப்திபடுத்தி இருக்கிறதா ?

திரைப்படத்தின் சுருக்கம் இதுதான், வில்லன் பவானி (விஜய் சேதுபதி) சிறுவயதிலேயே தன் கண்முன்னே தந்தையை இழக்கிறார். தந்தையை கொன்ற வில்லன்கள் இவரை கொல்லாமல் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். உயிரோடு வாழ வேண்டும் & தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்கிற வைராக்கியத்தினை சீர்திருத்த பள்ளியில் வளர்க்கும் பவானி, அதற்கு அந்த சீர்திருத்த பள்ளியையே ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளுகிறான். சில வருடங்களில் வளர்ந்து பெரியவனானதும் அந்த சீர்திருத்த பள்ளிக்கு வருகின்ற குற்றவாளிகளை போதைக்கு அடிமையாக்கி தன்னுடைய சாம்பிராஜ்யத்தினை கட்டிகாக்க பயன்படுத்த ஆரம்பிக்கிறான்.

மறுபுறம், ஹீரோ JD ஒரு கல்லூரியின் வாத்தியாராக இருக்கிறார். வழமையான வாத்திகள் போலல்லாமல் காலையில் வாத்தி, மாலையில் மதுபிரியர் என காலத்தை ஓட்டுகிறார். ஆனால், கல்லூரியில் மாணவர்களுக்கு சார்பாக பல செயல்பாடுகளை செய்திருப்பதால் மாணவர்களின் ஆதரவையும், நிர்வாகத்தின் எதிர்ப்பையும் சேர்த்து வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கல்லூரியில் தேர்தல் நடக்க ஏற்பாடு ஆகிறது. அந்த தேர்தல் முடிவில் பல பிரச்சினைகள் நடக்க, நம்ம வாத்தியார் அந்த கல்லூரியை விட்டு விலகுகின்ற சூழ்நிலை வருகிறது.

இந்தநிலையில் வில்லன் பவானி வாழ்க்கையில் , நம்ம ஹீரோ JD எப்படி உள்நுழைகிறார் ? இருவருக்குமான மோதல் எப்படி ஆரம்பிக்கிறது ? இறுதியில் என்ன நடக்கிறது ? என்பதை மூன்று மணிநேர படமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

சில காட்சிகளில் “கைதி” படத்தினை இயக்கிய இயக்குனர் நான்தான்டா… என்பதுபோல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கினாலும், மூன்று மணிநேர படத்தில் அதை முழுமையாக வைத்திருக்க தவறியிருக்கிறார். திரைப்படத்தின் இடைவேளைக்கு பின்னதான காட்சிகள் அதற்கு உதாரணம். அதேபோல, திரைப்படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரையுமே முழுமையாக பயன்படுத்தி கொண்டதாக இல்லை. விஜய் – விஜய் சேதுபதி இவர்களை தாண்டி அந்த படத்தில் நாசர், ஆண்ட்ரியா, சாந்தனு என பலர் இருந்தாலும், சொற்ப காட்சிகளில் மிக குறைவாக பயன்படுத்தப்பட்டிருப்பது சின்ன குறைதான். அதிகமாக காட்சிகளை படமாக்கி, பல கதாபாத்திரங்களை படத்தில் முழுமையாக கொண்டுவர முடியாமல் போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

திரையில் விஜய் & விஜய் சேதுபதி அசத்துகிறார்கள். விஜய் என்றும் இளமை துடிப்புடன் தனது கதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார். அவருக்கு நிகரான வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார். ஒரு கதையில் ஹீரோவுக்கு சமமாக வில்லன் இருக்கின்றபோது திரைப்படம் சுவாரசியமாக இருக்குமென்பதை இந்த படத்தில் தர முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், திரைப்படத்தின் கிளை கதைகளும், கிளைமேக்ஸ் காட்சிகளும் அதற்கு சுவாரசியம் சேர்ப்பதாக இல்லையென்பது சோகமே…!

அனிருத் பாடல்கள் & பின்னணி இசை படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. வில்லனுக்கான தீம் பாடலில் scam 1992 இசையை கேட்க முடிகிறது. படத்தில் நாயகி வேண்டுமென்பதற்காக மாளவிகா மோகன் இருக்கிறார். அதுபோல, படத்தில் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அதிலும் சண்டை காட்சிகள் பாராட்டப்பட வேண்டியவகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நகரும் இரண்டாம் பாதி கதையினை விரிவாக தர முயற்சித்த இயக்குனர், அதனையே இன்னும் சுருக்கபப்டுத்தி, சுவாரசியமாக தந்திருந்தால் இந்த படம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

கைதிபோல விறுவிறுப்பாக திரில்லர் திரைப்படத்தினை தர முயற்சி செய்த இயக்குனர், மூன்று மணிநேரத்தில் அதனை தர தவறியிருந்தாலும், இளைய தளபதி இரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஆக்சன் கலந்த பவர்பேக் கொண்டாட்ட திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.#MasterMovieReview #மாஸ்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here