காதலை
சொல்லி விட்டு
பதிலுக்கு காத்திருந்தான் ஹரிஷ்
நானே சொல்லலாம்
என்றிருந்தேன்
நீயே சொல்லி விட்டாய்
ஐ லவ் யூ சதீஷ்
என்று சொன்னாள்.
அன்புடன்
கட்டியணைத்துக் கொண்டு
பக்ரீத் வாழ்த்தை
தெரிவித்தான் ரஹீம்
தன் வாழ்வை பங்கிட்டவளின்
மகனையா வாழ்த்தினாய்
என்று அம்மா கோபித்துக் கொண்டாள்.
திருதிருவென முழித்தவனை
அதே நிறம் அதே ஆள்
என அடையாளம் சொல்லி
இன்ஸ்பெக்டரின் மருமகனை
திறம்பட ஒப்படைத்து
வேலைக்கு வேட்டு வைத்துக் கொண்டார்
கான்ஸ்டபிள் ஆரோக்யசாமி.
கடன் வாங்கியும்
நெஞ்சம் நிமிர்த்தி
நடந்து சென்று கொண்டிருந்த
மாரி முத்துவை
கண்டும் காணாமல் போகிறார்
கடன் கொடுத்த நாராயணன்.
சரண்யாவும் சரவணனும்
இருவருமே
நிச்சயம் செய்யப்பட்டு
மூன்று மாதமாக
பேசிப் பழகிக்கொண்டவர்கள்தான்
இன்று திருமணம் நடக்கிறது
புகைப்படத்தில் புன்னகை
என்பதே தெரியாமல் நிற்கின்றனர்…
கல்பனா
முன்பு போல்
இப்பொழுது வாயாடுவதில்லை
சில நேரங்களில்
அவள் வாய் மௌனமாகி விடுகிறது
சில நேரங்களில்
அவன் காது மந்தமாகி விடுகிறது…
ஊரிலிருந்து வந்த
சிவாவை வரவேற்க நின்ற
அவனது குழந்தை வர்சினி
அவனைக் கண்டதும்
நீ என் அப்பா இல்லை என்றது….
இப்படி ஆயிரம்
கதைகளுக்கு காரணமாயிருந்தது இவர்களுக்கு நடுவில் இருக்கும்
அந்த ஒரு மாஸ்க் தான்
-ம. வினு மணிகண்டன்