‘நீங்கள் மன நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா…?’ இந்தக் கேள்வியை நீங்கள் எவரிடம் கேட்டாலும் அவர்கள் இல்லை என்றுதான் பலரும் பதில் கூறுவார்கள்…
பணக்காரர்களும், புகழுடன் வாழ்பவர்களும் கூட மன நிறைவின்றியே வாழ்கின்றனர் என்பதே மெய்…
மன நிறைவு ஏன் யாருக்கும் வருவதில்லை…? எல்லோரும், பணமும், புகழும் மன நிறைவைத் தரும் என்று நம்பி அவைகளைத் துரத்துகின்றனர்…
அவை கிடைத்த பின் அவர்கள் மனம் அதிக பணத்திற்கும் , அதிக புகழுக்கும் ஆசைப்படுகிறது. ..
பணம் படைத்தவர்கள் பணத்தை பாதுகாப்பதற்காகவும், தக்கவைத்துக் கொள்வதற்காகவும்தான் அல்லல் படுகின்றனர்..
அன்பான குடும்பம், நோயற்ற உடல், நெருங்கிய நண்பர்கள், உளமார்ந்து நேசிக்கும் உறவினர்கள், என இவையாவும் உங்களுக்கு மன நிறைவைத் தரலாம்…
உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுக்கும் பணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம்…
ஆனால், இந்த மகிழ்ச்சி உண்மையும் அல்ல. நிரந்தரமும் அல்ல…
சரி!, எது மன நிறைவான வாழ்க்கையை தரும்…? எந்தச் செயல் உங்களுக்கு ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தையையும், நோயில்லா உடலைத் தருகிறதோ அதுவே நிறைவான வாழ்வு…
உங்களிடம் எந்த பண்பு மற்றவர்களை மகிழ்வுறச் செய்கிறதோ அதுவே உங்களுக்கு நிறைவான வாழ்வு…
நிறைவு ஏன்பது ஒரு மன நிலை. ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும், அறுதி இட்டுக் கூற இயலாது…
அவரவர்களே அவர்களுக்கு நிறைவை எந்தப் பண்பு கொடுக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இருப்பதைவிட்டு இல்லாததை தேடும் வாழ்க்கையாக நீங்கள் இருக்கக் கூடாது, உங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும்…
உங்கள் வாழ்க்கையை நீங்களே இனிமையாக்க கற்றுக் கொள்ள வேண்டும், பிறருடைய வாழ்க்கையை ஒப்பிடக் கூடாது…
ஒரு யாசகன் மற்றொரு யாசகனைத்தான் ஒப்பிட்டு பொறாமை கொள்கிறான். ஒரு செல்வந்தனை ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவது இல்லை..
பொறாமை இல்லா வாழ்வே மன மகிழ்வைத் தரும்…
ஆம் நண்பர்களே…!
போதும் என்ற மனம் படைத்தவர்களும், இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர்கள் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை பெறவியலும்…
அவர்கள் வாழ்க்கைதான் மன நிறைவான வாழ்க்கையாக இருக்கும்…
பணம் சம்பாதியுங்கள். அதே நேரம் இருப்பதை வைத்து திருப்தியாக வாழும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். அந்த வாழ்க்கையே உங்களுக்கு மன நிறைவைத் தரும்.