மதுரையை இரண்டாம் தலைநகரமாக்குவது சாத்தியமா?

0
59

தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?

*தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா?*

*சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக ஆக்கினால், தென் மாவட்டங்கள் வளம்பெறும் என்று தெரிவித்தார்.*

*மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜுவும் இந்த யோசனையை வலியுறுத்தினார். இதையடுத்து மதுரையைச் சேர்ந்த வணிகர் சங்கங்களும் இதனை ஆதரித்தன*.

*அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டத்தால் வலியுறுத்தப்பட்டு, வருவாய்த் துறை அமைச்சரால் முன்வைக்கப்படும் இரண்டாம் தலைநகரம் என்பதற்கு என்ன பொருள்?*

*சென்னையில் இருப்பது போல ஒரு தலைமைச் செயலகம், சட்டப்பேரவை ஆகியவற்றை மதுரையிலும் உருவாக்க வேண்டுமா?*

*இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் விரிவாகப் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்*

*மதுரையில் ஒரு ‘administrative block’ ஒன்றை உருவாக்க விரும்புவதாகச் சொன்னார்.*

*அதாவது ஒரு நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டுமெனச் சொல்கிறேன். தற்போது எல்லா அனுமதிகளுக்கும் சென்னைக்குச் சென்று கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே, சென்னையைச் சுற்றியே தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் துவங்க எவ்வளவோ சலுகைகளை அளித்தும், எல்லோருமே சென்னைக்கு அருகிலேயே தொழிற்சாலைகளைத் துவங்க விரும்புகின்றனர். கன்னியாகுமரியில் வசிக்கும் ஒருவர்கூட அனுமதிகளுக்காக சென்னைக்கு வர வேண்டியிருக்கிறது.*

*இதனால் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் சென்னையை விட 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. தமிழ்நாடு அரசில் உள்ள 56 துறைகளுக்குமான முக்கிய முடிவுகள் சென்னையிலேயே எடுக்கப்படுகின்றன.*

*நாங்கள் முன்வைப்பது என்னவென்றால் மதுரையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகளை, அனுமதிகளை பெறும் வகையில் ஒரு நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கான அளவீடுகள், மதிப்பீடுகளுக்கு சென்னைக்கு வர வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்” என தாம் முன்வைக்கும் இரண்டாவது தலைநகரம் திட்டத்தை விவரித்தார் ஆர்.பி. உதயகுமார்.*

*சென்னைக்கு மாற்றாக மற்றொரு தலைநகரத்தை முன்வைத்து ஒரு விவாதம் 80களிலேயே துவங்கிவிட்டது.*

*80களின் துவக்கத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, தலைநகரத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை பரிந்துரைத்தார். தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளில் இருந்தும் திருச்சியை வந்தடைந்து விடலாம் என்ற எண்ணத்திலும், சென்னையில் அதிகரித்து வரும் நெருக்கடியை மனதில் வைத்தும், இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.*

*அதற்குப் பிறகு கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள், மதுரையில் உயர் நீதிமன்றத்தின் அமர்வு என வசதிகள் பரவலாக்கப்பட்ட பிறகு இந்தக் கோரிக்கை பெரிதாக எழவில்லை. இந்த மூன்று பெரிய நகரங்களிலும் உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் மட்டும் எழுந்த வண்ணம் இருந்தன.*

*அ.தி.மு.க. அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, மதுரையில் உள்ள வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்தத் திட்டத்தை வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறது.*

*மதுரை தமுக்கம் மைதானத்தின்* *விரிவான வரலாறும்*,
*அதன் எதிர்காலமும்*
*ப.சிங்காரம்:*
*போரும், வாழ்வும்’ – கடல் தாண்டிய தமிழ்ச் சமூகத்தின் பெரும் கலைஞன்* *தமிழர்_பெருமை*
*நாகர்கோவிலில்* *வசிக்கும் ஒருவர் எந்த ஒரு திட்டத்திற்கும்* *ஒப்புதல் வாங்க வேண்டுமானால் 800 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் 25,000 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமானால் சென்னையில் தான் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் வட பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள வளர்ச்சி தெற்குப் பகுதியில் இல்லை. இதற்குத் தீர்வாக, மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கி, சில அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதனால், சென்னையில் நெரிசல் குறையும்” என்கிறார் மதுரை சேம்பர் ஆஃப் காமர்சின் தலைவரான ஜெகதீசன்.*

*தமிழ்நாட்டின் வடக்கு, மேற்கு மாவட்டங்களை ஒப்பிட்டால் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் குறைவு தான். தென் தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் ஜாதி கலவரங்களை அடுத்து 1997ல் அமைக்கப்பட்ட நீதியரசர் மோகன் ஆணையம், தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததே, ஜாதிக் கலவரங்கள் அதிகம் நடப்பதற்குக் காரணம் என்று குறிப்பிட்டது.*

*மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை செயல்பட்டு வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. விமான நிலையத்தின் ஓடுபாதையை மேலும் நீளமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, ஒரு தலைநகருக்கான தகுதி மதுரைக்கு இருப்பதாக ஜெகதீசன் சொல்கிறார்.*

*மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கீழ் 14 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்தப் பதினான்கு மாவட்டங்களில் தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் தொழில் வளர்ச்சிக்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை – தூத்துக்குடி இன்டஸ்ட்ரியல் காரிடார் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கே வரவில்லை.*

*மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தால், இவையெல்லாம் மாறும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் ஜெகதீசன்.*

*தமிழ்நாட்டின் பெரிய மாநகராட்சிப் பகுதிகளில் ஒன்றான மதுரை, சுமார் பதினான்கு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நகரம். ஆனால், மதுரை நகரத்தைப் பொறுத்தவரை மிகவும் நெரிசலான தெருக்களையும், சாலைகளையும் கொண்ட ஒரு பகுதி. இதனால், மதுரை விரிவாக்கம் குறித்து பேசும் போதெல்லாம் நகரம் இன்னும் நெரிசலாகும் என்ற அச்சம் வருவதைத் தவிர்க்க முடியாது. தவிர, நிர்வாக அலுவலகங்கள், அதை ஒட்டி ஏற்படும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தேவைப்படும் நிலம் குறித்த கவலைகளும் இருக்கின்றன.*

*மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 30,000 ஏக்கர் வரை நிலமெடுக்கலாம். திருநெல்வேலி – மதுரை செல்லும் பாதைகளிலும் நிறைய வானம் பார்த்த பூமி உண்டு. இது டெல்டா பிரதேசமல்ல. ஆகவே வளமான பகுதிகள் இங்கு குறைவு. ஆகவே நிலம் ஒரு பிரச்சனையே இல்லை” என்கிறார் ஜெகதீசன்.*

*ஆனால், இது உண்மையிலேயே மதுரையின் வளர்ச்சிக்காக எழுப்பப்படும் கோரிக்கை தானா? என்ற கேள்வியை எழுப்புகிறார் மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.*

*ஆழ்ந்த முன் யோசனையுடன் இந்தத் திட்டத்தை அவர்கள் முன்வைத்திருந்தால், நாமும் அதைத் தீவிரத்துடன் விவாதிக்கலாம். அ.தி.மு.கவில் உள்ள 60 மாவட்டங்களில் ஒரு மாவட்டச் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் இது. மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்வைத்த ‘விஷன் ஸ்டேட்மென்ட் 2023’ஐ முழுமையாகப் படித்திருந்தால், இப்படி ஒரு யோசனையையே முன்வைத்திருக்க மாட்டார்கள். அந்த திட்ட ஆவணத்தில், 2023க்குள் தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்துடன் பத்து நகரங்களை உருவாக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.*

*அதைப் பற்றி எதுவும் பேசாமல் இப்படி ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது குறித்து அமைச்சரவைத் தீர்மானம் ஏதும் நிறைவேற்றியிருக்கிறதா, கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா? எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சனைகள் குறித்து மக்களைத் திசை திருப்பவே இப்படி சொல்கிறார்கள்” என்கிறார் பழனிவேல் தியாகராஜன்.*

*தமிழக* *முதலமைச்சரிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா? என்று ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, இப்போது தான் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. அரசிடம் விரைவில் சொல்வோம் என்று தெரிவித்தார் அவர்.*

*தற்போதைய சூழலில் இது சாத்தியமே இல்லாத யோசனை என்கிறார் பழனிவேல் தியாகராஜன். “மாநில அரசு ஏற்கனவே பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கடந்த நான்கு மாதத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். 85 ஆயிரம் கோடி பற்றாக்குறை வரவிருக்கிறது. ஆகவே திட்டச் செலவுகளை, முதலீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டுமென்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் டெண்டர்கள் விடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இப்படியே சென்றால் ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். இந்தச் சூழலில் இரண்டாம் தலைநகரை உருவாக்க முடியுமா?” எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.*

*இம்மாதிரி ஒரு இரண்டாம் தலைநகரை உருவாக்க திட்டமிடலுக்கே ஒரு வருடம் தேவைப்படும். ஆனால், இந்த ஆட்சியில் இன்னும் 8 மாதங்களே மீதமிருக்கின்றன. உண்மையிலேயே இம்மாதிரி யோசனை இருந்தால் 9.5 ஆண்டுகளாக சும்மா இருந்தது ஏன்? என்கிறார் பழனிவேல் தியாகராஜன்*.

*நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். எப்போது முன்வைக்கிறோம் என்பது முக்கியமல்ல” என பதிலளித்தார் ஆர்.பி. உதயகுமார்*.

வரும் வெள்ளிக்கிழமையன்று தென் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த தொழில் துறையினரும், வர்த்தகர்களும் மதுரையில் இது தொடர்பான கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here