மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

0
97

”மகிழ்ச்சி என்ற உணர்ச்சிஇல்லாவிட்டால் வாழ்க்கைசுமக்க முடியாத பெரியசுமையாகி விடும்”என்றார் பெர்னாட்ஷா. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியில் தொடங்கும் ஒரு அதிசயப் பயணம். மன அரங்கில் மலரும் எண்ணங்களின் வலிமைக்கு காரணம் மகிழ்ச்சி. மகிழ்ச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சுரங்கம். மகிழ்ச்சியின்றி எந்த மாபெரும் சாதனையும் நடந்ததில்லை என்றார் தத்துவமேதை எமர்சன்.

உள்ளத்தின் உணர்ச்சி

வெற்றிச் சிகரங்களைத் தொட்ட அத்தனை பேரும் தங்கள் வேலையை நினைத்து சலித்துக் கொண்டதே இல்லை. ஒவ்வொரு நிமிடமும் மனம் நிறைந்த ஈடுபாட்டோடும், உற்சாகத்தோடும் பணியாற்றினார்கள். வாழ்க்கை என்பது போராட்டமல்ல, அது கணுகணுவாய் சுவைக்க வேண்டிய கரும்பு. நாம் விநாடி விநாடியாய் கொண்டாட வேண்டிய திருவிழா. வாழ்க்கையின் வளர்ச்சியைக் கூட்டுவதே இந்த மகிழ்ச்சி தான். முகமலர்ச்சியுடன் இருந்தால் எந்தக் காரியத்தையும் எளிதில் சாதித்து விடலாம். உள்ளம் எதை நினைக்கிறதோ அதை அப்படியே வாய் கூறுவதில்லை. ஆனால், உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை முகம்காட்டி விடுகிறது. முகத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும்.

முகத்தில் மலர்ச்சி

ஒருவரை வரவேற்கும் பொழுது வழிநெடுக மலர் துாவி வரவேற்பது என்பது இயலாது. ஆனால், நிறைந்த மோகனச் சிரிப்புடன் வரவேற்கலாம் அல்லவா? நாம் அணியும் ஆடையை விட மேலானது முகத்தில் மலரும் மலர்ச்சி. ‘மலர்ந்த முகம் சாதாரண உணவையே விருந்தாக்கிவிடும்’ என்று, இங்கிலாந்து பழமொழி கூறுகிறது. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் இருப்பது தான் என்று ஜெர்மன் அறிஞர் கூறுகிறார்.

“மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்லமகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்நீ செய்வதை நீ நேசித்தாயானால் நீ வெற்றியடைவாய்”

என்றார் ஆல்பர்ட் சுவிட்சர். பார்வை குறையுடைய மாணவி, பெனோ செபன் தனது குறையை ஒரு பொருட்டாக கருதி முடங்கி விடாமல் முயன்று படித்து ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெறுகிறார். சிறிதும் தயங்காமல் எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட, எது இருக்கிறதோ அதை நினைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வில் முன்னேறலாம் என்று நமக்கு அறிவுரையாக தந்திருக்கிறார்.

வாழ்க்கை எனும் விளக்கு

“நமக்கும்கீழே உள்ளவர் கோடிநினைத்துப்பார்த்து நிம்மதி நாடு”என்றார் கவியரசு கண்ணதாசன். செல்வத்திலும், தோற்றத்திலும் நமக்கு கீழே உள்ளவர்களைப் பார்த்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்னவாக இருக்கும்? “அழகியபொருள் அழியாத இன்பம்” என்றார் ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ். அக்கம் பக்கம் பார்த்தால் நம்மைச் சுற்றி அழகு கொட்டிக் கிடக்கிறது. பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்கு போனால் அதிகாலையில் படர்ந்திருக்கும் இளம்பனி, மெதுவாய் இதழ் விரிக்கும் மொட்டுகள், இதமான காற்று, இப்படி ஒவ்வொரு பொருளிலும் ஒரு அழகு இருக்கும்.

“எத்தனைகோடி இன்பம் வைத்தாய்” என்றார் முண்டாசுக் கவி. இதை உணராத காரணத்தாலேயே நமக்கு இன்பம் கூட மகிழ்ச்சியைத் தர மறுக்கின்றன. மகிழ்ச்சியான இதயமுள்ளவன் இடை விடாத விருந்தைப் பெற்றவனாவான். மகிழ்ச்சி என்ற திரியை வைத்துக் கொண்டு தான் வாழ்க்கை என்ற விளக்கை ஏற்ற முடியும். மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கென்றே, நாம் உலகத்தில் பிறந்திருக்கின்றோம்.

வாழ்க்கை ஒரு கலை

பிறக்கும்பொழுது நாம் எதையும் கொண்டு வரவில்லை, இறக்கும்போது எதை கொண்டு போகப் போகிறோம். நாம் எப்படி வந்தோமோ அப்படியே தான் செல்லப் போகிறோம் என, அறிந்த பிறகு நாம் ஏன் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது. வாழ்க்கையை கலையென்று கூறினாலும், மலையென்று மலைத்தாலும், உண்மையில் வாழ்க்கை இன்பம் தரும் கலைதான். அபூர்வமானது, அலாதியானது, ஆனந்தம் தரவல்லது. வாழ்க்கையை எவ்விதம் கையாளுகிறோமோ, அவ்விதம் அதனுடைய பயனை அடைய முடியும். நமக்கென்று அமைக்கப்பட்ட வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

”ஒருவன்சிரிக்கும் போதெல்லாம்மரணம்ஒத்திப் போடப்படுகிறது’‘என்பது இத்தாலிய பொன்மொழி. கவலை என்ற கரையானை உள்ளே விட்டு விட்டால்அரித்துக் கொண்டேயிருக்கும். கவலைப்படுவதின் மூலம் நம்முடைய சரீரத்தில் ஒரு முழம் கூட்டவோ, குறைக்கவோ முடியுமா? என்று பைபிள் நம்மைப் பார்த்துக் கேட்கிறது.’மகிழ்ச்சியை எண்ணலாம், விரும்பலாம், அடையலாம் ஆனால், விலை கொடுத்து வாங்க முடியாது’. என்பது மாக்ஸின் கருத்து. சிரித்துக் கொண்டே ஒரு அறைக்குள் நுழையும் மனிதரைக் கண்டால் மற்றொரு விளக்கும் அந்த அறையில் எரிவது போல் பிரகாசிக்கும். என்று ஸ்டீவன்சன் கூறுகிறார். மனிதனுக்கு ஒளியைக் கொடுக்கக் கூடியது மகிழ்ச்சி தான் என்பது இவருடைய கருத்து.

மூளையின் பாராட்டு : மனம் ஒரு கண்ணாடி, கவலை அதில் படியும் அழுக்கு. சிரிப்பு அந்த அழுக்கை போக்கும் திரவம். சிரிப்பைப் போல் சுவையானதும் இல்லை, சிரிப்பைப் போல சுலபமானதும் இல்லை. ஒரு மலை அடிவாரத்தில் மூன்று பேர் கல் உடைக்கிறார்கள். அவர்களிடம் ஒருவர் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். ஒருவன், ‘வயிற்றுப் பசிக்காக இதைச் செய்கிறேன்’ என்றான். இரண்டாம் மனிதன், ‘யாரோ கட்டடம் கட்டுகிறார்கள், அதற்கு இக் கல்லை வாங்கிக் கொண்டு போகிறார்கள்’ என்றான். மூன்றாம் மனிதன் பதில் என்ன தெரியுமா? அடுத்த ஊரில் கோயில்கட்டுகிறார்கள். நாங்கள் உடைக்கின்ற இந்தக் கற்களை வைத்து தான் சிற்பிகள் சுவாமி சிலைகள் செய்யப் போகிறார்கள் இந்த மூன்றாவது மனிதன் நாள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கிறான். மற்ற இருவரும் குறைகூறிக் கொண்டும், தங்கள் விதியைப் பழித்துக் கொண்டும் வாழ்ந்தார்கள். உலகில் நமது மிகச் சிறந்த காதலன், காதலி நாமாகவே இருக்க வேண்டும். முதலில் நாம் நம்மை விரும்ப வேண்டும். நல்ல விஷயங்களை நாம் செய்யும் போது நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே நம்மை பாராட்டி, மகிழ்ச்சியாக்கிவிடும். நல்லதேசெய்வோம், மகிழ்ச்சியாய் இருப்போம்.கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது. ஆனால், எதிர் காலம் நம் கையில் அதை ஆக்கப்பூர்வமாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. நாம் நமது மகிழ்ச்சியை ஒத்தி வைத்துக் கொண்டா இருக்கின்றோம். உதாரணமாக பள்ளியில் படிக்கும் போது, இப்பள்ளி கல்வி முடிந்தால் போதும், நான் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எண்ணுகிறோம். பின்னர் கல்லுாரி,பணி, பதவி உயர்வு, வாழ்க்கைத் துணை இப்படி சங்கிலித் தொடர் போன்று போய்க் கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான இந்தியா

மகிழ்ச்சி என்பது எங்கோ வருங்காலத்தில் இல்லை. சிந்தித்து பார்த்தால் நாம் சந்தோஷமாக நேற்றோ, நாளையோ இருக்க முடியுமா? ஆனால், மகிழ்ச்சியாக இப்போது மட்டுமே இருக்க முடியும். உலக மக்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். பணப் பற்றாக்குறை, சண்டைகள், முரண்பாடு, இயற்கை சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா, இந்தியா, மெக்சிகோ நாட்டு மக்கள், மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கிறார்கள். பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் அத்தனை சந்தோஷமாக இல்லையாம். இந்த ஆய்வின் படி குடும்ப அமைப்பு, நிலையான புரிதலுடன் கூடிய உறவுகள் ஒருவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்ற, ஆச்சரியமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. ‘உலகம்பிறந்தது எனக்காக ஓடும்நதிகளும் எனக்காக’ என்ற, பொன்வரிகளை மனதிற் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here