எந்தன் கருப்பையில் நிந்தன் இருப்பை
அரைகுறையாய் அறிந்ததிலிருந்தே மறந்தும்
அதிர்ந்து நடக்கவில்லையடா நான்
அடிக்கடி விரல்கள் அடிவயிற்றை
அனிச்சையாய் வருடிடவே
உள்ளுக்குள் ஓர் இனம்புரியா
சிலிர்ப்பொன்று சில்லிட்டது…
உந்தன் நகர்வின் அசைவினை என்றுணர்வேனோ?…
உந்தன் கால்தடங்களை என் வயிற்றில் என்று பதிப்பாயோ?…
என்றெண்ணியே கற்பனை வானில்
சிறகுயர்த்திப் பறக்கும் மனதினை
எந்த கடிவாளமிட்டு நான் அடக்கிட ..
இதோ உணர்வுகளின் மொத்தக் குவியலாய் என்னுள் நீ…
முழுதாய் ஆக்கிரமித்துவிட்டாயடா
என் செல்வமே…
இதோ
உனை உறுதி செய்துக்கொள்ளவே
தவித்து தாகித்து நிற்கிறதடா நெஞ்சம்…
–சசிகலா திருமால்.