மகனதிகாரம் _ 1
அடிவயிற்றில் ஏதோவொரு மாற்றம் நிகழ
அது மயக்கமென உருமாற
என்னவன் மீது நான் கொண்ட
மயக்கத்தின் பயனாய் விளைந்த
ஓர் அற்புத முத்து
எந்தன் கருப்பை சிப்பிக்குள்
உருவாகும் தருணம்…
உதிரங்கள் உதிராமல் நாட்களெல்லாம் உருண்டோட
உனை உறுதி செய்யவே முழுதாய்
நாற்பத்தைந்து நாட்களாகுமென யாரோ கூற….
ஒவ்வொரு நாளையும் யுகமென நகர்த்துகிறேன்
உனை உறுதிப்படுத்திக் கொள்ளவே…
குமட்டலும் மயக்கமும் பாடாய் படுத்த
அறைகுறையாய் உறுதியானது
அடிவயிற்றில் உருவானது நீதானென்று…
என்னவனோடான கூடலென்பது
வெறும் உணர்ச்சிகளுக்கான
உடல்களின் சங்கமம் அல்ல..
உனை உருவாக்க என்னவனும் நானும்
தேவனாகவும் தேவதையாகவும்
உருமாறிய தருணமெனவே
உணர்கிறேனடா நான்…
-சசிகலா திருமால்.