புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17.

0
64

_வில்லிப்புத்தூர் ஆழ்வார் கர்ணனின் கொடைத்திறத்தை,_ _இந்திரனிடம் கண்ணன் கூறுவதாக)_
_இவ்வாறு பாடுவார்:_

*”வல்லார், வல்ல கலைஞருக்கும்*
*மறை நாவலர்க்கும் கடவுளர்க்கும்*

*இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும*்
*இரந்தோர் தமக்கும் துரந்தவர்க்கும்*

*சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும்*
*சூழும் சமயாதிபதிகளுக்கும்*

*அல்லாதவர்க்கும் இரவிமகன்*
*அரிய தானம் அளிக்கின்றான் ‘*

_( இரவிமகன்- கதிரோன் மைந்தன்/ சூரிய புத்திரனாகிய கர்ணன்)_

_மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் (17.1.1917) என்ற எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் என்ற வாத்தியார் என்ற புரட்சிநடிகர் என்ற மக்கள் திலகம் என்ற பொன்மனச்செம்மல் ஆகிய புரட்சித்தலைவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து அரிய பெரிய சாதனைகளைச் செய்யவில்லை யாயினும் இன்றும் மக்களால் நினைக்கப்படுகிறார் என்றால் சோர்வைத் தராத அவருடைய துடிப்பு மிக்க படங்கள் ஒரு பக்கம் இருக்க, ஈரம் நிரம்பிய அவருடைய இதயம் இங்கு வேறு யாருக்கும் வாய்க்கவில்லை என்பதாலும் தான்!_

_கர்ணன் பாத்திரத்தை நடிகர் திலகம் நினைவுறுத்துவாரெனின், கர்ணனின் கொடைப் பண்பை மக்கள் திலகம் நினைவுறுத்துகிறார்!_

_ஒரேயொரு நிகழ்ச்சி அந்த ஈரம் நிரம்பிய ஈகையாளனை யாரெனக் காட்டும்:_

_படகோட்டி படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஹரிஹர ஐயர் என்பவர் எம்.ஜி.ஆரைப் பார்க்க வருகிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளரான ராமகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் தந்தை மாஜிஸ்திரேடாக பணியாற்றியபோது அவருக்குக் கீழே குமாஸ்தாவாக பணிபுரிந்த மணி ஐயரின் மகன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்._

_பாலக்காடு அருகேயுள்ள பூதங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தார். வங்கியிலிருந்து ரூ20000( 60 ஆண்டுகளுக்கு முன்னால் அது பெருந்தொகை!) எடுத்துக் கொண்டு வரும்போது ரத்தக் கொதிப்பு காரணமாக சாலையில் மயங்கி விழுந்தார். பணத்தை எவரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்!_

_திருமணத்துக்கு 20 நாட்களே இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் . படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஏதாவது உதவி கேட்கலாம் என்று வந்திருக்கிறார்._

_விஷயம் எம்.ஜி.ஆருக்குச் சென்றது._

_எம்.ஜி.ஆர், தன் தந்தையிடம் பணியாற்றியவரின் மகன் என்றவுடன் மகிழ்ந்து அவரிடம், தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்றும் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய பிறகு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு சென்னைக்கு வரும்படியும் கூறியிருக்கிறார்._

*” பணம் பறிபோயிடுத்தே என்று கவலைப்படாதீங்க. கண்டிப்பாக, நான் உதவி பண்றேன்.உங்கள் மகள் திருமணம் குறிப்பிட்ட தேதியில் நிச்சயம் நடக்கும்”*

_ஹரிஹர ஐயருக்கு நம்ப முடியவில்லை! யாரால்தான் நம்ப முடியும்?!_

_சென்னைக்கு வந்த ஹரிஹர ஐயருக்கு ரூ 20000/ பணத்தை ஒரு டவலில் சுற்றி இடுப்பில் கட்டி அதற்கு மேலே வேட்டியைக் கட்ட வைத்து, தான் அணியும் தடிமனான பெல்ட்டை அதற்கு மேல் இறுக்கக்கட்ட வைத்து, இராமகிருஷ்ணனிடம்_ *”இவரை பத்திரமாக அழைத்துச் சென்று பாலக்காடு ரயில் வண்டியில் ஏற்றி விட்டு வா”* _என்று அனுப்பி வைத்தார்._

_உணர்ச்சி மிகுந்த நிலையில் ஹரிஹர ஐயர் நன்றி சொல்லியிருக்கிறார். அதற்கு பொன்மனச்செம்மல் சொன்ன பதிலைப் பாருங்கள்:_

*” என் அப்பாவும் உங்க அப்பாவும் பிரண்ட்ஸ். அவங்க பிள்ளைங்க நாம இரண்டு பேரும் பிரண்ட்ஸ். நண்பர் செய்யும் காரியத்துக்கு எதுக்கு நன்றி? பத்திரமாகப் போங்க. மகள் கல்யாணத்தை நன்றாக நடத்துங்க. என் வாழ்த்துக்கள்”*

*_எப்பேர்ப்பட்ட ஆத்மா!_*

_இதோடு முடிந்துவிட்டது என்றுதான் நான் இதைப் படிக்கும் போது நினைத்தேன். ஆனால்_

_கதை இதோடு முடிந்துவிடவில்லை!_

_திருமணம் நடந்து முடிந்த பிறகு எம்.ஜி.ஆரிடம் ஆசி பெற அழைத்துச் சென்றார் ஹரிஹர ஐயர்._

_புதுமணமக்களை வாழ்த்தி ஆளுக்கு ரூ500/ கொடுத்திருக்கிறார் வள்ளல்! (1961 ல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!)_

_ஹரிஹர ஐயர் தமிழ்நாட்டுக்காரர் இல்லை. இருப்பினும் அந்த ஈர இதயம் பள்ளமடையைக் கண்ட வெள்ளம் போல் பாய்ந்து தன் கருணையால் அதை நிரப்பி மகிழ்ந்தது!_

_இவர்தான் எம்.ஜி.ஆர் !_

_இவருடைய ரசிகர்கள் இவர் செய்யும் தான தர்மங்கள் எல்லாம் தமக்கே கிடைத்தது போல மகிழ்ந்தார்கள். அவர்கள் உள்ளத்தில் தெய்வமாக என்றென்றும் விளங்கினார் மக்கள் திலகம்!_

_இவரைக் கலியுகக் கர்ணன் என்று அழைப்பதில் இவருடைய அரசியல் எதிரிகளுக்குக் கூட ஆட்சேபணை இருக்க முடியாது!_

வாழ்க அவர் புகழ்!

மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here