பாரதி நினைவு தினம் செப்டம்பர் 11.

0
140

_பாரதியார் தன்னை நாடி வரும் அன்பர்களை வரவேற்கும் விதமே அலாதி!_
_கவிஞனின் கம்பீரமும் கருணையும் கனிவும் கொண்ட குரலோடு அவர் வரவேற்கும் தோரணையே வந்தவர்களைத் திகைக்க வைக்கும்! இதோ வாசுதேவ சர்மா என்பவர் பாரதியாரைச் சந்தித்த அனுபவத்தை அவரே கூறக் கேட்போம்:_

*_” எனக்கப்பொழுது வயது 19…. கலாசாலையிலே படித்திருந்தேன். இரகசியப் போலீசார் தொந்திரவுகளைப் பற்றிய கதைகள் உண்மையானவையும், பிறவும் பல கேட்டிருந்தேன். மனதினுள்ளே தேசபக்தரைத் தரிசித்தல் வேண்டினும்…என் எண்ணங்களை அடக்கியே வைத்திருந்தேன். இப்படிப்பட்ட எனது மனக் கலக்கத்தை நீங்களே பாவித்துக் கொள்ளலாம்._*

*_கலவரமுள்ளவனாக, ஒருவித உள்ளெழுச்சியுடனும், அவர் வீட்டு வாயிற்கதவைத் திறந்து (வாயிற் கதவு சாத்தப்பட்டிருந்த போதும் உள்ளே தாழிடப்படவில்லை) உள்ளே…. வந்தேன். அங்கே அவருடைய பெண் குழந்தை சகுந்தலை இருந்தார். அக்குழந்தை பாரதியார் மேலிருப்பதாகக் கூறிவிட்டு,_*

*_”அப்பா – யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்”_*
*_என்று கூவினார்._*

*”யார்? யாராயிருந்தாலும் வரலாமென்று சொல்!”*

*_என்று ஒரு பிரதி யுத்தரம் மேலிருந்து வந்தது._*

*_அந்தக் குரலிலே விவரிக்க வொண்ணாத மேன்மையான ஒளியிருந்தது. சக்கிரவர்த்தி ஒருவன் எவ்வளவு சுவாதீனத்துடன் எவ்விதம் ஏதாவது கட்டளையிடுவானோ, அவ்வித சுவாதந்தர்யம் அதிலே தோன்றிற்று. ஒவ்வொரு பதமும் பூரணமாக, விழுங்கப் படாமல் கம்பீரத்துடன் உச்சரிக்கப்பட்டது. வெங்கலத்தொனி போன்ற சுத்த நாதம். அதிலே ஈசன் கருணை– அன்பு ஊற்றுக் கலந்திருந்தது._*

*_மிகவும் பீதி கொண்டவனாக நான் மேன்மாடிக்குச் சென்றேன்._*
*_அங்கே ஒருவர் நின்று கொண்டிருந்தார். மொட்டைத் தலையிலே சரிகை அங்கவஸ்திரமொன்று அலட்சியமாகச் சுற்றப்பட்டுப் பின்புறம் வால் தொங்கவிடப்பட்டிருந்த தலைப்பாகை. இருபுறமும் மேல்நோக்குமாறு முறுக்கி விடப்பட்ட ‘கெய்சர்’ மீசை. மழுங்கச் சிரைத்த மோவாய்க் கன்னம். தாம்பூலமிட்டு சிவந்த வாய். பால் நிற “ஷர்ட்டு”. அதன் மீது கருப்புப்பட்டிலே ஒரு “வாஸ்கட்டு”. முழந்தாளைச் சேரத் தொங்கும்படி மூலைக்கச்சம் வைத்துக் கட்டின வேஷ்டி. வேஷ்டியின் இருபுறமும் பின் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது…_*

*மாநிறம். கூரிய இருவிழிகள். தம் எதிர் நிற்போரை உள்ளத்தை ஊடுருவி அளந்தறியுஞ் சக்தி வாய்ந்தவை.*
*நேராக இமையாது நின்றதொரு நோக்கம்.* *சந்தோஷமும் களிப்பும் மிஞ்சிய வதனம்.அவருடைய சிவந்த உதடும் வெள்ளிய பற்களும் நன்றாகத் தெரிந்தன.*
*குனியாமல் குறுகாமல் நேராக நின்ற ஒய்யாரத் தோற்றம்….*

….
*”வாருங்கள்”*
*_என்றார் அந்த நூதன மனுஷ்யர்._*

*_” நான் பாரதியாரைப் பார்க்க வந்தேன்”_*
*_என்றேன்._*

*_கடகடவென்று ஒரு சிரிப்பு._*

*_”நான்தான் பாரதி”–_*
*_எப்படித் தொடங்குவது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஆதரவு இருந்தது._*

*_”நெல்லையப்ப பிள்ளை– உங்கள் சிஷ்யர், என்னை அனுப்பினார்–” என்றேன்._*

*”நெல்லையப்பனா! நல்லது வாருங்கள். ஊஞ்சலிலே உட்காருங்கள். உங்களை…”*

*_மறுபடியும் கண்களில் ஒருவித ஒளி உண்டாயிற்று._*

*”தம்பி! உன்னை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கின்றதே!”*

*_”இருக்கலாம்”_*

*”ஒரு நிமிஷம் நில் — எங்கே — கோஷ் வீட்டில் பார்த்தேனோ?”—*

*_”இருக்கலாம்.”_*

*”நீ சாஸ்திரியார் பிள்ளை வாசு அல்லவா? கலைமகளுக்கு வியாசங்கள் எழுதுகிறாயல்லவா? மகா சந்தோஷம்! உட்கார். உன்னை வெகுநாளாகப் பார்க்க வேண்டுமென்றிருந்தேன்— வா!”*

*_’பாரதி மாத இதழ்- 1931._*

_( உத்தரம்= பதில்/ சுவாதீனம்= இயல்பு/ சுவாதந்தர்யம்= உரிமை/ கோஷ்= அரவிந்தர்/ நெல்லையப்பர்= பரவி.சு. நெல்லையப்பர்/ வியாசங்கள் = கட்டுரைகள்/ கலைமகள்= கி.வா.ஜ. ஆசிரியராகப் பணியாற்றிய மாத இதழ்)_

_மனதில் பதிந்துவிட்ட சித்திரம் எளிதில் அழியாது. ஆனால் அதைச் சரியாக வர்ணிக்க எல்லோராலும் முடிவதில்லை! எப்படி சர்மாவின் வார்த்தைகள் பாரதியாரை நம் மனக் கண் முன்னே நிறுத்துகிறது பாருங்கள்!_

_பத்தொன்பது வயது இளைஞன் எழுதுவதை ஊக்கப்படுத்தும் பாரதியாரின் பண்பைப் பாருங்கள்! கண்கள் நீரைப் பெருக்குகின்றன!_

*”குனியாமல் குறுகாமல் நேராக நின்ற ஒய்யாரத் தோற்றம்!”*

_கொடுத்து வைத்தவர்கள்!_

மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here