பாபநாசத்தின் பொருநைக் கரை…

0
30

பொதிகை வெற்பிலிருந்து புறப்பட்டவை தென்றலோடு தமிழும் தாமிரபரணியும். கிழக்கு நோக்கி வீழும் கல்யாண அருவியின் வெள்ளம் வடக்கு நோக்கி நகர்ந்து அகத்தியர் அருவியாகி, மேலும் வடக்கு நோக்கியோடி, கிழக்கே சமவெளியை நோக்கிப் பாய்கிறது! தலையணையில் இருந்து மீண்டும் வடக்காகவும் பிறகு கிழக்காகவும் பாபநாசம் கோயில் முன்பு மறுபடியும் வடக்கில் பெருகி விழுந்து சமநிலை அடைந்து கிழக்கு திசையில் ஊருக்குள் வருகிறது!

பாபநாசம் கோயில் படித்துறைக்கு முன்னால் இரண்டு தனியாருடைய கட்டுமானங்கள் ஆற்றுக்குள்ளேயும் ஆற்றை ஒட்டியும் இருக்கின்றன.

எத்தனையோ முறை ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களைக் கடந்து இவையிரண்டும் இன்னும் நிலைபெற்று நிற்கின்றன!

முதலாவது கட்டிடம் அந்தக் காலத்தில் தெற்கு அரண்மனை என்று அழைக்கப்பட்டது. முழுவதும் கற்களால் ஆன உறுதியான கட்டிடம். இந்தக் கட்டிடத்தில்தான் என்னுடைய மூத்த சகோதரியின் திருமணம் 1965 ல் நடைபெற்றது. பிரதான கட்டிடத்தையொட்டி பொருநையாறு பாய்கிறது. ஆற்றுக்கு உள்ளே அதாவது ஆற்றின் குறுக்கே ஒரு நீண்ட மண்டபம் கிழக்கு மேற்காக நிற்கிறது. உணவு சாப்பிட்டு முடித்ததும் கை கழுவுவதற்குத் தண்ணீர் வைத்திருக்க மாட்டார்கள். நேராக ஓடும் ஆற்றுக்குள் கையை விட்டால் போதும்! ஆறு நமது எச்சிற்கையை அலம்பி விடும்!

தற்போது நீர்வரத்துக் குறைந்திருப்பதால் அதன் மூன்று வழிகளிலும் நீர் வரத்து இல்லை.

அதற்கு அடுத்த கட்டிடம் எங்கள் ஊர்ப் பண்ணையார் குடும்பத்துக்குச் சொந்தமான ‘ ஆனந்த விலாஸ்! ‘

எத்தனையோ ஆண்டுகளாய் ஏற்பட்ட வெள்ளங்களினால் உறுதி குலையாமல் நிற்கும் அந்தக் கற்சுவரும் கிழக்கில் உள்ள படித்துறையும் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவை!

தங்கப்பதுமை திரைப்படத்தில் நடிகர் திலகமும் நாட்டியப்பேரொளியும் இந்தப் படித்துறையில் நீராடும் காட்சி இடம்பெற்றது. இந்தக் காட்சி வரும்போது தியேட்டர் முழுக்கவும் ஆனந்தக் கூச்சல்தான்!

படித்துறை அன்று அவ்வளவு சுத்தமாக இருந்தது. சில தினங்களுக்கு முன் அங்கே சென்றிருந்த போது அங்கே கிடந்த துணிகளும் காகிதக் குப்பைகளும் மனதை வேதனையடைய வைத்தன!

அன்று குளிக்க வருபவர்கள், லைபாய் சோப்பு கால் கட்டி வாங்குவார்கள். உடம்புக்கும் அதுதான்; உடுத்தியிருந்த துணிக்கும் அதுதான்!

ஒரு சிலர் பத்துப் பைசா சங்கரன்கோவில் ஏரோப்ளேன் நீலம் சோப்பைப் ( லைபாய் சோப்பைப் போட்டுவிட்டு,) போடுவார்கள்!

குளித்து முடித்து துண்டை உடுத்திக் கொண்டு, வேட்டி, பனியன், சட்டை முதலியவற்றைத் தோளில் போட்டுக் கொண்டு நடப்பார்கள். பாதி தொலைவிலேயே காய்ந்து விடும் . நடந்தவாறே வேட்டியை உடுத்தி சட்டையையும் போட்டுக் கொள்வார்கள்!

கீழே கிடக்கும் மரக்குச்சிகளைக் கொண்டு மிச்சம் உள்ள சோப்பின் மத்தியில் குத்தி எடுத்துக் கைகளில் வைத்துக் கொள்வார்கள்! இன்னும் நாலைந்து குளியலுக்கு அவையாகும்!

சிலர் துணிகள் காயும் வரை துண்டைக் கட்டிக்கொண்டு, காயந்த துணிகளைப் பக்கத்தில் உள்ள அயர்ன் கடையில் கொடுத்துத் தேய்த்து அணிந்து கொண்டு, அதற்குப் பிறகே செல்லுமிடம் செல்வார்! அவர் செல்வந்தராவார்!

இன்று அத்தனைப் படித்துறைகளிலும் அறைகுறையாகப் போடப்பட்ட சோப்புகள் கிடக்கின்றன!

வீட்டிற்கு எடுத்துச் செல்வது இன்று கௌரவக் குறைச்சல்!

கல்லைக் கழுவி, கொண்டு வந்த சாப்பாட்டை அதன் மீது கொட்டி, ஓடுகின்ற ஆற்றில் கால்கள் நனைய, அந்தக் கால்களை மீன்கள் கூட்டமாக வந்து கடிக்க, கையில் உள்ளச் சோற்றையோ இட்டலியையோ மீன்களை நோக்கி நீரில் வீச, மீன்கள் கால்களைக் கடிப்பதை விட்டுவிட்டு, எறிந்த உணவைத் தங்கள் வாயில் கவ்விப் பிடிக்க, உணவு தீர்ந்ததும் மீன்கள் மீண்டும் கால்களைக் கதுவ….

இன்று கற்கள் உணவிடும் கலங்களாக இல்லை! துள்ளிக் குதித்த மீன்களையும் காணோம்!

போனவை போனவைதான்!

-மா. பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here