பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
( 4.6.1946- 25.9.2020)
கனத்த சரீரம்
கம்பீரமான சாரீரம்
கனகச்சிதமான உடை
கண்ணியமான தோற்றம்
கனிவு ததும்பும் பேச்சு
கலைவாணி
குடிகொண்ட குரல்
கள்ளமில்லா உள்ளம்
வளரும் கலைஞர்களை
வஞ்சனையிலாது வாத்சல்யத்துடன்
வாழ்த்தும் விரிந்த மனம்
அகவை எழுபதைத் தாண்டியும்
அகிலத்தை வசீகரிக்கும் அந்தக் குரல்!
அடடா…
எத்தனை செவிகளுக்குள்
தேனிசையைப் பாய்ச்சியது!
எத்தனை இதயங்களுக்கு
ஆறுதல் தந்தது!
எத்தனை உள்ளங்களில்
காதல் மலரச் செய்தது!
எத்தனை இளைஞர்களை
ஆட வைத்தது!
‘மலையோரம் வீசும் காற்று’
என்று அந்தக் குரல்
பாடத் தொடங்கினால்
மலையோரம் நாம் நிற்போமே!
காற்றும் நம்மைத் தழுவுமே!
மாயந்தானே இது!
மாயம் தான்…
மாயம் நிகழ்த்திய மானுடனே,
மாய்ந்தானே!
மாயத்தை மாண்புறச் செய்தவரே,
காயத்தைக் காலம் கொண்டு செல்லும்!
ஆனால் நீர்
வாய் திறந்து பாடிய
வார்த்தைகள் எங்கே போகும்?
மண்ணில் இவர் பாடலின்றி
யாரும் வாழ்தல் கூடுமோ?
‘ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே’
என்று பாடும்போதே
ஓர் உல்லாச நகையை
உலவவிட்ட உன் குரலை
உற்றுக் கேட்டது உலகம்!
இது வேறொரு குரல்!
வேதம் சொல்லுவதும்
வேடிக்கைக் காட்டுவதும்
வேதனை சுமக்கும் நெஞ்சங்களுக்கு ஆறுதல் அளிப்பதும்
உம் ஒருவர்க்கே சாலும்!
‘பாடுநர் ஆடுநர் ஆகிக்
களிக்கின்றார் அல்லால்
கவல்கின்றார் ஒருவரைக் காணேன்’
என்ற கம்பன் அடிகள்
உம் ஒருவர்க்கே பொருந்தும்!
களித்தவர் ஏது கைம்மாறு செய்ய இயலும்?
கரங்குவித்து உமது பாதம் வீழ்ந்து
வணங்குகிறோம் ஐயனே!
பாலசுப்பிரமணியமே!
பாரதத்தின் ரத்னமே!
பாருள்ள வரையிலும்
தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரவிய
இனிய குரல் என்றும் எங்கும்
எங்கள் நெஞ்சங்களில்
நிரம்பி நிற்கும்!
ஓயாதுபாடி ஓய்ந்த
உத்தமனே
நின் புகழ் வாழ்க!
அடியேன்,
மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்