நீர்க்குமிழி

0
132

ஒரு காட்டில் துறவி ஒருவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரிடம் பலர் சீடர்களாகப் பாடம் கற்று வந்தனர். துறவி எப்போதுமே மௌன விரதத்தில்தான் இருப்பார். ஆனால் வருடத்தில் ஒருநாள் மட்டும் அவர் தன் சீடர்களிடம் உரையாற்றுவார். ஒரே ஒரு சீடரின் கேள்விகளுக்கு மட்டும் அவர் பதிலளிப்பார்.

ஒருநாள் அந்த ஆசிரமத்திற்குப் புதிதாக ஒரு சீடன் வந்து சேர்ந்தான். அவனுக்கு ஆசிரமத்தின் நடைமுறைகள் சுத்தமாகப் புரியவில்லை. மேலும் துறவி வருடம் முழுக்கவே எதுவும் பேசாதபோது அவரிடம் சீடர்கள் எதற்காக இருக்க வேண்டும் என்ற கேள்வி அவனைக் குடைந்துகொண்டே இருந்தது.

ஒருநாள் அந்தச் சீடன் ஒரு மண் பாத்திரத்தில் பழரசம் எடுத்துச் சென்று துறவிக்குக் கொடுத்தான். பழரசத்தை அருந்திவிட்டு அந்தப் பாத்திரத்தை அப்படியே கீழே போட்டு உடைத்தார் துறவி.

பின் சீடர்களை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். அனைத்துச் சீடர்களும் புரிந்தது என்பதுபோல தலையை ஆட்டினர்.

புதிய சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

பிற சீடர்களிடம் வினவினான். அவனையே சுயமாகச் சிந்திக்குமாறு அவர்கள் கூறினர். மண் பாத்திரத்தைக் கீழேபோட்டு உடைப்பதில் என்ன பாடம் இருக்க முடியும்? என அவன் சிந்திக்க ஆரம்பித்தான். பல மாதங்கள் ஆகியும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை.

துறவி மௌனத்தைக் கலைத்துப் பேசக்கூடிய அந்த ஒருநாள் வந்தது. துறவியிடம் கேள்வி கேட்க மற்ற சீடர்கள் அவனுக்கு வாய்ப்பு அளித்தனர்.

“ஐயா, நீங்கள் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்ததன் மூலம் எங்களுக்கு என்ன கூற விரும்பினீர்கள்?” என்ற தனது சந்தேகத்தினை அவன் துறவியிடம் கேட்டான்.

அதனைக் கேட்ட துறவி மென்மையாகச் சிரித்துக்கொண்டே, “இந்த உலகில் நிலையானது எதுவுமே இல்லை என்பதை விளக்கவே நான் அன்று அவ்வாறு செய்தேன்” என்றார்.

“சற்று விளக்கமாகக் கூறுங்கள் ஐயா” என்றான் சீடன்.

துறவி விளக்க ஆரம்பித்தார்……

“சீடர்களே.. நான் ஒரு மகாபாரதக் கதைகூறப்போகிறேன். அனைவரும் கவனமாகக் கேளுங்கள். ஒருநாள் தர்மரின் அரண்மனைக்கு கிருஷ்ணர் வருவதாகத் தகவல் கிடைத்தது. உடனே அரண்மனையில் வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

மரியாதைக்குரிய விருந்தினர்களை அரண்மனையின் வாயிலுக்குச் சென்று வரவேற்பது மரபு என்ற அடிப்படையில் தர்மர் உள்ளிட்ட பிரமுகர்கள் அரண்மனையின் வாசலுக்குச் சென்று கிருஷ்ணருக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது தர்மரிடம் ஒரு வறியவர் தயங்கித் தயங்கி வந்து யாசகம் கேட்டார்.

இந்தச் சூழ்நிலையில் யாசகம் அளிப்பதை விரும்பாத தர்மர் ‘இங்கு உன்னைக் கவனிக்க யாருக்கும் அவகாசமில்லை. நாங்கள் ஒரு மரியாதைக்குரிய விருந்தினரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். நீ நாளை வா பார்க்கலாம்’ என்றபடி கிருஷ்ணரை ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் அங்கு வருகை புரிந்த கிருஷ்ணரை பலத்த வரவேற்புடன் அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றவுடன் கிருஷ்ணர் பீமனிடம் ‘பீமா! உடனே அரண்மனையின் முரசை எடுத்து வா. நான் கூறக்கூடிய செய்தியை அரண்மனை முழுக்க முரசறைவித்துக் கூறு. பின் நாற்சந்தி கூடுமிடங்களில் முரசறைவித்து இந்தச் செய்தியை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கச் செய்’ என்றார்.

உடனே வேகமாகச் சென்ற பீமன் அரண்மனையின் முரசினை எடுத்து வந்தான். கிருஷ்ணரை நோக்கி ‘செய்தியைக் கூறு கிருஷ்ணா’ என்றான்.

‘ பீமா.. எங்கள் அண்ணன் தர்மர் காலத்தை வென்றுவிட்டார் என அனைவருக்கும் முரசறைவித்துக் கூறு’ என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் கூறுவதில் நிச்சயம் ஏதேனும் பொருள் இருக்கும் என்பதை உணர்ந்த பீமன் கிருஷ்ணர் கூறியபடியே ‘எங்கள் அண்ணன் தர்மர் காலத்தை வென்றுவிட்டார்’ என்று முரசறைவித்துக் கூற ஆரம்பித்தான்.

இதைக் கேட்ட தர்மர் உள்ளிட்ட அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

“கிருஷ்ணா, நான் எங்கே காலத்தை வென்றேன்?” என தர்மர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர் “ஆம் தர்மா, நீ காலத்தை வென்றுவிட்டாய். நான் வருவதற்குச் சற்று நேரம் முன்பு வந்த ஒரு யாசகனை நாளை வா என்று கூறினாய் அல்லவா? அப்போது நாளை வரை நீ அரசனாகவே இருப்பாய், உன்னிடம் செல்வம் இருக்கும் என நம்புகிறாய். அது மட்டுமல்லாது நாளை வரை அவன் வறியவனாக இருப்பான் என்றும், நாளையும் அவன் உன்னிடம் யாசகம் கேட்டு வருவான் எனவும் நீ உறுதியாக நம்புகிறாய் அல்லவா? அப்போது நீ காலத்தை வென்றவன்தானே!

◇நிலையில்லாத இந்த உலகில்,
நிலையில்லாத ஒரு மனிதன்,
நிலையில்லாத மற்றொரு மனிதனிடம் நாளை யாசகம் தருகிறேன் என்றால் அது காலத்தை வென்றதாகத்தானே அர்த்தம்” என்றார் கிருஷ்ணன் புன்னகையுடன்.◇

அப்போதுதான் தர்மர் உள்ளிட்ட அனைவருக்குமே உலகின் நிலையாமைத் தத்துவம் தெளிவாகப் புரிந்தது.

நாளை தர்மம் செய்வது என்பது நிச்சயமில்லாத ஒன்று என்பதால், ஒருவன் தர்மம் செய்ய விரும்பினால் உடனே அதனைச் செய்துவிட வேண்டும் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொண்டனர்” என்று கூறிக் கதையை முடித்த துறவி தொடர்ந்து தன் சீடர்களிடம்,….

“சீடர்களே, நிலையாமைத் தத்துவத்தை ஒருவன் புரிந்துகொள்வதில்தான் வாழ்க்கையின் அடிப்படையே அடங்கியிருக்கிறது. மனித வாழ்க்கையில் இளமை, செல்வம் மற்றும் யாக்கை ஆகியன நிலைக்காதவை.

◇நீர்க்குமிழி தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடும். அதைப் போன்றே மனித வாழ்க்கையின் இளமையும் நிலைக்காது சிறிது நாளில் அழிந்துவிடும்.
◇கடல் நீரில் ஆர்ப்பரித்து வரும் பெரிய அலைகள் கரைக்கு வந்து வந்து போகும். அதைப் போல செல்வமும் நிலைக்காமல் வந்து வந்து போகும். அவ்வாறே நீரில் எழுதும் எழுத்துகள் நிலைத்து நிற்காமல் எழுதும்போதே அழிந்துவிடும். அதைப் போலவே மனித உடலும் நிலைக்காமல் அழிந்துவிடும் என முப்பெரும் நிலையாமைகள் குறித்து நம் முன்னோர் தெளிவாக விளக்கியுள்ளனர்.

◇மனித வாழ்க்கை நிலையற்றது என்றாலும் நாம் வாழும் காலம் வரை மனிதன் நேர்மையான வழியிலேயே வாழவேண்டும். நீதி, நேர்மை, நியாயம், ஈகை,அன்பு போன்ற மனிதனது ஆதார குணங்களை நாம் பிறருக்காக அன்றி, நம் மனசாட்சிக்குப் பயந்து நமக்காகக் கடைப்பிடிக்க வேண்டும்.

◇நாம் யாருக்கேனும் ஏதேனும் கொடை அளிக்க விரும்பினால் அதனை நாளை நாளை என்று தள்ளிப்போடாமல் அந்தக்கணமே கொடுத்துவிட வேண்டும்” என்று கூறிப் புன்னகைத்தார் துறவி.

“ஐயா, உங்களது ஒருநாள் விளக்கமே இத்தனை அற்புதமாக இருக்கிறதே. நீங்கள் தினமும் எங்களுக்கு விளக்கம் அளித்தால் அது எங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் தானே” என்று எதிர்பார்ப்புடன் கேட்டான் சீடன்.

” சீடர்களே! நமது அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் ஆகும். ஆனால் ஞானம் என்பது தினமும் எதையாவது கைவிடுவது” என்று புன்முறுவலுடன் கூறிய துறவி தனது மெளன விரதத்தினைத் தொடர ஆரம்பித்தார்!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here