நிராகரிப்பின் வலி…

0
42

நிராகரிப்பை விட
நிராகரிப்பதற்காய் சொல்லப்படும்
வலிமையற்ற காரணங்களே
மிகுந்த வலியைத் தருகிறது…
வலிகளினூடே வாழ்க்கை
பழகிவிட்ட ஒன்றுதான் என்றாலும்
ஒவ்வொரு முறையும்
நிராகரிப்பின் வலி மட்டும்
நீண்டுகொண்டேயிருக்கிறது…

பொதுவில் இயல்பாய் இருப்பதாய்
நடித்தாலும்
தனிமையைத் தேடிப்பிடித்து
இருகரங்கள் கொண்டு
வாயை இறுக்கி மூடி
அழுகையின் மூலம் கூட
வலியை வெளியேற்றி விடாமல்
மீண்டும் உள்ளுக்குள்ளேயே
திணித்திடும் ரணம்
மீண்டும் ஒருமுறை வேண்டவே வேண்டாம்….

அன்பைக் கொடுத்து
அழுகையை பரிசாகப் பெறுவதில்
என்ன இருந்துவிடப் போகிறது
மீளமுடியா துயரம் ஒன்றைத் தவிர….
அதீத அன்பு எப்போதுமே
அனாதையாக்கப்படுகிறது….

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here