எங்களுக்கு
வேலை நேரமென்று
ஏதுமில்லை.
அதிகாலை சூரியன்
எழும் முன்னே போகலாம்
அந்தி சாய்ந்த பின்னும்
வேலை தொடரலாம்.
எங்களுக்கு
வயது வரம்பு
என்று விதிமுறைகள் ஏதுமில்லை
குழந்தைகளும் உழைப்பாளர்
தாத்தா பாட்டியும் உறுப்பினர்கள்
எங்களுக்கு உணவு நேரம்
ஏதுமில்லை
எப்படி உட்கார்ந்து உண்ண வேண்டும்
என்ற
கட்டுப்பாடு இல்லை
காலைப் பலகாரம்
காய்கறிகளோடு சாப்பாடு
என்ற வரைவிலக்கணம் இல்லாதது
எங்கள் முதலீட்டில் அளவுகோல்
இல்லை
இவ்வளவு இலாபம் ஈட்டும்
என்ற எல்லையில்லை.
ஐந்தும் கிடைக்கலாம்
ஐம்பதும் விழலாம்
எங்கள் வேலைக்கு
இந்தத் தேதியில்
வருவாய் வருமென்ற
நிலைப்பாடில்லை
கடமையைச் செய்து விட்டுக்
கடனே என்று இருக்க வேண்டும்
எங்களுக்குச் சீருடை
என்றில்லை
உழவுக்கு உடையென்பது பாரமே!
இந்தப் பயிருக்கு
இவ்வளவு நீரும் காற்றும்
கதிரொளியும் வேண்டுமென
எங்கும் கட்டளை இடமுடிவதில்லை
இந்த வேலை மட்டுமே
எனக்குத் தெரியும் என்பதில்லை
களையெடுக்கலாம்
கதிர் அறுக்கலாம்
உளுந்து செடி பிடுங்கலாம்
பருத்தி ஆயலாம்
வாங்கி விற்பவன் வளமாகிறான்
உற்பத்தி செய்பவன்
உள்ளுக்குள் அழுகிறான்
ஏழைகள் என்பதெங்கள்
பெயர்.
-சிவபுரி சு.சுசிலா.