திருமால் அருள் பெற்ற அசுரர்கள்

0
52
  1. பிரகலாதன்: இவர் கேட்காமலே பல முறை அற்புதமாகக் காத்தார்! தேவர்களுக்கு இப்படி அருளியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்காக ஒரு அவதாரமே எடுத்தார். இவர் ஒரு திருமால் அடியவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சான்றோர் பகர்வர்.
  2. நரகாசுரன்: திருமாலின் சக்கிரம் இவரை வீழ்த்தியபின் இவர் ஒரு தெய்வீகச் சரீரத்தைப் பெற்றார். அப்போது இவர் கரம் கூப்பிக் கூறியது: “ஐயனே, உன் திருவாழி என் மீது பட்டு என் பழைய அசுர சரீரம் நீங்கியது. அசுரர்கள் அடைய முடியாத நற்கதியை உன் அருளால் அடையப் போகின்றேன். இந்த நாளை அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, உனக்குச் சுவை மிக்க அன்னங்கள் படைத்துக் கொண்டாட வேண்டும்.” தீபாவளி பிறந்தது! இதற்கு மேலும் ஒரு சான்று தேவையோ?
  3. ரத்தினாவளி: இவள் மகாபலியின் புதல்வி. திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது அவரது சிறிய திருமேனியைப் பார்த்து “இந்தக் குழவிக்கு பால் கொடுக்க வேண்டும்” என்று தீவிரமாக விரும்பினாள். திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தபோது தனது தந்தை மகாபலியின் மீதுள்ள அன்பினால் கலங்கி “இவனுக்கு விடத்தைக் கொடுக்க வேண்டும்” என்றும் தீவிரமாக விரும்பினாள். திருமால் கண்ணனாக அவதரித்து இவளது இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றினார். இவளே பூதனை என்ற அரக்கியாகப் பிறந்து கண்ணனால் உயிர் உண்ணப்பட்டவள்! கண்ணனைக் கொல்ல முயன்ற இவள் வைகுந்தமும் அடைந்தாள் என்பது நோக்கத்தக்கது. திருமால் அருள் பெற்ற அரக்கர்கள்
  4. விபீடணன்: இவர் சீதையைத் திருடிச் சிறையில் அடைத்தக் கொடியோனின் தம்பி. நல்ல குணம் கொண்டதொரு தம்பி! இவரையும் இவருடன் வந்த 4 அரக்கரையும் எம்பெருமான் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக உடனே ஏற்றார் அன்றோ? ஆழ்வார்களும் இவரைச் செல்வ விபீடணன் என்றனர்! ஆசார்யர்கள் இவரது சரணாகதியை அன்றோ பெரிதும் போற்றி பாடினர்!
  5. திரிசடை: இவள் இலங்கையில் வாழ்ந்த ஒரு அரக்கி – விபீடணனின் பெண் என்பர். இவளது ஞானமும் சீதையிடம் காட்டிய பரிவும் அன்பும் எத்திறம்! இவள் இராமனின் புகழ் பாடியது எத்திறம்! இவளை வால்மீகி முனிவரும் கம்பர் பெருமானும் அருணாசல கவிராயரும் போற்றிய வகைதான் எத்திறம்!
  6. சரமை: இவளும் இலங்கையில் வாழ்ந்த ஒரு அரக்கி – விபீடணனின் மனைவி என்பர். இவளது நல்லொழுக்கமும் சீதையிடம் காட்டிய பரிவும் அவளுக்குச் செய்த சேவையும் எத்திறம்! சீதையால் அன்புடன் அணைக்கப் பெற்ற இவளது பேறு எத்திறம்! வால்மீகி முனிவர் இவளைப் போற்ற இயம்பிய அடைமொழிகள் எத்திறம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here