திடீர் மாரடைப்பை உண்டாக்கும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க எளிய வழிகள்

0
60

கொலஸ்ட்ரால் என்றதுமே பலரது நினைவில் வருவது, இது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது என்பது தான். கொழுப்பு குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், வெள்ளை மற்றும் மெழுகுப் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். இது உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இது உடலில் உள்ள செல்களுக்கான இன்றியமையாக ஒரு கட்டுமானப் பொருளாகும். மேலும் இது சாதாரண உடல் செயல்பாடுகளான பல முக்கிய ஹார்மோன்கள், பித்தம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமானவை.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் பெறப்படுகிறது. அதில் முதலாவதாக உடலில் உள்ள கல்லீரலால் பல்வேறு அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 1000 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் கல்லீரலால் உற்பத்தியாகிறது.

இரண்டாவதாக உண்ணும் உணவுகள் மூலம் பெறப்படுகிறது. குறிப்பாக விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவுகளில் தான் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுகளில் கொலஸ்ட்ரால் ஏதும் இல்லை. கொலஸ்ட்ராலால் ஏற்படும் சிக்கல்கள் பொதுவாக உடல் தனக்குத் தேவையான அனைத்து கொலஸ்ட்ராலையும் உருவாக்குகிறது.

இருப்பினும் பல ஆண்டுகளாக நாம் விலங்குகளிடம் இருந்து பெறும் உணவுகளை உட்கொண்டதில் நமது இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால்கள் படிய ஆரம்பிக்கின்றன.

இப்படி படியும் கொலஸ்ட்ரால்களின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் போது, இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களை குறுகலாக மாறிவிடுகிறது. இதன் விளைவாக இதயத்திற்கு குறைவான இரத்தம் செல்கிறது. இரத்தம் தான் இதயத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. ஒருவரது இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காமல் போனால், இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த வழங்கல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, ‘ஆஞ்சினா’ என்னும் மார்பு வலியை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.

சில சமயங்களில் தமனிகளில் படியும் கொலஸ்ட்ரால்கள் ஒருவித உறைவை உருவாக்கி, மாரடைப்பை மட்டுமின்றி, சிறுநீரக செயலிழப்பு, டிமென்ஷியா போன்ற பிற நோய்களுக்கும் வழிவகுக்கும். இது தவிர, இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகரித்தால், இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஆபத்து காரணிகள் ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்த பல காரணிகள் உள்ளன.

அவையாவன:
* சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகள்
* உடல் பருமன்
* உடலுழைப்பு இல்லாமை
* புகைப்பிடிப்பது
* மது அருந்துவது
* குறிப்பிட்ட நோய்களான சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் தைராய்டு பிரச்சனைகள் போன்றவை.
* வயது அதிகரிப்பது
* கொழுப்புள்ள உணவுகள் ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மருந்துகள் இல்லாமல் ஒருசில உணவுகளின் உதவியுடன் எளிதில் குறைக்கலாம்.

கீழே கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கைக்குத்தல் அரிசி

நார்ச்சத்து அதிகம் நிறைந்த கைக்குத்தல் அரிசியை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம். கைக்குத்தல் அரிசியின் வெளிப்புற அடுக்கில் ஓரிஜானோல் என்னும் பொருள் உள்ளது. இது உடலில் உற்பத்தி செய்யப்படும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கக்கூடியது. சொல்லப்போனால், இந்த பொருள்தான் கொலஸ்ட்ராலைக் குறைக்க பரிந்துரைக்கப்படும் மருந்துகளிலும் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கைக்குத்தல் அரிசி சாதத்தை உட்கொள்வது மிகவும் நல்லது.

ஸ்வீட் கார்ன் மற்றும் எலுமிச்சை

ஸ்வீட் கார்னில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடியது. தினமும் காலையில் ஆவியில் வேக வைத்த ஸ்வீட் கார்னில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி சாப்பிட்டு வந்தால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் குறையும். வேண்டுமானால், ஸ்வீட் கார்னை காலை உணவாகவும் உட்கொள்ளலாம்.

கருஞ்சீரகம்

50 கிராம் கருஞ்சீரகம் மற்றும் 50 கிராம் வெள்ளை சீரகத்தை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 கிராம் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2 முறை குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரையும்.

முளைக்கட்டிய அல்பால்ஃபா

அல்பால்ஃபா பருப்புக்களை நீரில் ஊற வைத்து, பின் அதை ஒரு ஈரமான துணியில் கட்டி முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு இயற்கையாக குறையும். அதோடு இது உடல் எடையை கணிசமாக குறைக்கவும் உதவக்கூடியது.

எலுமிச்சை மற்றும் தேன்

ஒரு டம்ளர் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பாக இதற்கு பயன்படுத்தும் நீரானது சுடுநீராக இருக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும்.

வால்நட்ஸ் மற்றும் சோயா பீன்ஸ்

வால்நட்ஸ் மற்றும் சோயா பீன்ஸை வாரத்திற்கு 3 முறை என 2 மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக கரையும். அதோடு, இது தமனிகளின் திறனை மேம்படுத்துவதுடன், மாரடைப்பு ஏற்படுத்தும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஆப்பிள் சாறு கலந்த ஆரஞ்சு ஜூஸைக் குடிப்பது நல்லது. ஏனெனில் இதில் பெக்டின் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது.

யோகர்ட்

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க வேண்டுமானால், தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிடுங்கள். தினமும் இவ்வாறு உட்கொள்வதன் மூலும், இதயம் சம்பந்தமான பிரச்சனைகளின் அபாயம் குறையும்.

மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்த மீன் போன்ற உணவுகளை உண்பது கொழுப்புக்களைக் குறைக்க உதவும். ஏனெனில் இந்த அமிலம் கெட்ட கொலஸ்ட்ராலின் உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது. மீன் சாப்பிட முடியாவிட்டால், மீன் எண்ணெய் கேப்ஸ்யூல்களை அல்லது ஆளி விதை போன்றவற்றை உட்கொள்ளலாம்.

இஞ்சி மற்றும் பூண்டு

பூண்டு மற்றும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவு குறைவதோடு, அந்த கொழுப்புக்களால் ஏற்படும் அபாயமும் குறையும். மேலும் இந்த பொருட்களால் கல்லீரலானது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற தூண்டுகிறது.

பூண்டு பால்

ஒரு டம்ளர் பாலில் 2-3 பற்கள் பூண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்த பாலை வாரத்திற்கு 2-3 முறை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here