தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

0
26

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முதல்நாளை யொட்டியே பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளும் வருகிறது.

இந்திய நாட்டின் மாபெரும் கொடுப்பிணை அண்ணல் அம்பேத்கர்.

அவரை அவர் சார்ந்த சமூகத்தினர் மட்டுமே கொண்டாடுவதைப் பார்க்கிறோம்!

அவர் பிறந்த சமூகத்தினரைத் தவிர வேறு யாராவது அம்பேத்கர் என்று தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் பண்புடைமை இத் திருநாட்டில் இல்லாதது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

எழுத்தாளர் ஜெயமோகன்,

‘அம்பேத்கரிடம் நாம் உள்வாங்க வேண்டிய முக்கியமான விஷயம்,

‘தத்துவம் அறத்தோடு பிணைந்திருக்க வேண்டும்’

என்கிற பிடிவாதம்.

‘மேலான அறத்தை உருவாக்காதது மேலான தத்துவமாக இருக்க முடியாது’ என்று நம்பியவர் அம்பேத்கர்.

இந்திய அரசியல் சட்டத்தின் பல பகுதிகளை நான் கண்லங்கி வாசித்திருக்கிறேன். ஒரு ஞானியாக நின்று அவர் அதை உருவாக்கியிருக்கிறார்.

‘இந்திய வேதம்’ என்று சொல்லக்கூடிய அளவில் மதிப்புடையது அது. இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு 25 வருடங்களுக்குப் பிறகுதான் சுவிட்சர்லாந்து தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும்போதுதான் இந்திய சட்டம் குறித்த பெருமைகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ‘

என்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான டைரிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது, டைரியின் உள்ளட்டையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் ஏதாவது வாசகங்களை சேர்த்தால் என்ன என்று யோசித்து அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செய்து வந்தோம். 2013 நெருங்கிய போது என்னுடைய பழைய டைரியில் எழுதி வைத்திருந்த அம்பேத்கரின் இந்த வீர வாசகங்கள் நினைவுக்கு வந்து அதையே சேர்த்தேன்.

என் ஆயுளுக்கும் மறக்க முடியாத வாசகங்கள் அவை:

‘ என் முதல் தெய்வம் அறிவே!

அறிவைப் பெறாமல் மானுடம் மாந்தத்தன்மையையோ, அமைதியையும், ஆக்கத்தையோ பெற முடியாது!

என் இரண்டாவது தெய்வம் சுயமரியாதையே!

நான் எவரிடமும் எனக்கென எதையும் கேட்டதில்லை!

என் மூன்றாவது தெய்வம் நன்னடத்தையே!

நான் என் வாழ்நாளில் எந்த வகையான

வஞ்சனையும் ஏமாற்றும் செய்ததேயில்லை!

மகாகவி பாரதியார், பரம்பொருளை ‘
‘ஒளியுறும் அறிவு’
என்பார்!

இந்த மூன்று நிலைப்பாடுகளிலும் தன் வாழ்நாள் முழுவதும் உறுதியாக நிற்கும் எந்த மனிதரும் காலங்கடந்து நிற்பர்!

அண்ணல் அம்பேத்கர் புகழ் வாழ்க!

ஓர் இந்தியக் குடிமகனாக அம்பேத்கருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

-மா. பாரதிமுத்துநாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here