தமிழையாண்ட ஆண்டாள் நாச்சியார்

0
130

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழையபுத்தகக்கடை ஒன்றில் ‘சித்திரத் திருப்பாவை’ என்ற நூலை வாங்கினேன். நான் வாங்கும் போதே அந்நூல் முப்பது ஆண்டுகளைத் தாண்டியிருந்தது. ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு வண்ணச் சித்திரம் என்று மொத்தம் 30 படங்கள். (ஓவியர் யாரென்று நினைவில்லை.) திருப்பதி வெங்கடேஸ்வரா திருக்கோயில் வெளியீடு. அதை வாங்கும் முன்பே ஆண்டாள் பாடல்கள் சில மனப்பாடமாகத் ( திருப்பாவை மட்டும்) தெரியும் என்றாலும் முழுமையாக பொருள் அறிந்திருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, முப்பதாவது பாசுரமான ‘வங்கக்கடல் கடைந்த ‘ என்பதற்கு வங்காள விரிகுடவைக் கடைந்த என்ற பொருளை நினைத்துக் கொண்டேன்! பாடல்கள் பலவும் மனப்பாடம் ஆனதற்கு எம்.எல். வசந்த குமாரி அம்மா அவர்களின் தெய்வீகக் குரலே காரணம்.

தடித்த காகிதத்தில் அச்சுப்பிழை ஏதுமில்லாமல் மூலமும் பதவுரையும் விளக்கவுரையும் பி.ஸ்ரீ. அவர்களால் அளிக்கப்பட்டிருந்தது கண்டு மகிழ்வுற்று பைண்டிங் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது படிப்பேன்.

எத்தனையோ புத்தகங்களை இரவல் கொடுத்து ஏமாந்த நான் இதை மட்டும் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.

என்னைவிட வயதில் குறைந்த ஓர் இஸ்லாமிய நண்பர், என்னை மாமா என்று அழைத்துப் பழகியவர். அவரிடம் ஆன்மீகம், கம்யூனிஸம் என்று எதை வேண்டுமானாலும் பேசலாம்.

உறவுகள் உற்பத்தி உறவுகள் என்று முதலில் புரிய வைத்தவர் அவர்தான்!

ஒரு முறை சங்கரன்கோவில் ஆலயத்துக்குச் செல்லும் போது என்னுடன் வந்தார். நான் வெளியே நின்று விடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ‘ மாமா நானும் வாரேன்’ என்றது எனக்கு அவ்வளவாக வியப்பளிக்கவில்லை என்றாலும் நெய்தீபங்கள் வாங்கிக் கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக பொறுமையாக ஏற்றி வைத்து வணங்கிய போது கொஞ்சம் வியப்பு ஏற்பட்டது.

இப்படியாப்பட்ட மனிதரிடம் பல ஆண்டுகளாக என்னுடைய சித்திரத் திருப்பாவை இருந்து வந்தது. ‘மாமா படிச்சுக்கிட்டு இருக்கேன் மாமா’ என்று சொன்னார். நானும் கேட்கவில்லை.

ஒரு வழியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நூல் என் கைக்கு வந்ததய்யா!

அதன் பின்னர் வேறு ஒரு நண்பனிடம் திருப்பாவை பற்றிப் பேசும்போது, ‘இந்த நூலைத் தருகிறேன், படித்துப் பார்’ என்று நானாக அவனிடம் எடுத்துக் கொடுத்து கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் ஆகிறதய்யா. கல்லுளி மங்கனிடம் கேட்டால், ‘என் புத்தகம் எவ்வளவோ வெளிய கிடக்குணேன்’ என்கிறான்!

இன்று காலையில் திடீரென ஆண்டாள் திருப்பாவை முழுவதையும் கேட்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. முப்பது பாடல்களையும் ஒரு தியானமாக ஒலியைக் கூட்டி வைத்துக் கேட்டு மகிழ்ந்தேன். எத்தனை பேர் நன்றாக அவற்றைப் பாடியிருந்தாலும் எனது தேர்வு எம்.எல்.வி. அம்மாதான்!

அப்போது தற்போது கையிலுள்ள (மூன்று வேறு வேறு உரைகள்) திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு அச்சுப் பிழைகள்! அந்த நேரத்தில் கையை விட்டுப் போன ‘சித்திரத் திருப்பாவை’ நினைவுக்கு வந்தது! அடடா… அதிலுள்ள ஓவியங்கள்!

அதை நினைத்த மாத்திரத்தில் புத்தகத்தை மூடி வைத்து விட்டு முகநூலைப் புரட்டினேன். என்ன ஆச்சரியம்! சேலம் நாராயணன் இந்த நூலிலுள்ள அத்தனைச் சித்திரங்களையும் பதிவு செய்திருந்தார்.

அதை மீண்டும் அடைந்த ஆசுவாசத்தை இன்று அடைந்தேன்!

இதுவரையிலும் முப்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்றிருக்கிறேன்.என்னை ஆலயத்துக்கு ஈர்த்தது ஆண்டாளின் திருப்பாவை முப்பதும்தான்!

சாயங்கால பூசையில் கலந்து கொண்டு, தோசைக் பிரசாதம் கிடைக்க வேண்டுமென்று ஆண்டாளைப் பிரார்த்தித்து வரிசையில் நின்று வாங்கி ,வடபத்ரசாயியை வணங்கிவிட்டு, முன்மண்டபத்துக்கும் சன்னதிக்கும் இடையிலுள்ள குறுகலான சந்திலுள்ள கடையில் பால்கோவா வாங்கிக்கொண்டு, சர்வோதயா சங்கம் நடத்தும் கடையில் பாதாம் கீர் குடித்து விட்டு ( இப்போது பழைய சுவையைக் காணோம்) மண்டபத்தில் அமைந்துள்ள கலைவாணர் முதல் வடிவேலு வரை கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிக்கவே சிரிக்கத் தெரியாத ஒருவருடைய புத்தக்கடையில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, மதுரை தென்காசி சாலையில் உள்ள கதிரவன் ஓட்டலில் ( சைவம்)சாப்பிட்டு விட்டுவருவேன்!

பால்கோவா கடைகள் நிறையவே உண்டு. ஆனால் இந்தக்கடையிலுள்ள சுவை வேறெங்கும் கிடைக்காது!

ஒரு நூல்; ஓரூர், ஒர் ஆலயம்- நினைவுகள் எத்தனையோ!!

‘பாதகங்கள் தீர்க்கும்; பரமனடி காட்டும்;

வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்

ஐயையந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு’

என்கிறது தனிப்பாடல் ( தனியன்) ஒன்று!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

-மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here