தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் பிறந்த தினம் ஜூன் 28, 1995 .

0
42

மாரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu, பிறப்பு: ஜூன் 28, 1995) இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இரியோ டி செனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். 2017 சனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது.

வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார். இந்தப் பின்னடைவிலும், அவர் இரண்டாம்நிலைப் பள்ளியை நிறைவு செய்தார்.

தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். 2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு இந்தியாவில் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத்தொகைகளிலிருந்து தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நவம்பர் 2019இல் , துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார்.

அஞ்சல் தலை

மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

சேலம் பெரிய வடகம்பட்டி மாரியப்பன், ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது, ஓர் அபார சரிதம்! செங்கல் சூளையில் வேலைபார்க்கும் ஏழைத்தாய், குடிகார அப்பா என வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை. துள்ளித் திரியும் பள்ளி வயதில் நடந்த திடீர் விபத்தில் ஒரு கால் சிதைந்தது. ‘நடக்கவே முடியாது’ என்ற உடல் தடையை உடைத்து எழுந்தது மாரியப்பனின் நன்னம்பிக்கை. சீராக நடக்க முடியாத காலுடன் சீறிப் பாய்ந்த இவரது கனவு, உயரம் தாண்டுதலை இலக்காக்கியது. ஏழைத்தாயின் அணைப்பும், பள்ளி ஆசிரியர்கள் தந்த பயிற்சிகளும், இரவு-பகலாகப் பயிற்சியில் கிடந்த உழைப்பும் அடுத்தடுத்து உயரம் தாண்டவைத்தன. இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தும் நிதி உதவியும் அரசுசார் ஆதரவும் இல்லை. அடுத்தகட்டத்துக்குப் போக முடியாமல் தவித்தபோது, வெளிச்சம் பாய்ச்சினார் பெங்களூரு பயிற்சியாளர் சத்யநாராயணா. அவர் வழிகாட்ட, ரியோ பாரா ஒலிம்பிக் போய் மாரியப்பன் தங்கம் வென்றது, தமிழகத் தடகள வரலாற்றின் வைர அத்தியாயம். 1.89 மீட்டர் உயரம் தாண்டி இந்த இளைஞன் படைத்தது உலக சாதனை.

இந்தியாவே வியந்து பார்க்கும் மாரியப்பனின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கைப் பாடம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here