சே என்னும் புரட்சியார் சேகுவாரா

0
19

சே குவேரா வாழ்க்கை வரலாறும் சே குவாரா பற்றிய அறிய தகவல்களும்…

#சேகுவேரா_பிறந்த_தினம்_ஜூன்_14

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
சுயநலம் சூழ் உலகின் பொது நலத்திலும் ஒரு சுயநலம் எப்போதும் கலந்திருக்கும். அதற்கு போராட்டக்காரர்களும் விதிவிலக்கல்ல. தன் இனம், மதம், மொழி, நாட்டுக்கான புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கிறது. ஆனால், நாடு, எல்லை கடந்து போராடும் மக்களுக்காக போராடி இன்னுயிர் நீத்த இந்த உலகம் கண்ட கடைசியும், முதலுமான சிறிதளவும் சுயநலமில்லாத போராளி என்றால் அந்த பெயருக்கு சொந்தக்காரர்.

சே குவேரா 1928-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபு வழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.

அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948-ம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951-ம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 2004-ல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளராக கருதப்படும் ஜோஸ் மார்ட்டியை தனது குருவாக நினைத்து வளர்ந்தார். மருத்துவக் கல்லூரி மாணவரான சே, தனக்கென ஒரு கூடு இல்லாமல் சுற்றித்திரிய நினைத்த சாகசக்காரன். 1951இல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் இணைந்து சுமார் 9 மாதங்கள் தென் அமெரிக்க கண்டம் முழுவதும் சுற்றினார். அப்போது அவர் எழுதிய குறிப்புகள் “தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்” என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது.

உலகிலேயே இயற்கை செல்வ வளங்கள் கொட்டிக் கிடந்த லத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்ததையும், அவர்கள் மீது ஏவப்பட்டிருந்த அடக்குமுறையையும் கண்ட சே, அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்து, ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என நம்பினார். தனது பயணத்தின் முடிவில், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும் என எண்ணம் அவரை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

லத்தீன் அமெரிக்க நாடுகளை தனித்தனி நாடுகளாக பார்க்காமல், ஒட்டுமொத்த கண்டம் தழுவிய விடுதலை போர் தேவைப்படும் பகுதியாக பார்த்தார். தனது படிப்பை முடித்து 1953ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமா பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்கிய சேவுக்கு பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு தொடர்புகள் கிடைத்தது. அந்த சமயத்தில் அமெரிக்க கைப்பொமையான பாடிஸ்டாவிடம் கியூபா அடிமைப்பட்டு கிடந்தது. பிடல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டு நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கபட்டிருந்தார். தனக்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறது என காட்டாச்சி நடத்திக் கொண்டிருந்த பாட்டிஸ்டாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல்.

சே குவேராவை தவிர்த்து விட்டு கியூப புரட்சியை எழுதி விட முடியாது. எங்கோ அர்ஜெண்ட்டினாவில் பிறந்த ஒருவருக்கு கியூபாவுக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எதார்த்தங்களை கடந்த அசாத்தியங்களை விரும்பியப் போராளியான சே, பிடல் மீது கொண்டிருந்த நட்பினாலும், அடிமை விலங்கு போடப்பட்டிருக்கும் உலக மக்கள் அனைவரும் சமம் என்று கருதியதாலும், தன்னுடைய ஆஸ்துமா நோயை பொருட்படுத்தாமல் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தலைவராக செயல்பட்டார். அது சாகசக்காரன் சே குவேராவால் மட்டுமே முடியும். பிடலும், சேவும் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் பாடிஸ்ட்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு கியூப நாட்டு அரசு பதவியும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்ட சே பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். சே தலைமையில் கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றது. அப்போது அவர் ஆற்றிய உரை உலகளவில் பெரிதும் கவனம் பெற்றது. வெள்ளை நிறவெறி, கறுப்பர் இன மக்களை அமெரிக்கா நடத்திய விதம் ஆகியவற்றை அவர் விமர்சித்தார். தொடர்ந்து, காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன் என பிடலிடம் கூறி விட்டு சென்ற சே குவேராவை காணவில்லை, அவரை பிடல் கொன்று விட்டார் என வதந்திகள் பரவின. ஆனால், அமெரிக்க உளவுத்துறையிடம் அவர் சிக்கி விடக்கூடாது என சே எங்கிருக்கிறார் என்ற தகவலை பிடல் வெளியிட மறுத்து விட்டார்.

உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம் தான் அவரை காங்கோ நோக்கி நகர வைத்தது. அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு அவர் ஆயுத பயிற்சி அளித்தார். அவரது இருப்பிடம், நடவடிக்கைகளை அமெரிக்க உளவு அமைப்பு கண்டறிந்ததையடுத்து, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார். அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் 1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று சிறைபிடிக்கப்பட்ட சே, அக்டோபர் 9ஆம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது தெரிவிக்கப்படவில்லை. பின்னர் 1995 வாக்கில் பொலிவியாவில் சே குவேராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, 1997 அக்டோபர் 17ஆம் தேதியன்று கியூபாவில் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சேகுவேராவின் மதிப்பீடுகள் அவருடைய தலைமுறையின் மதிப்பீடுகளுடன் சேர்ந்து இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றன. சமத்துவம், ஒற்றுமை, தனிநபர் விடுதலை, சமூக விடுதலை ஆகிய நமது யுகத்தின் லட்சியங்களுக்கு ”சே” என்றும் தேவைப்படுகிறார். #சேகுவேராபிறந்ததினம்ஜூன்14 #Cheguvarabirthdayjune14  #Che #Guevara #CheGuevara

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here