சூரரைப் போற்று

0
107

‘சூரரைப் போற்று’

*’SIMPLY FLY’*

_2011 ஆம் ஆண்டு. ‘பிசினஸ் டுடே’ ஆங்கில வணிக இதழில் அப்போது பிரபலமாகியிருந்த டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கேப்டன் கோபிநாத் எழுதிய தன் வரலாற்று நூலான ‘சிம்ப்லி ஃப்ளை’ என்கிற நூலைப் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்தது. அப்போது அந்த மாதமிருமுறை இதழை நான் தவறாமல் வாங்கி எனக்குப் புரிந்ததையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன்! அது ஒரு ஈர்ப்பு; கிறுக்கு என்றும் சொல்லலாம்!_

_தனது வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய் இல்லாத கோபிநாத் ஏர்பஸ் நிறுவனத்திடம் 60 விமானங்கள் ₹12000 கோடி (28.5 மில்லியன் டாலர்!) மதிப்பில் வாங்க ஆர்டர் கொடுத்ததைப் பற்றிய செய்தி இந்திய கார்ப்பரேட் உலகின் கவனத்தை ஈர்த்தது!_

_அதைத் தொடர்ந்து அந்தப் புத்தகத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முயன்றேன். நெல்லையிலோ மதுரையிலோ கிடைக்கவில்லை. அப்போது டாடா நிறுவனங்கள் ஒன்றில் உயர்ந்த பதவி வகித்த நண்பரும் உறவினருமான ஒருவர் டெல்லியில் இருந்தார். அவரிடம் தொலைபேசியில் சொன்னேன். அவர் எல்லா புத்தகக்கடைகளிலும் எனக்காக ஏறியிறங்கி அகப்படாமல் கடைசியில் ஒரு கடையில் ஒரேயொரு படி மட்டுமே இருந்ததை வாங்கிவிட்டார்! புத்தகத்தை வாங்கிவிட்டதாக என்னிடம் சொன்ன அவர் தான் பெங்களூர் செல்வதாகவும் பயணத்தின் போது படித்து முடித்து விட்டு உங்களுக்கு அனுப்புகிறேன் என்றார். எனக்கு எப்படா படித்து முடித்து அனுப்பி வைப்பார் என்று தவிப்பு. ஒரு வழியாக பத்து நாட்கள் கழித்து கூரியரில் வந்து சேர்ந்தது!_

_பார்சலைப் பிரித்து ஆவலுடன் புரட்டினேன். அப்போது ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தேன். சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததுமே இது வேறு மாதிரி என்று புரிந்துவிட்டது._

_இரவு பத்தரை மணிக்கு மேல் புரட்ட ஆரம்பித்தேன்._ _பெரிய அளவில் பக்கங்கள்; அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள்! இரவு இரண்டு மணிக்குள் நூறு பக்கங்களைத் தொட்டுவிட்டேன். அப்போதெல்லாம் நெப்போலியன் ஹில், நார்மன் வின்சென்ட் பீலே, ஆண்ட்ரூ கார்னகி, டேல் கார்னகி போன்றவர்களின் மோட்டிவேசனல் புத்தகங்களை ஒரு சொல் விடாமல் படித்து வியந்திருந்த காலம்!_ _காலையில் மீண்டும் தூக்கக் கலக்கத்துடன் படித்தேன். ஆக முதல் நாளிலேயே 150 பக்கங்களைக் கடந்தேன். ஒரே பிரமிப்பு!_
_அத்தனை சாகசங்கள்! திருப்பங்கள்!_

_இரண்டாம் நாள் முன்னூறு; அதற்கடுத்த நாள் விடுமுறை என்பதால் அன்று இரவே புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன்!_

_ஒரு முறை பரணீதரன் எழுதிய ‘அருணாசல மகிமை’ என்ற நூலை(600+பக்கங்கள்) முதல் நாள் மாலை 5 மணியளவில் ஆரம்பித்து மறுநாள் மாலை 6 மணிக்கு முடித்திருக்கிறேன். ஆனால் அது தமிழ்! இதுவோ ஆங்கிலம்! ஆனால் என்னைப் போன்றவர்களுக்கும் எளிதாக புரியும்படியான ஆங்கிலம். ஆனால் தரமான மொழிநடை._

_அன்று முதல் கேப்டன் கோபிநாத் என்னுடைய ஹீரோவாகிவிட்டார்!_

_சூர்யா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ‘ சூரரைப் போற்று’ திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் முகநூலில் எனக்கு வந்த வண்ணமாய் இருக்கின்றன. கேப்டனின் எழுத்தை முழுவதுமாக திரைப்படமாக்குவது சாத்தியமே இல்லை! ஆனால் திரைக்கதை வெகுஜன ரசனைக்காக மாற்றியமைத்தால் நூலைப் படித்தவர்கள் ரசிக்காமல் போகக்கூடும். படத்தைப் பார்த்து விட்ட என் மகனிடம் கேட்டபோது சூர்யா மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று மட்டும் சொன்னான். அப்படியானால் படம்? புத்தகம் கிடைத்தால் வாசியுங்கள்; தமிழில்’வானமே எல்லை’ என்ற தலைப்பில் வந்துள்ளது. நீங்கள் ஆங்கிலம் அறிந்தவராயின் ஆங்கிலமே வாங்கி வாசியுங்கள்! இவ்வளவு பீடிகை எதற்கு என்று இப்போது நினைப்பதை படித்து முடித்தபின் மாற்றிக் கொள்வீர்கள்!_

‘சூரரைப் போற்று’
_என்ற பாரதியின் சொற்களைப் படத்திற்குத் தலைப்பாக வைத்ததற்கே பாராட்டலாம்!
ஏனெனில் பாரதியைப் போல் ஒரு தன்னம்பிக்கை தரும் கவிஞர் உலகினில் எங்குமில்லை!

அதே ஆத்திச்சூடியில்,

‘நன்று கருது’

‘நாளெல்லாம் வினை செய்’

‘நினைப்பது முடியும்!’

என்றவரல்லவா அவர்!
எல்லாம் இந்த மூன்றினுள் அடங்கிவிடுமே!

நூலிலுள்ள சில சுவையான செய்திகளையும் பார்க்கலாம்!

-மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here