சாஸ்தாவின் அவதாரங்கள்

0
276

சாஸ்தாவின் கடைசி அவதாரம்தான், சபரிமலை ஐயப்பன் என்கிறார்கள்.சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை, அனைவரும் ‘சாஸ்தா’ என்றும் அழைப்பார்கள். நான்கு யுகங்களுக்கும் அதிபதியாக இந்த சாஸ்தா இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் புராணங்களின்படி ஆதி சாஸ்தா தனது எட்டு அவதாரங்களையும் எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்

சம்மோஹன சாஸ்தா

வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வமாக இவர் இருக்கிறார். இவர், பூரணை-புஷ்கலை தேவியருடன் காட்சி தருகிறார். இல்லறத்தில் ஒற்றுமையை மலரச் செய்பவராவார்.

கல்யாண வரத சாஸ்தா

கோவில்கள் சிலவற்றில், தன் தேவியர்களுடன் காட்சி தருபவர்.

இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம், திருமணத் தடைகள் விலகும். திருமணம் விரைவில் நடக்க இந்த சாஸ்தாவை வழிபடலாம்.

வேத சாஸ்தா

வேதத்தை தழைக்கச் செய்யும் இவர், சாஸ்திர அறிவை அருள்வதுடன், அதன்படி தன் பக்தர்களை வழிநடத்தவும் செய்பவராக இருக்கிறார்.

இவர் தன் தேவியர்களுடன், சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்திருப்பார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இவரை வழிபாடு செய்யலாம்.

ஞான சாஸ்தா

இவரது கையில் சரஸ்வதியிடம் உள்ளது போன்று, வீணை இருக்கும்.
தட்சிணாமூர்த்தியைப் போன்று, தன் அருகில் சீடர்களைக் கொண்டு, கல்லால மரத்தின் அடியில் குரு பீடத்தில் அமர்ந்து காட்சி தருபவர்.

இவரை வழிபட்டால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மேலும் பேச்சுத் திறன் அதிகரிக்கவும் இவரை வணங்கலாம்.

பிரம்ம சாஸ்தா

தன் மனைவிகள் இருவருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருபவர் இவர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, விரைவிலேயே அந்த பாக்கியம் கிடைக்க அருள் வழங்குபவர்.

குலம் தழைக்க பிரம்ம சாஸ்தாவை வணங்குங்கள்.

மகா சாஸ்தா

இந்த மூர்த்தியை வழிபாடு செய்தால், வாழ்வில் எல்லாவித முன்னேற்றங்களையும் அடைய முடியும்.

இவர் நான்கு கரங்களுடன், யானை மீது அமர்ந்து காட்சி தருகிறார். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை போக்கும் சக்தி படைத்தவர்.

வீர சாஸ்தா

இவர் ருத்திர மூர்த்தியாக திகழ்கிறார். ஆயுதம் ஏந்திய நான்கு கரங்களுடன், குதிரையின் மீது அமர்ந்து தீயவர்களை அழிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை முறையாக வழிபட்டு வந்தால், கேதுவால் ஏற்படும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும்.

தர்ம சாஸ்தா

சபரிமலையில், குக்குட ஆசனத்தில் அமர்ந்தபடி சுவாமி ஐயப்பனாக அருள்பாலிப்பவர் இவரே. கலியுக தெய்வமாக நினைத்து இவரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த நித்திய பிரம்மச்சாரியை கார்த்திகை மாதங்களில் மாலையிட்டு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால், சகல விதமான துன்பங்களும் நீங்கி, வாழ்வில் வசந்தம் வந்து சேரும்.

கிராமப்புறங்களில் ‘ஐயனார்’ எனப்படும் சாஸ்தா வழிபாடு அதிகமாக இருப்பதைக் காணமுடியும். அய்யனார் சாஸ்தாகளும் பல வகைப்படும்.நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்ற பெயரில் சாஸ்தாவுக்கு ஆலயம் ஒன்று இருக்கிறது.

இவர் ஜடாமுடி, மார்பில் பதக்கம், நெற்றியில் திருநீறு அணிந்து, ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் அமர்ந்து இருக்கிறார். அத்ரி முனிவர் இத்தல சாஸ்தாவை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது.(சங்கிலி பூதத்தார் சாஸ்தாவின் அவதாரம் என்று கூறப்படுகிறது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here