சுதந்திரப் போராட்ட காலம்! புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வர இருந்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரித்த சமஸ்தானம், ‘நேருவின் கார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையக் கூடாது!’ என்று தடை விதித்தது. குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை எல்லையை நெருங்கினார் நேரு. அவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
சமஸ்தான அதிகாரி ஒருவர் காரின் அருகில் வந்து, தடை உத்தரவுக்கான கடிதத்தை நேருவிடம் காட்டினார். அப்போது, நேருவுடன் சத்தியமூர்த்தியும் இருந்தார். அவர் நேருவின் காதில் ஏதோ முணுமுணுத்தார்!
அடுத்த நிமிடம்… இருவரும் காரில் இருந்து இறங்கி, ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். பதறிப்போன அதிகாரி ஓடி வந்து அவர்களை மறித்தார். உடனே சத்தியமூர்த்தி, “நேருவின் கார் சமஸ்தான எல்லைக்குள் வரக் கூடாது என்பதுதானே உங்கள் உத்தரவு? தடை காருக்குத்தானே தவிர, நேருவுக்கு அல்ல!” என்றார். வேறு வழியின்றி அதிகாரிகள் பின்வாங்கினர்.
சத்தியமூர்த்தியின் சமயோஜிதத்தை பாராட்டிய நேரு, பிறகு புதுக்கோட்டை மக்களை சந்தித்து விட்டுத்தான் டெல்லி திரும்பினார்!