கெட்டு போன காய்கறியை கண்டுபிடிக்க எளிய வழிகள்!

0
70

சந்தையில் பலவித காய்கறிகள் குவிந்து இருக்கும். அங்கு காய்கறிகள் வாங்கும் போது, அதில் நல்ல காய்கறிகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கான சில வழிகள் இதோ..

பாகற்காய்

பாகற்காயை வாங்கும் போது, அது உருண்டையாக இருப்பதை வாங்குவதை விட, தட்டையாக, நீளமாக உள்ள பாகற்காயை வாங்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு வாங்கும் போது, அதை விரல் நகத்தில் கீறி பார்க்க வேண்டும் அப்போது தோல் வந்தால் அது நல்ல உருளைக்கிழங்கு. அதுவே தழும்புகள், ஓட்டைகள், பச்சை நிறத் தழும்புகள், தோல் சுருங்கியது இது போன்ற உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கை வாங்கும் போது அதை சுவைத்து பார்க்க வேண்டும். அது இனிப்பாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். இனிப்பு குறைவு அல்லது கருப்பு நிறத்தில் உள்ள கிழங்கை வாங்கக் கூடாது.

தேங்காய்

தேங்காய் வாங்கும் போது, அதை காதின் அருகே வைத்து தட்டி பார்த்து முதிர்ந்ததா அல்லது இளசானதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

சுரைக்காய்

சுரைக்காயை வாங்கும் போது அது இளசானதா என்று சோதித்து வாங்க வேண்டும் எப்படியெனில், சுரைக்காயை நகத்தினால் அழுத்தும் போது அது உள்ளே இறங்கினால், அது இளசான சுரைக்காய்.

கோவைக்காய்

கோவைக்காய் முழுமையான பச்சை நிறத்தில் இருந்தால், மட்டுமே வாங்க வேண்டும். ஏனெனில் அது சிறிதளவு சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அதில் சுவை இருக்காது.

மொச்சைக் கொட்டை

மொச்சைக் கொட்டை வாங்கும் போது, அது அளவில் பெரியதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் பெரியதாக உள்ளது தான் தரமான மொச்சைக் கொட்டை.

மிளகாய்

மிளகாயில் பலவித வகைகள் உள்ளது. அதில் மிளகாயின் அளவிற்கு ஏற்றது போல காரம் இருக்கும். நீளமான மிளகாயில் குறைவான காரம் இருக்கும். அதுவே குண்டு மிளகாயில் காரம் அதிகமாகவும், வாசனை மிக்கதாகவும் இருக்கும்.

சௌசௌ

சௌசௌ வாங்கும் போது, அதன் வாய் பகுதியில், பெரியதாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் அதில் விரிசல் இருந்தால், அது முற்றிய காய்.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் வாங்கும் போது, அதன் அடிப்பகுதி குண்டாக இல்லாமல், காய் முழுவதும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் பழையதாக இருக்குமாறு, இரண்டு பல் இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். அதுவே பல்லாரி வெங்காயமாக இருந்தால், அதை பிழிந்ததும் சாறு வருவதாக பார்த்து வாங்க வேண்டும்.

அவரைக்காய்

அவரைக்காய் வாங்கும் போது, பெரிய விதையை உடைய அவரைக்காயை தவிர்த்து, சிறிய விதை உள்ள அவரைக்காயை வாங்க வேண்டும்.

சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு வாங்கும் போது, அது அளவில் பெரியதாகவும், அதை வெட்டினால் உள்பக்கம் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு வாங்க வேண்டும்.

மாங்காய்

மாங்காய் வாங்கும் போது, அதை தட்டி பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் அதை தட்டும் போது, சப்தம் வந்தால், அதனுள் உள்ள கொட்டை சிறியதாகவும், சதை அதிகமாகவும் உள்ளது என்று அர்த்தமாகும்.

பூண்டு

பூண்டு வாங்கும் போது, அதன் பல் வெளியில் தெரியுமாறு உள்ளதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் அது தான் தரமான பூண்டாக இருக்கும்.

முருங்கைக்காய்

முருங்கைக்காய் வாங்கும் போது, அதை முறுக்கி பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் அப்போது அது ரப்பர் போல வளைந்தால், அது நல்ல காய். அதுவே வளையாமல் இருந்தால், அது முற்றிய காய் என்று அர்த்தம்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு வாங்கும் போது, அதன் மேல் பகுதியில் அதிக நார் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். மேலும் அதன் தண்டு பகுதி சிறியதாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here