குறளொலி

0
109

கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி எழுதும் குறளொலித்தொடர்…..
குறளொலி – 1.முதல் 6 வரை …

மனதினியவர்களே…
வான் சிறப்போடு
தொடங்குகிறேன் மீண்டும்!

குறளொலி – 1.
(இரண்டாம் பாகம்)

என்ன வேலப்பா
கண்ணக் கசக்கிற?

வேண்டும்
வாழ்விற்கு உதவி
வள்ளல் பெருமானே!…

வானம் பொழியட்டும்
வாய்க்கால் நிரம்பட்டும்
பூமி நனையட்டும்
பூக்கோலம் வரையட்டும்
செல்வம் கொழிக்கட்டும்
சென்றுவா அப்போது!

அமைச்சர் பெருமானே
அருந்தவம் புரிகின்றேன்!…

மாபெரும் இராஜ்ஜியத்தில்
மக்கள் மனதில்
மகிழ்ச்சி பெருகவேண்டும்!
மாமன்னர் புகழ்க்கொடி
மலைமீது பறக்கவேண்டும்!
ஆண்டவனுக்கு ஆலயங்கள்
அழகுறவே எழவேண்டும்!…

புரிகிறது அடிகளாரே
மழை வேண்டி மாதவம்!…
மன்னரின் அருள்உண்டு
சென்று வாருங்கள்!

“தானம் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.” – குறள்(19)

(இப் பரந்த உலகில் மழை பொய்த்து விட்டால் ஈகை தவம் போன்றனவும் அற்றுப் போகும்.
– புலவர் நன்னன்.)

குறளொலி!..(II – 2)

பொறுத்துக்கொள்
பொற்கொடியே!
நாளை
நமைப் பிரிக்கும்
பயணம் ஒன்றுண்டு
தடுக்காதே
அடுத்த நாள் மாலையில்
சடுதியில் வந்துநம்
காதல் மாலைதனைத்
தொடுத்திடுவேன்!
அதுவரை
பொறுத்துக்கொள்
பொற்கொடியே!…

சொல்லித்தான்
சென்றானெனினும்
அள்ளி அணைத்திடும்
ஆசையோடு வந்தவனிடம்
துள்ளிக்குதித்தாள்
தேனொழுகும் வாயாடி!…

இங்கொருத்தி
ஏங்கித் தவித்திருக்க
எங்கு சென்றீர் எனைவிடுத்து?
பொங்கும் நம் காதலுக்கு
சங்கூத சக்களத்தி கிடைத்தாளோ?
எங்கிதை நான் சொல்வேன்?
தங்கமே! தளிரே!
சிங்காரத் தென்றலே!
செங்காந்தள் மலரே!
என்பதெல்லாம்
எதற்கும் உதவாத
பதரொத்த பேச்சுதானோ?
தொடாதீர்! தள்ளிச்செல்க!
பொய்க்கோபம் தொடர்ந்தாள்
புண்ணியவதி!…

வாரி அணைத்து
வண்ணமயில் கன்னத்தில்
சின்னம்பதிக்க வந்தவனோ
வாய்பிளந்து நின்றான்
சீற்றம் நிஜமெனவே
சித்தம் கொண்டு
கத்தும் காரிகையிட.ம்
உன்புத்தி நிலையில்லை
வருகிறேன் நாளையென
விருட்டென்று சென்றுவிட்டான்!…

அய்யகோ…
அணைத்துப் பேசி
வினை முடிப்பான்
குடிகொண்ட கோவலன்
என நினைத்தால்
எரியும் தணலில்
எனை அமர்த்திச் சென்றானே
என்செய்வேன் நான்?…
புலம்பித் தவித்தாள்
பூங்கொடியாள்!

“அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். (குறள் – 1303)

(ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்ப நோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும். – கலைஞர்)

குறளொலி!..(II – 3)

இமைக்காது செயலாற்றும்
அமைச்சர் பெருமக்களே!…
நமைக்கண்டு நாளும்
பொறாமைச் சுமைகொண்டு
அண்டைநாட்டு மன்னர்கள்
சண்டைக்கு வரலாம்…

அஞ்சற்க மன்னா!
நெஞ்சினில் வீரமும்
துஞ்சாது பணியாற்றும்
தீரமும் கொண்டு
வஞ்சக மனதோடு
வருகின்ற எதிரிகளின்
தலைதனை துண்டாட
திடம்கொண்ட வீரர்கள்
துடிப்போடு படைக்களத்தில்!

மும்மாரி பெய்த மழை
தடுமாறி நின்றுவிட்டால்…

தயக்கம் வேண்டாம்
தயாளனே!
தங்கமும் வைரமும்
பொங்கி வழிகின்ற
புதுநெற் களஞ்சியமும்
குடிமக்கள் பசிபோக்கும்
நின்குடையாளும் பூமியில்!

கல்விச் சாலைகளில்
களங்கமேதும் உண்டோ?…

என்ன கேள்வியிது?
மன்னவன் தங்கள்
மணிமுடி ஆட்சியில்
மேன்மைக்கு வழிகாட்டும்
அறநெறி நூல்களை
கற்றறிந்த அடியேன்நான்
கவனிக்காது விடுவேனோ?

கற்றறிந்தால் போதுமா?
பெற்றிட்ட அறிவுதனை
பிறர்கற்றிட என்செய்தீர்?…

பல்கலை நூல்களோடு
பாலர்களுக்கு ஒன்று
பதுமைகளுக்கு ஒன்று
பொதுவில் கற்றிடவே
சர்வகலாச் சாலைகளும்
பொலிவுடனே நின்று
பாராளும் வேந்தன்நின்
பேர்சொல்லி வாழ்கிறது!

முன்னோர் அடியொற்றி
முனைப்புடனே ஆண்டாலும்
என்னாட்சி செய்ததென்று
என்னசொல்லும் வரலாறு?…

காப்பியத் தலைவனே
கவலை வேண்டாம்
காணும் இடமெல்லாம்
கலைகளின் சின்னங்கள்
நலிந்தோர் நலம்பெறவே
நாளும் பலதிட்டங்கள்
ஆலய நிர்மானங்கள்
ஆழமான நீர்நிலைகள்
எல்லாம் செயல்பாட்டில்
எழுந்து விட்டால்
உன்பெயர் செப்பேட்டில்!

ஆகா அகமகிழ்ந்தேன்
அறிவிற் சிறந்தோர்
உங்களோடு ஆள்வதில்
பெருமை கொண்டேன்
கலையட்டும் நற்சபை!

“வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.” – குறள் – 632.
(அமைச்சரவை என்பது துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

குறளொலி!…(II – 4)

பால்ய நண்பக்கு
பக்கத்தில் வீடு
பார்த்து நாளாச்சு
பாவம் தேடுவான்
பாலனின் மனது
பரிதவித்துக் கொண்டது!…

திருமணம் முடிந்து
வருடம் ஒன்றிருக்குமா?
இடையில் ஒருமுறை
தெருக்கடையில் நின்று
ஒன்றிரண்டு வார்த்தைகளை
ஒற்றி எடுத்து
ஒதுங்கியது நினைவில்!…

ஊனும் உயிருமாய்
தேனும் சுவையுமாய்
நானும் அவனும்
வாழ்ந்த நட்பின்
காலம் மீளுமோ?…

இன்றெனக்கு நேரமுண்டு
சென்றங்கு அவனுடனே
வீற்றிருந்து சிலநேரம்
தென்றல் காற்றெனவே
தெளிந்து வீசிநாமும்
குளிர்ந்து திரும்பலாம்!…

வாசலில் கண்டவனை
நேசத்தின் துணையோடு
அன்பால் அணைத்து
அழகாய் சிரித்து
அருகில் அமர்த்தி
அடுப்படி நோக்கி
அன்பழகி வந்துபார்
அருமைத் தோழனை
என்றான் வேலன்!…

பாத்திரத்தின் ஒளியொன்று
பாந்தமாய் கேட்டது!…

அழைக்காதே வேலா!
அவசர வேலையுண்டு
அடுத்தநாள் வருவேன்
தொடுத்துப் பேசலாம்
விடைகொடு என்றே
நடையைக் கட்டினான்
பதிலின்றி பாலன்!

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து!” – குறள் 90.

(மிக மெல்லிய அனிச்சமலர் முகர்ந்த அளவில்தான் வாடும். மானம் உடைய விருந்தினரின் முகமோ மாறுபடப் பார்த்த அளவிலேயே வாடிவிடும். – முனைவர் கடவூர் மணிமாறன்)

குறளொலி!..(II-5)

அன்றொரு நாள்
நல்ல தம்பி
சென்ற வழியில்
கண்ணில் பட்டது
கைப்பை யொன்று!..

காவலரிடம் கொடு
என்றது
கண்ணிய மனது!
கவலை வேண்டாம்
கைவசப்படுத்து
என்றது
கள்ள மனது!…

கைவசப்படுத்தினான்!

விழித்த நேரம்
குளிக்கச் சென்ற
காலை நேரம்
சாலை ஓரம்
கோலம் போட்ட
பெண்ணின் கழுத்தில்
மின்னியது பொன்!…

பாதை தவறாது
நெறியுடன் செல்
என்றது
நல்லமனது!
பாதகமில்லை
பயம் வேண்டாம்
என்றது
போதைமனது!..

பறித்துச் சென்றான்!

அடுத்தொரு நாள்
நடுநிசி வேளையில்
படுத்துக் கிடந்து
பள்ளம் பறித்து
எடுத்து வந்தான்
கொள்ளைப் பணம்…
பூட்டிக் கிடந்த
கடைதானெனினும்
காட்டிக் கொடுத்தது
காணொளிக் காட்சி!…

பொல்லாத மனதின்
மாயவழிச் சென்று
காயங்களின் துணையோடு
காலம் கடத்த
கம்பி எண்ணுகிறான்
‘நல்ல’ தம்பி!

“இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு!.” – குறள் 858.

(மனதில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும். – கலைஞர்.)

குறளொலி!..(II-6)

விழிப்புற்ற அறிவு
விழிப்பூட்டியது…
கண்களே
கவனமுடன் கேளுங்கள்!…

முத்தே! மணியே!
எனைப் பித்தம்
பிடிக்கச் செய்யும் பேரழகே!
எத்திக்கும் உன்முகம்
தித்திக்கும் தேன்மழை!
உன் முகம் கண்டு
நிலவும் பொலிவிழக்கும்
நட்சத்திரங்கள்
வெட்கப்பட்டு ஓடிவிடும்!
உன்னைக் காணாத நாளெல்லாம்
கண்ணிருந்தும் குருடனாக!
என்றுதிர்த்த எழிலரசன்
எங்கு சென்றான்?

நாட்கள் பல கடந்தும்
நான் காண வராத
நயவஞ்சகன் முகம்தனை
காணமாட்டேன் இனி!..
கண்கள் கனல் கொட்டியது!

யாழிசை என்ன?
ஏழிசை கலந்தாலும்
உன்
வாய்மொழி ஓசை கேட்டால்
வணங்கித்தான் ஓடவேண்டும்!
மொழியழகா?
ஒலிவந்த வழியழகா?
நந்தவனத்தில்
சிந்துகின்ற பூக்கள்
ஒற்றைப் புன்னகையோடு
நீவந்து நின்றால்
வடக்கிருந்து மாளுமே…
புடம் போட்ட காதலன்
சென்றுவிட்ட தடம் எங்கே?
தொடர்ந்தது அறிவு!…

பாசாங்கு வேசம்கொண்டு
மோசக்காரன் வந்தாலும்
பார்க்க முடியாதினி ஒருகணமும்!
போர்முரசு கொட்டியது கண்கள்!…

வந்து நின்றான்
விழிகள் சொன்ன
வேசக்காரன்!…

எனை ஆளும் மன்னவா
எங்கு சென்றீர்?
உங்கள் முகத்தழகு காணாமல்
பொங்கும் வேலையின்றி
கலங்கித் தவித்து விட்டேன்
கணங்களெல்லாம் கண்ணாளா!
எனக்குள் வா
காவியம் படைப்போம்!…

அறிவைப் புறந்தள்ளி
ஆசையோடு உறவாட
ஓட்டம் பிடித்தது
ஒய்யார விழிகள்!

“பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்.” – குறள் – 1283.
(நம்மை மதியாது தமக்கேற்றபடி நடந்து கொள்வாராயினும் அக் காதலரைக் காணாதிருக்க எம் கண்களால் முடியாது. – புலவர் நன்னன்.)

தொடரும்……

-கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here