கிருஷ்ண ஜெயந்தி 2020

0
118

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக கண்ணன் அவதாரம் எடுத்தவர் .

கண்ணனின் கதை

தனது தங்கை தேவகிக்கும் – வாசுதேவருக்கும் பிறக்கப்போகும் எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் தன்னை கொன்றுவிடுவார்

என அசரீரி கூறக்கேட்ட கம்சன் தனது தங்கை என்றும் பாராமல் தேவகி – வாசுதேவரை சிறையில் அடைத்து, அவர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான். எட்டாவது குழந்தையாக கண்ணன் நள்ளிரவில் பிறந்தபோது தெய்வசக்தியால் அனைத்து காவலர்களும், தேவகியும் தூங்கிவிட்டனர்; சிறை கதவும் திறந்து கொண்டது. குழந்தையை காப்பாற்றி கோகுலத்தில் யசோதையிடம் சேர்த்துவிடும்படி அசரீரி கூறக்கேட்ட வாசுதேவர் குழந்தையை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி கோகுலத்தை நோக்கி நடந்தார்; வழியில் இருந்த யமுனை நதி இரண்டாக பிரிந்து வழிவிட அவ்வழியில் சென்று கண்ணனை யசோதையிடம் சேர்த்துவிட்டு சிறைச்சாலைக்கு திரும்பிவிட்டார்.

சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் யசோதையால் வளர்க்கப்பட்டான். கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், தனது தாய் மாமனான கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் தேரோட்டியாக வந்த கண்ணன் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.

தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.

தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் பரமாத்மா.

கிருஷ்ணர் பிறந்த அந்த சிறியச் சிறைச்சாலையின் மீது கத்ரகேஷப் தேவ் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே உள்ளது. கண்ணன் பிறந்த இடமாக அது வழிபடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்திஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது

நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கிருஷ்ணரின் 5247வது ஆண்டு பிறந்தநாளை இந்த ஆண்டு அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்தில் கொண்டாடுகின்றோம். (ஆகஸ்ட் 11 அதாவது ஆடி 27ம் தேதி காலை 7.52 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி காலை 9.32மணி வரை உள்ளது.) கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரம் செய்யப்படுவது வழக்கம்.

ஆகஸ்ட் 11ம் தேதி

மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

பூஜை செய்ய மிகவும் உகந்தது.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் நடத்தலாம் . கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை நினைத்து உண்ணா விரதமிருந்து, அவரது நாமங்களை சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடுவதும், கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தை பாராயணமும் செய்யலாம். அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும் . வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்க வேண்டும் . ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். மாலை நேரத்தில் கண்ணனின் படத்தை பூக்களால் அழங்கரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட வேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற வேண்டும். அனைத்து நலன்களுடன் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபி

1. தேங்காய் பர்ஃபி

தேங்காய் பர்ஃபி கொஞ்சம் அதிக இனிப்பு சுவையுடைய பலகாரம் தான். ஆனாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது கட்டாயம் கோகுலாஷ்டமி படையலில் இருக்கும். தேவையான பொருள்கள் தேங்காய் துருவல் – 2 கப் சர்க்கரை – 2 கப் கடலை மாவு – 2 ஸ்பூன் நெய் – தேவையான அளவு ஏலக்காய் பொடி – சிறிதளவு முந்திரி – தேவையான அளவு (உடைத்தது)

செய்முறை :- சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதற்குள்ளாகவே தேங்காய் துருவலை போட்ட நன்கு கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிது நெய்விட்டு, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்து, தேங்காய்க் கவலையில் கொட்டி, அதனுடன் சிறிது ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கிளறுங்கள். அப்போது பர்ஃபி பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். சுருண்டு வரும் வேளையில், ஒரு தட்டில் நெய் தடவி,அதை சமமாக தட்டில் துண்டுகள் போடவும். அதன்மேல் முந்திரி பருப்பை மேலே தூவ வேண்டும். இப்போது, சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி!

2. திரட்டிப்பால்

திரட்டிப்பால் என்பது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது கிருஷ்ண ஜெயந்தி படையலில் கட்டாயம் இடம் பெறுகின்ற ஒரு இனிப்பு வகையாக இருக்கும். தேவையான பொருள்கள் பால் – 1 லிட்டர் வெல்லம் – 300 கிராம் ஏலக்காய் பொடி – சிறிது நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு

செய்முறை :- அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, 1 லிட்டர் பாலை ஊற்றி, அதை சிறு தீயினில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்த பின், சுண்ட ஆரம்பிக்கும். நன்கு பால் மூன்றில் ஒரு பங்காக சுண்டுகிற வரையில், காய்ச்ச வேண்டும். பால் நன்கு சுண்டியதும் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய்த் தூய் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளற வேண்டும். பால் இன்னும் சுண்ட ஆரம்பித்து சுருண ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நெய்விட்டு கிளறி, அதன்மேல், முந்திரி விட்டு கிளறவும். சுவையான திரட்டுப் பால் ரெடி. ஆனால் கட்டாயம் சிறு தீயில் (சிம்மில்) வைத்து தான் கிளற வேண்டும்.

3. பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்: பாதாம் – 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது) சர்க்கரை – 1/2 கப் பால் – 1 கப் நெய் – 1/2 கப் குங்குமப்பூ – சிறிது (பாலில் ஊற வைத்தது)

செய்முறை :- முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும். பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும். அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா ரெடி!!!

4. பால்கோவா

தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர் சர்க்கரை – 1/4 கப்

செய்முறை :- முதலில் பாலை ஒரு கெட்டியான அகன்ற வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து பால் பாதியாக குறையும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பால் பாதியாக குறைந்ததும், தீயை குறைத்து மீண்டும் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது பால் கெட்டியான நிலையில் இருக்கும். இந்நிலையில் கரண்டி கொண்டு தொடர்ந்து கிளறி விட வேண்டும். பாலில் உள்ள நீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் மீண்டும் நன்கு கிளறி, தண்ணீர் முற்றிலும் வற்றி பால்கோவா பதத்திற்கு வரும் போது இறக்கினால், சுவையான பால்கோவா ரெடி!!! குறிப்பு: விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது ஏலக்காய் பொடி மற்றம் முந்திரி, பாதாம் போன்றவற்றை நறுக்கி தூவிக் கொள்ளலாம். இதனால் பால்கோவாவின் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

5. இனிப்பு சீடை

பதப்படுத்திய அரிசி மாவு (ஈரத்தை வறுத்தது) – 4 கப் வெல்லம் – 3 கப் தேங்காய் துருவல் – 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன் வெள்ளை எள் – 1 ஸ்பூன் வறுத்த உளுந்து மாவு – 3 ஸ்பூன் நெய் – சிறிதளவு பொரிக்க எண் – தேவையான அளவு

செய்முறை :- பச்சை அரிசியை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விடுங்கள். அதன்பின் லேசாக உலர்ந்த பின், மிக்சியில் போட்டு, நைசாக மாவை அரைத்துக் கொள்ளுங்கள். (அரிசி மாவுக்கு பதில் மைதா உபயோகித்தும் சீடை செய்யலாம்.) அந்த அரிசி மாவு அல்லது மைதாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். நைசாக இருக்கும் மாவை கொஞ்சம் கொரகொரப்பாக வரும்வரை வறுக்க வேண்டும். அப்போது தான் சீடை பொரிக்கும்போது, வெடிக்காமல் இருக்கும். அதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் மாவுடன் போட்டு, நன்கு பிசைந்து சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசையுங்கள். ஒரு ஈரத்துணியில், சிறிய பிள்ளையாரை ஓரமாகப் பிடித்துவிட்டு, பின் சிடை மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். மாவை மிக அழுத்தி உருட்டக் கூடாது. வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் சீடையைப் போட்டு பொரித்து எடுங்கள். மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக எடுக்கவும். பொன் வறுவலாக பொரித்து எடுத்தால் மனமும் சுவையும் அதிகமாக இருக்கும்.

6. ஜவ்வரிசி வடை

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 3/4 கப் உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது) வறுத்த வேர்க்கடலை – 1/4 கப் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)

செய்முறை :- முதலில் ஒரு பௌலில் ஜவ்வரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். ஒருவேளை கலவையில் நீர் அதிகம் இருந்தால், அத்துடன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடைப் போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் உட்பட இனிப்பு பலகாரங்கள் பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு, பூஜையில் வெண்ணெய் இடம்பெறுவது அவசியம்.

அதே போல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.

தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருஷ்ணருக்கு பிடித்த புளியம்பிஞ்சு

காஞ்சிப்பெரியவருக்கும் கார்மேக வண்ணனுக்கும் நிறையவே தொடர்புண்டு.

கிருஷ்ணஜெயந்தியன்று காஞ்சிப்பெரியவர் என்னென்ன செய்வார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெயந்திக்கு ஒருவாரம் முன்னதாகவே காஞ்சிமடத்தில் மகாபெரியவர் முன்னிலையில், காலையில் பாகவத பாராயணம், மாலையில் உபன்யாசம் நடக்கும். பொறுமை, சகிப்புத்தன்மை, துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் குறித்து பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகள் குறித்து, “கிருஷ்ண தத்துவம்’ என்ற தலைப்பில், பெரியவர் உரையாற்றுவார். பஜகோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணதுதி பாடல்கள் பாடப்படும்.

கிருஷ்ணஜெயந்தியன்று அதிகாலையில் அவர் ஜபம், தபஸ், பூஜைகளை மேற்கொள்வார். அன்று முழுவதும் அவர் சாப்பிடமாட்டார். உபவாசமே மேற்கொள்வார். இரவு 11 மணிக்கு, ஜெயந்தி பூஜை துவங்கும். காரணம், கிருஷ்ணர் பிறந்தது இரவு வேளை என்பதால்!

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்… நாம் எல்லாருமே கிருஷ்ணருக்கு பிடித்தது வெல்லச்சீடை, உப்புச்சீடை, தட்டை, முறுக்கு, தேன்குழல், வெண்ணெய், நாவல்பழம், பால் பாயாசம், லட்டு, வடை என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம். பெரியவர் இவை எல்லாவற்றையுமே கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வார். ஆனால், அநேகருக்கு தெரியாத இன்னொன்றும் நைவேத்யத்தில் இடம் பெற்றிருக்கும். அதுதான் புளியம்பிஞ்சு.

கிருஷ்ணர் கோகுலத்தில் வசித்த போது அல்லது சுதாமாவுடன் குருகுலத்தில் படித்த காலத்தில் புளியம்பிஞ்சு சாப்பிட்டிருக்க வேண்டும். பக்தர்களின் மனங்களில் ஏறி நின்றவருக்கு, மரம் ஏறுவது பெரிய விஷயமா என்ன!

குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து கோலாட்டம், கும்மி அடிப்பதை ரசித்துப் பார்ப்பார். மறுநாள் காலையில் ஸ்நானம் முடித்து, திரிபுரசுந்தர சமேத சந்திர மவுலீஸ்வரர் பூஜை முடிந்த பிறகே, பிக்ஷை ஏற்க வருவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here