காவிரி கடைமடை பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

0
50

குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 18 நாட்களாகியும் காவிரி கடைமடை பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாசன பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. அதனால், அங்கு நெற்பயிர் நடவுப்பணிகளை தொடங்க முடியாமல் உழவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, 8 ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பாண்டில் தான் குறிப்பிட்ட தேதியில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் 4 நாட்கள் கழித்து 16-ஆம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 14 நாட்களாகியும் கடைமடைப் பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. காவிரி மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் சென்றாலும் கூட, அவை பாசனக் கால்வாய்களில் ஏறும் அளவுக்கு அதிக நீரோட்டம் இல்லாதது தான் இதற்கு காரணம் என்று உழவர்கள் கூறியுள்ளனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் ஜூலை மாதம் 15-ஆம் தேதிக்குள் நடவுப் பணிகளை முடித்தால் மட்டும் தான், வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அறுவடை செய்ய முடியும். நடவு தாமதமானால் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்பே மழையில் சிக்கி வீணாகி விடும் ஆபத்து உள்ளது. ஜூலை 15-ஆம் தேதிக்குள் நடவுப் பணிகளை முடிக்க வேண்டும் என்றால், கடைமடை ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கு விரைவாக தண்ணீர் வந்து சேர வேண்டும் என்றும், அவ்வாறு கடைமடை ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும் என்றால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு குறைந்தபட்சம் 18,000 கன அடியாக அதிகரிக்க வேண்டும் என்று காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை வினாடிக்கு 16,000 கன அடியாக திறப்பதன் மூலம் அடுத்த சில நாட்களில் கடைமடை ஆற்றுப்பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்ய முடியும். அதற்காக அடுத்த இரு வாரங்களுக்கு கூடுதல் நீரைத் திறந்தால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து விடும். அதன்பின்னர் நீர் திறப்பை இப்போதுள்ள அளவுக்கு குறைத்தால் கூட கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அடுத்த இரு வாரங்களுக்கு வினாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பதன் மூலம் கூடுதலாக 7 டி.எம்.சி நீர் செலவாகும்.

மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதாலும், அடுத்த மாதம் மத்தியில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரத் தொடங்கும் என்பதாலும் எதிர்காலத் தேவைக்கு தண்ணீர் இருக்காதோ என்று அஞ்சத் தேவையில்லை. மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 2012-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. நடப்பாண்டில் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதுடன், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்று உழவர்கள் நம்புகின்றனர். தற்காலிகமாக கூடுதல் நீரை திறந்து உழவர்களின் நம்பிக்கையை சாத்தியமாக்குவது அரசின் கைகளில் தான் உள்ளது.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் முழு அளவில் குறுவை சாகுபடி நடைபெறுவதை உறுதி செய்ய மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி உழவர்களுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, நுண்ணூட்ட சத்துகள் போன்றவை தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here